Ad Code

25. உயிர்த்த கிறிஸ்துவில் விசுவாசம் | Faith in the Resurrected Christ | யோவான் 20.29 John


தியானம் : 25 / 15. 05. 2022
தலைப்பு : உயிர்த்த கிறிஸ்துவில் விசுவாசம்
திருவசனம் : யோவான் 22.21 அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். 

முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். அனேகருடைய வாழ்வில் விசுவாசம் வெறும் பேச்சாகவே இருக்கின்றது. சூழ்நிலை சற்று மாறினால் விசுவாசமே கேள்விக்குறியாகி விடுகின்றது. ஏன் இயேசுவோடு இருந்த சீடர்கள் கூட, காலியான கல்லறையை பார்த்தும் கூட உயிர்த்த இயேசுவை விசுவாசிக்க தயங்கினர். உயிர்த்த இயேசு அவர்களது விசுவாச வாழ்வில் புதிய அத்தியாயத்தை கற்றுக்கொடுத்தார். காணாமல் நம்பிக்கை வைப்பதே விசுவாசம் என்ற பாடத்தையும் தோமாவின் வாயிலாக கற்றுக் கொடுத்ததை தான் யோவான் 22.21 இல் வாசிக்கிறோம். 

1. விசுவாச அடித்தளம்
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி 11.1). உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவில் நம் நம்பிக்கையின் அடித்தளம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அதில் ஆழமாக நாம் வேரூன்ற வேண்டும். ஆனால் தோமா இந்த விசுவாச அடித்தளத்தைப் போட, அடையாளத்தை எதிர்பார்த்தார். நாம் காண்கிறமோ இல்லையோ நம் அடித்தளம் சரியாக இருந்தால் விசுவாச செயல்களால், நிலைத்து வாழ முடியும். 

2. விசுவாச வீரம்
விசுவாச வீரம் என்பது அதிக விசுவாசம் குறைந்த விசுவாசம் என்றல்ல. எந்த அளவிற்கு விசுவாச வாழ்வில் கடவுளை சார்ந்து வாழ்கிறோம் என்பதைக் குறிக்கும். நாளுக்கு நாள் கடவுளை சார்ந்து வாழ்வதில் நாம் வளர வேண்டும். இயேசுவை நேரடியாக தான் தரிசிக்கவில்லை என்பதற்காக அவர் உயிர்த்தெழவில்லை என்று சொல்லுவது தோமாவின் சந்தேகத்தை குறிக்கிறது. 

3. விசுவாச பகிர்வு
விசுவாசம் நம் வாழ்வில் வெளிப்படும் போது, அது பிறரையும் தாக்கவல்லது. நாம் பயத்தோடு வாழ்வது விசுவாச பகிர்வுக்கு வழிவகுக்காது. நம் விசுவாச பகிர்வு எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும். அப்போது தான் அது அநேகருக்கு நன்மை பயக்கும். தோமா இந்தியாவிற்கு வந்து இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, தம் வாழ்வின் வாயிலாக விசுவாசத்தை பகிர்ந்தார். 

நிறைவுரை
தானியேல் 3 ஆம் அதிகாரத்தில் வரும் மூன்று வாலிபர்களின் விசுவாச அடித்தளம் (3. 12), விசுவாச வீரம் (3.17) விசுவாச பகிர்வு (3.29) நமக்கு ஒரு நல்ல முன்னுதாரணம். விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமின் சந்ததியராகிய நாமும் விசுவாச வீரர்களாக, வீராங்கனைகளாக வாழ் ஆண்டவர் நம்மை வழிநடத்துவராக. இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

1 Comments

Anonymous said…
Nice