1947 ஆம் ஆண்டு இந்திய மக்களுக்கு இரண்டு விதத்தில் மிக முக்கியமான ஆண்டு. ஒன்று ஆகஸ்ட் 15 இல் கிடைத்த இந்திய விடுதலை. மற்றொன்று செப்டம்பர் 27 இல் கிடைத்த தென்னிந்திய திருச்சபை என்ற அமைப்பு. இது ஆண்டவரின் அருளே என்றால் மிகையாகாது.
கிறிஸ்துவின் திருச்சபை ஒருமைப்பாடு விருப்பத்தை நிறைவேற்றுமாறு தென்னிந்திய திருச்சபையை நிறுவி, கடந்த 75 ஆண்டுகளாய் நம்மை வழிநடத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தும் வண்ணம் தென்னிந்தியா எங்கும், ஏன் உலகமெங்கும் ஓராண்டு காலமாக பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், நிகழ்வுகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அவ்வண்ணமே, செராம்பூர் கல்லூரியில் (Serampore College, Hooghly, West Bengal) செராம்பூர் தமிழ்ச் சங்கம் சார்பாக சி.எஸ்.ஐ பவள விழா சிறப்புத் தொழுகை 24.09.2022 அன்று இரவு 9 மணிக்கு நடைபெற்றது. இவ்வழிபாட்டை திரு.சாம் ராஜ் அவர்கள் சி.எஸ்.ஐ வழிபாட்டு முறைமைபடி நடத்தினார்கள்.
செராம்பூர் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் திரு. மில்டன் மா அவர்கள் சி.எஸ்.ஐ வரலாறை எடுத்துரைக்க, மூன்றாமாண்டு தமிழ் மாணவர்கள் பவள விழா கருத்துப் பாடலை பாடி ஆண்டவரைப் போற்றினார்கள். சங்கக் கணக்காளர் திரு. டேவிட் அதிசயராஜ் அவர்கள் திருமறை பகுதியை வாசித்திட, திரு. ஜஸ்டின் சந்தோஷ் அவர்கள் அருளுரையாற்றினார்கள். செராம்பூர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. கோல்டன் ரதிஸ் அவர்கள் செராம்பூர் கல்லூரிக்கும் தென்னிந்திய திருச்சபைககும் உள்ள நெடுங்கால தொடர்பை எடுத்துரைத்து நன்றியரையாற்றினார்கள். முடிவில் அனைருக்கும் சர்க்கரைப் பொங்கல் கொடுக்கப்பட்டது.
இப்பவள விழா ஆண்டில் சிறப்பாக, தமிழ்நாட்டிலுள்ள எட்டு சி.எஸ்.ஐ திருமண்டலங்களிலிருந்தும் வந்துள்ள மாணவ மாணவியர் அனைவரும் இணைந்து இவ்விழாவை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சி.எஸ். ஐ உருவாக்கத்தில் முக்கிய பங்கெடுத்த முதல் இந்தியப் பேராயர் மகாகனம் அசரியா ஐயா அவர்கள் செராம்பூர் கல்லூரியில் இறையியல் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பவள விழா காணும் தென்னிந்திய திருச்சபை இன்னும் மேன்மேலும் வளர்ந்து பெருக செராம்பூர் தமிழ்ச் சங்கம் இறைவேண்டலோடு வாழ்த்துகிறது....
0 Comments