Ad Code

திருவசன தியானம் | 2023 சட்டவாக்கிய பின்னணி & விளக்கம் | வெளி 3.8 • Revelation 3.8

1. திருவசனம் & தலைப்பு
            இறையதிகாரம் (God's Sovereignty)
வெளி 3.8 பின். இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அதை ஒருவனும் பூட்டமாட்டான். 

2. ஆசிரியர் & அவையோர்
இயேசு கிறிஸ்துவின் பன்னிரு அப்போஸ்தலரில் ஒருவரான தூய யோவான் என்போருக்கு வெளிப்படுத்தப்பட்ட விசேஷம். குறிப்பாக வெளி 3. 7 - 13 வரையுள்ள பகுதி ஏழு சபைகளின் ஒன்றான பிலதெல்பியா சபைக்கு எழுதப்பட்ட கடிதமாகும். பத்மூ தீவிலிருந்து தென்கிழக்கு பகுதியில் தீயத்திரா, சர்தை மற்றும் பிலதெல்பியா சபைகள் உள்ளன. அடிக்கடி பிலதெல்பியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாய் இருந்தது. பிலதெல்பியா என்றால் 'சகோதர சிநேகம்' என்று பொருள். கிரேக்க மொழி மற்றும் கலாச்சாரம் பரவுவதற்கு இந்த பட்டணம் இரு வாசலாக இருந்திருக்கிறது. நற்செய்தி எபேசுவிலிருந்து ஆசியா மைனர் முழுவதிலும் பரவியதால் (அப்போ 19.10), பிலதெல்பியாவில் சபை நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது.

3. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கிபி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் எகுதப்பட்டிருக்க அநேக வாய்ப்புண்டு. யூதர்கள் மற்றும் ரோமப் பேரரசால் கிறிஸ்தவர்கள் உபத்திரவங்களை சந்தித்த காலக்கட்டம் ஆகும். குறிப்பாக டொமினிசீயன் பேரரசன் கால (AD 90 - 95) உபத்திரவத்தின் போது எழுதியிருக்க அனேக வாய்ப்புண்டு.

4. திருவசன விளக்கவுரை 
யூதர்கள் மற்றும் ரோமர்கள் வாயிலாக ஏற்பட்ட கொடூரமான உபத்திரவத்தால் நற்செய்தி அறிவிக்கும் வாசல்கள் அடைக்கப்பட்ட நிலைமையில் பிலதெல்பியா சபை இருந்தது. எந்தவொரு குறைவும் சொல்லப்படாத சபை இது மட்டுமே. இத்தகைய சூழலில் தான் கடவுள் இந்த வாக்கை அந்த சபைக்கு கொடுக்கிறார். இந்த வாக்கை அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு, அவர்களின் கிரியைகளை அறிந்த கடவுள் இரண்டு நற்கிரியைகளை 3.8 இன் முன்பகுதியில் சொல்லுகின்றார். ஒன்று துன்ப காலத்திலும், கொஞ்ச பெலன் இருந்தும் கடவுளை மறுதலியாமல் கொண்டிருந்த இறை நம்பிக்கை. இரண்டாவது, இறைவார்த்தைகளைக் கைக்கொள்ளும் வாழ்க்கை. வெளி 3.8 இன் பின்பகுதி கடவுளின் அதிகாரத்தை (God's Sovereignty / Authority) வெளிப்படுத்துகின்றது. கடவுள் ஒருவர் மாத்திரமே ஒருவராலும் பூட்டமுடியாத திறந்த வாசலை (Unlockable Open Door) ஏற்படுத்தக்கூடியவர். இது இறையதிகாரத்தை குறிக்கிறது. நமக்கு வாய்ப்புகளை (Open Opportunity வெளி 3.9) திறந்து தரக் கூடிய அதிகாரம் மற்றும் யாரும் பூட்ட முடியாதபடி தப்புவிக்கும் அதிகாரம் (வெளி 3.10) கடவுளுக்கு மாத்திரமே உண்டு. மேலும் முடிவுபரியந்தம் நிலை நிற்கும் போது, ஆலயத்தின் தூணாக்குகிறார் (நிரந்தர தன்மை) மற்றும் இறை நாமம், இறை நகர நாமம், புது நாமம் என்னும் மூன்று நாமங்களை (உரிமைப்பேறு) எழுதுகிறார்.

5. இறையியல் & வாழ்வியல் 
மிகச் சிறிய சபையாக இருந்தாலும் உலக அதிகாரங்களுக்கு தவறானவிதத்தில் கீழ்படியாமல், கடவுளின் அதிகாரத்தில் நம்பிக்கைக் கொண்டு, கீழ்படிந்த பிலதெல்பியா சபை நமக்கு ஒரு நல்ல முன்னுதாரணம். சபைகளில் நேர்மையான முறையில் காரியங்களை செய்தல், தவறை தட்டிக் கேட்டல், மற்றும் நற்செய்தி அறிவித்தல் போன்ற நிலைகளில் வரும் துன்பங்களை சகித்துக் கொண்டு வாழும் போது, கடவுளின் அதிகாரம் நம்மீது செயல்படும். அதை யாராலும் தடுக்க முடியாது. கடவுள் தரும் வாய்ப்புகளை நாம் சரியாக பயன்படுத்தும் போது, அவர் தொடர்ந்து நம்மை நடத்துவார். 

Acknowledgement
Mr. Rebin Austin & Mr. Golden Rathis
Seminary Students 

Post a Comment

0 Comments