இறைமைந்தர் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரால் அன்பின் வாழ்த்துகள். எல்லாம் வல்ல கடவுள் அனைத்தின் மேலும் அதிகாரம் உடையவர் என்பது உண்மை. குறிப்பாக, இறையதிகாரம் நம்மை உயிர்ப்பிக்கக் கூடியது. கொலோசெயர் 2: 13 -15 வசனங்களில் இயேசு கிறிஸ்து சிலுவையில் எவ்விதம் அதிகாரமுடையவராய் வெற்றி சிறந்து மனுக்குலத்தை உயிர்ப்பித்தார் என்று பவுல் எழுதியுள்ளார்.
1. மரணத்தினாலே உயிர்ப்பித்த இறையதிகாரம்
கொலோசெயர் 2:13 - 15 வரை வாசித்துப் பார்க்கும் போது, இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடு மற்றும் மரணம் குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஆம், சிலுவை மரணம் கிறிஸ்துவிற்கு முடிவல்ல, மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். கிறிஸ்துவின் உயிர்ப்பே, நாமும் உயிர்ப்பிக்கபடுவோம் என்பதற்கு முன்னுதாரணம். இயேசுவின் மரணத்தினாலே நம்மை பாவ மரணத்தில் இருந்து உயிர்ப்பித்த கடவுளின் அதிகாரம், மறுமையிலும் நம்மை உயிர்ப்பிக்கக்கூடியது என்பது நிச்சயம்.
2. மன்னித்து உயிர்ப்பித்த இறையதிகாரம்
கொலோசெயர் 2:13 இல் வாசிக்கிறோம்: "உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார்." பாவத்தில் மரித்துப் போயிருந்த நம்மை மன்னித்து உயிர்ப்பித்தது இயேசுகிறிஸ்துவின் இறையதிகாரமே.
3. மறுவாழ்வளித்து உயிர்ப்பித்த இறையதிகாரம்
கொலோசெயர் 2: 14 - 15 இல் வாசிக்கிறோம்: "நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்." நம்மை உயிர்ப்பித்த கடவுள் நமக்கு வெற்றியுள்ள மறுவாழ்வும் கொடுக்க அதிகாரம் படைத்தவர்.
இறையாசி நம்மனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
0 Comments