Ad Code

பர்திமேயுவுக்குப் பார்வை: தடையகற்றி ஒளியேற்றும் இறைமைந்தர் • Jesus and Blind • Miracle of Jesus

1. தலைப்பு
பர்திமேயுவுக்குப் பார்வை: தடையகற்றி ஒளியேற்றும் இறைமைந்தர் 

2. திருமறை பகுதி
மத்தேயு 20:29-34 
மாற்கு 10:46-52 
லூக்கா 18:35-43

3. இடம் & பின்னணி
எரிகோவிலிருந்து இயேசு பயணம் செய்த போது இந்த அற்புதம் நடைபெற்றது. 

4. விளக்கவுரை
அவனுடைய தகப்பன் திமேயு. பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பர்திமேயுவுக்கு இந்த ஆரவார சத்தம் கேட்டது. பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்து இயேசு போகிறார் என்பதை அறிந்து கொண்டான். உடனே அந்தத் தருணத்தைத் தான் இழந்து விடக்கூடாது என்பதை உணர்ந்தவனாய், தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டான். குருடன் போடுகிற சத்தத்தைக் கேட்டு இயேசுவோடு இருந்தவர்கள், அவன் சத்தம் போடக்கூடாது என்று அதட்டினார்கள். ஏனெனில் இயேசுவோடு சென்றவர்களில் சிலர் இரக்கம் இல்லாதவர்களாகவும், உதவி செய்யப் பிரியமில்லாதவர்களாகவும் இருந்தனர். 

ஆனால் அவன் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இயேசு தன்னை விட்டுத் தூரமாய்ப் போய் விடக்கூடாது என்றும், அப்படி இயேசு போய்விட்டால் தனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால் முன்னைவிட அதிகமான சத்தத்துடன்” தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டான். இயேசு அந்தச் சத்தத்தைக் கேட்டு அப்படியே நின்றார்; அசையாமல் நின்றார் என்று சொல்லலாம்.இயேசு தன்னை அழைக்கிறார் என்றதும், பர்த்திமேயு குதித்தெழுந்து, இயேசுவிடம் செல்கிறார். மாற்கு நற்செய்தியாளர் மிக அழகாக இதை பதிவுசெய்கிறார். அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார் (மாற்கு 10:50). 

இயேசு பர்திமேயுவிடம் “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அவன் “ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும்” என்றான். தன்னுடைய இருளை வெளிச்சம் ஆக்கவேண்டும் என்பதுதான் அவனுடைய வேண்டுகோள். இயேசு அவனிடம் உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று கூறி அவனைப் போகச் சொன்னார். அந்த நிமிடமே அந்தக் குருடன் பார்வை பெற்றான். 

5. கருத்துரை
இயேசுவுக்கும் அங்கிருந்த மக்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது . இயேசு தடைகளை தாண்டி பர்திமேயு என்ற மனிதனுக்கு ஒளியேற்றி வாழ்வு கொடுத்தார். அந்தக் குருடனுக்கு இயேசுவின் மூலம் கண்ணொளி கிடைக்கும் நம்பிக்கை, மற்றவர்கள் என்ன கூறினாலும் விடாப்பிடியாக இருக்கும் பண்பு, தடைகள் எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு இயேசுவிடம் வரும் முழுமையான நம்பிக்கை, தான் பார்வையடைய வேண்டும் என்ற ஆவல், எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவைப் பின்பற்றிச்செல்லும் பண்பு அவனிடம் இருந்தன. பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் நிகழ்வு, நம் அன்றாட வாழ்வில் நிறைவைக்காண, நம்மைச்சுற்றி நிகழும் செயல்பாடுகளில் அக்கறை கொண்டவர்களாக இருந்து, எப்பொழுதும் இறையுதவி நாடி, நமது விருப்பங்களில் மகிழ்ச்சியை கண்டுகொள்ளவும், இறைவனின் குரல் கேட்டு அதன்படி இறைவழி நடக்கவும் அழைப்புவிடுக்கிறது..
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments