படிப்படியாக பார்வை பெற்ற அற்புதம்: இறைமைந்தரின் தனித்துவம்
2. திருமறை பகுதி
மாற்கு 8: 22 - 26
3. இடம் & பின்னணி
பெத்சாய்தா என்ற ஊரில் பார்வையற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமையில், பார்வையற்ற அம்மனிதர் இயேசுவிடம் கொண்டுவரப்பட்டதும், அங்கு நிகழ்ந்ததை மாற்கு நற்செய்தியில் மட்டும் நாம் வாசிக்கிறோம்
4. விளக்கவுரை
இயேசு பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து, கைகளை அவர்மேல் வைத்து, "ஏதாவது பார்க்கிறீரா?" என்று கேட்டார். மனிதர்களை, மரங்களைப்போல் கண்ட அம்மனிதருக்கு, இயேசு, முழுமையான பார்வை வழங்கியதை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறியுள்ளார்: இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று, அனைத்தையும் தெளிவாகக் கண்டார் (மாற்கு 8:25).
5. கருத்துரை
நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ள 20க்கும் மேற்பட்ட குணமளிக்கும் புதுமைகளில், மூன்று புதுமைகளில், இயேசு, தன் உமிழ்நீரைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு, மாற்கு நற்செய்தியிலும், ஒன்று, யோவான் நற்செய்தியிலும் இடம்பெற்றுள்ளன. மேலும் மாற்கு நற்செய்தி 8ம் அதிகாரத்தில் வரும் இந்த புதுமையில், மற்றொரு தனித்துவமும் உள்ளது. இயேசு ஆற்றிய குணமளிக்கும் புதுமைகள் அனைத்திலும், அவரது தொடுதலால், அல்லது, சொல்லால், அப்புதுமைகள் உடனடியாக நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஒரு புதுமையில் மட்டும், பார்வையற்றவர், உடனடியாக, முழுமையாகக் குணமாகாமல், படிப்படியாகக் குணமடைந்தார் என்று கூறப்பட்டுள்ளது. நம் வாழ்விலும் படிப்படியாக முழுமை யடைய வாஞ்சிப்போம். நம் அகம், புறம் இரண்டிலும், சரியான, முழுமையானப் பார்வை பெறுவதற்கு, இயேசு நம்மைத் தொடும்படி வேண்டிக்கொள்வோம். குறிப்பாக, இந்த தொற்றுக்கிருமியின் பிடியிலிருந்து விலகி, மறுபடியும் நம் வாழ்வைத் தொடரும் வேளையில், அடுத்தவரைப் பற்றி, இவ்வுலகைப்பற்றி, சரியான, தெளிவான பார்வையை நாம் பெறுவதற்கு வேண்டிக்கொள்வோம்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments