Ad Code

பிசாசைத் துரத்துதல்: இறையரசின் அதிகாரமிக்க இறைமைந்தர் • Miracles of Jesus Christ

1. தலைப்பு
பிசாசைத் துரத்துதல்: இறையரசின் அதிகாரமிக்க இறைமைந்தர்

2. திருமறை பகுதி
மத்தேயு 12:22-23 
மாற்கு 3: 20 - 30
லூக்கா 11:14-23

3. இடம் & பின்னணி
எந்த இடத்தில் இந்த அற்புதம் செய்யப்பட்டது என்பது பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இயேசு தனது பிரசங்கத்தை முடித்தப் பின்பு தான் இந்த அற்புதத்தை செய்தார் என்பது மட்டும் தெளிவு. 

4. விளக்கவுரை
இந்த அற்புதம் நடைபெற்ற விதமும் முழுமையாக எந்த நற்செய்தியிலும் பதிவு செய்யப்படவில்லை. பேய் பிடித்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; ஊமையாக்கும் பேயை ஒரு மனிதனிடமிருந்து இயேசு விரட்டினார். அந்தப் பேய் வெளியேறியதும் ஊமையாக இருந்த அந்த மனிதன் பேச ஆரம்பித்தான். அதைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

5. கருத்துரை
ஒத்தமைவு நற்செய்திகளின்படி, இயேசு இந்த அற்புதத்தை செய்த பின்பு, நடைபெற்ற விவாதம் தான் முக்கியப்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. யூத பேயோட்டுபவர்கள் தங்கள் செயல்முறையின் ஒரு பகுதியாக பேயின் பெயரைக் கேட்பார்கள் என்பதால், மேசியா மட்டுமே ஊமை ஆவியைப் பேயோட்ட முடியும் என்ற பாரம்பரிய நம்பிக்கை இருந்தது. ஆகவே, மக்கள் ஆச்சரியப்பட்டு, "இவர் தாவீதின் குமாரனாக இருக்க முடியுமா ?" என்று எண்ணிட, எருசலேமிலிருந்து வந்த வேத அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களோ, இதைக் கேட்டபோது, ​​"பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலால்தான் இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்" என்றார்கள். ஆனால், இயேசுவோ உவமைகள் வாயிலாக சரியான பதிலடி கொடுத்தார். இயேசு: "ஒரு ராஜ்யத்துக்குள் பிரிவினைகள் இருந்தால், அந்த ராஜ்யம் நிலைக்காது. ஒரு வீட்டுக்குள் பிரிவினைகள் இருந்தால் அந்த வீடு நிலைத்திருக்க முடியாது. அதேபோல், சாத்தானும் தனக்கு விரோதமாகவே பிரிவினைகள் உண்டாக்கினால், அவன் நிலைத்திருக்க முடியாது, அழிந்துதான் போவான். சாத்தான் எப்படிச் சாத்தானை விரட்ட முடியும்? ஒரு பலசாலியின் வீட்டுக்குள் நுழைகிற எவனும், முதலில் அவனைக் கட்டிப்போடாவிட்டால் அவனுடைய வீட்டிலுள்ள பொருள்களைக் கொள்ளையடிக்க முடியாது; அவனைக் கட்டிப்போட்ட பின்புதான் வீட்டைக் கொள்ளையடிக்க முடியும்" என்று சொல்லி புரிய வைத்தார். இறைமகன் என்பதையும், தமது வாயிலாக தான் இறையரசு நிறுவடப்படுவதாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார். அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments