1. தலைப்பு
பெதஸ்தா குளத்தண்டையில் அற்புதம்: ஏக்கத்தை நிறைவேற்றும் இறைமைந்தர்
2. திருமறை பகுதி
யோவான் 5:1-15
3. இடம் & பின்னணி
யோவான் நற்செய்தியில் மட்டுமே இந்த அற்புதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூதர்களின் பண்டிகை ஒன்றின் போது, இயேசு எருசலேமில் ஆட்டு நுழைவாசலுக்கு பக்கத்தில் உள்ள எபிரெய மொழியில் பெத்சதா என்று அழைக்கப்பட்ட ஒரு குளததின் அருகில் இந்த அற்புதத்தை செய்தார். எருசலேம் என்பது சமாதானத்தின் நகரம். சமாதான நகரில் இரக்கத்தின் வீடு (பெதஸ்தா). அந்தக் குளத்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன. 3ஏராளமான நோயாளிகளும் பார்வை இல்லாதவர்களும் கால் ஊனமானவர்களும் கை கால் சூம்பியவர்களும் அந்த மண்டபங்களில் இருப்பது வழக்கம்.
4. விளக்கவுரை
பெதஸ்தா குளத்தின் அருகில், 38 வருஷங்களாக வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒருவர் படுத்திருப்பதை இயேசு பார்த்து, “நீங்கள் குணமாக விரும்புகிறீர்களா?”c என்று கேட்டார். அதற்கு அந்த நோயாளி, “ஐயா, குளத்து நீர் கலங்கும்போது என்னை அதில் இறக்கிவிட யாரும் இல்லை; நான் இறங்குவதற்குள் வேறு யாராவது எனக்கு முன்னால் இறங்கிவிடுகிறார்கள்” என்று தன் இயலாமையை சொன்னார். அப்போது இயேசு, “எழுந்து, உங்கள் படுக்கையை எடுத்துக் கொண்டு நடங்கள்” என்று சொல்ல, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
அந்த நாள் ஓய்வுநாளாக இருந்ததால் யூதர்கள், “இது ஓய்வுநாள், நீ படுக்கையைத் தூக்கிக்கொண்டு போவது சரியல்ல என்று குணமடைந்த மனிதரிடம் வாக்குவாதம் செய்ய அவரோ, “என்னைக்குணமாக்கியவர்தான் ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நடங்கள்’ என்று என்னிடம் சொன்னார்” என்றார். அதற்கு அவர்கள், “‘இதை எடுத்துக்கொண்டு நடங்கள்’ என்று உனக்குச் சொன்ன அந்த மனுஷன் யார்?” என்று கேட்க, குணமடைந்த மனிதருக்கோ அவர் யாரென்று தெரியவில்லை. ஏனென்றால், இயேசு கூட்டத்தோடு கூட்டமாகப் போயிருந்தார். பின்பு, இயேசு அவரை ஆலயத்தில் பார்த்து, “இதோ, நீங்கள் குணமாகிவிட்டீர்கள். முன்பு இருந்ததைவிட மோசமான எதுவும் உங்களுக்கு ஏற்படாமல் இருக்க இனிமேல் பாவம் செய்யாதீர்கள்” என்று சொன்னார். பின்னர் தன்னைக் குணமாக்கியது இயேசுதான் என்று யூதர்களிடம் அந்த மனிதர் சொல்ல இயேசு ஓய்வுநாளில் இவற்றைச் செய்ததால் யூதர்கள் அவரை எதிர்த்தார்கள்.
5. கருத்துரை
இரக்கத்தின் வீட்டில் இரங்குகிற இறைவன் கிரியை செய்தார். ஆனால் இரங்குகிற மனிதர்கள் குறைவாய் இருந்தனர். மேலும், தண்ணீரினால் மட்டுமல்ல, வார்த்தைகளினாலும் சுகம் உண்டு என்பதை வெளிப்படுத்த இக்குளத்தண்டை இயேசு செய்த செயல் சாட்சியாகும். நம் இயலாமையை கடவுளின் தெரிவித்து அவரை நம்பி நாம் வாழும் போது, கடவுள் நம் வாழ்வில் அற்புதங்களை செய்வார்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments