1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறு
தேதி: 9/4/2023
வண்ணம்: வெள்ளை
திருமறைப் பாடங்கள்:
1 இராஜாக்கள் 17: 17 - 24
1 கொரிந்தியர் 15:42 - 58
லூக்கா 24: 1 - 12
சங்கீதம்: 118
2. திருவசனம் & தலைப்பு
உயிர்த்த இயேசுவோடு வாழ்வைக் கொண்டாடுதல் (1 கொரிந்தியர் 15:57)
(பவர்) நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
(திருவிலியம்) ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!
3. ஆசிரியர் & அவையோர்
"கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது" என்ற அறிமுக வசனங்களில் (1 கொரி 1: 1 - 3) இருந்து இந்த நிருபத்தின் ஆசிரியர் மற்றும் அவையோர் யார் என அறிந்து கொள்ளலாம். பவுல் எபேசு பட்டணத்தில் இருந்து இந்த நிருபத்தை எழுதினார்.
பவுல் காலத்தில் கொரிந்து நகரில் 700,000 மக்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு. அவர்களில் மூன்றில் இரு பங்கினர் அடிமை மக்கள்.பவுல் காலத்தில் கொரிந்து ஒரு பெரிய வணிக நகரமாகவும் உரோமையரின் குடியேற்ற நகரமாகவும் திகழ்ந்தது. இங்குப் பல தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்ததால் வழிபாடு சார்ந்த வாணிகமும் தழைத்தோங்கியது. கொரிந்தியரைப் போல இருத்தல் என்னும் கூற்று ஒழுக்கக் கேடாய் வாழ்தலைக் குறித்தது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இக்கடிதத்தை தூய பவுல் கி.பி. 54-55ஆம் ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. பவுல் கொரிந்திய சபையில் காணப்பட்ட பல குழப்பங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இக்கடிதத்தை எழுதினார். அதில் ஒன்று தான் உயிர்த்தெழுதல் பற்றிய குழப்பம்.
5. திருவசன விளக்கவுரை
1 கொரிந்தியர் 15 ஆம் அதிகாரத்தில், பவுல் உயிர் பெற்றெழுதலைப் பற்றிய கொரிந்தியரின் தவறான கண்ணோட்டத்தை களையும் வண்ணம் எழுதியுள்ளர். இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் உண்மையை விளக்கி, உயிர்பெற்றெழுந்த உடல் எவ்வாறிருக்கும் என எடுத்துரைக்கிறார். முதல் பதினொரு வசனங்களில், புதிய ஏற்பாட்டில் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னான தரிசனங்கள் குறித்து உள்ளது. மீதமுள்ள அதிகாரங்களில் கிறிஸ்தவத்திற்கான உயிர்த்தெழுதலின் முதன்மையை வலியுறுத்துகிறது .
கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, திருப்பணி, பாடு, மரணம் மற்றும் உயிர்ப்பு ஆகியன கிறிஸ்தவ நம்பிக்கையின் சாரம்சங்கள். குறிப்பாக பவுல் இந்த அதிகாரத்தில் கிறிஸ்துவின் உயிர்ப்பிக்கும் கிறிஸ்தவ கோட்பாட்டுகளுக்கும் இடையேயான தொடர்பை விளக்குகிறார்.
1 கொரிந்தியர் 15.57 இல் கிறிஸ்துவின் வழியாகவே வெற்றியின் வாழ்வு நமக்கு கிடைத்துள்ளதை பவுல் உறுதிப்படுத்துகின்றார். நித்திய வாழ்வு என்பது நமக்கு கிறிஸ்துவின் வாயிலாக கிடைக்கும் வெற்றி என்று புரிந்து கொள்ள முடியும்.
6. இறையியல் & வாழ்வியல்
திருத்தூதர் பவுலின் பெரிய நிருபங்களில் ஒன்றான 1 கொரிந்தியர் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமுடைய அறிவுரைகளை வழங்குகிறது. குறிப்பாக, இன்றைக்கு சில மக்களிடையே, குறிப்பாக அறிவியலை முழுமையாக நம்பும் பலரிடையே உயிர்ப்பின் வாழ்வை குறித்த நம்பிக்கை இல்லை. மரணத்திற்கு பின் ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர். ஆனால், நாம் கொண்டாடும் கிறிஸ்துவின் உயிர்ப்பு பண்டிகை சவால் விடுக்கிறது. வெறுமையான கல்லறை இன்றும் மிகப் பெரிய சாட்சி. உயிர்த்த இயேசுவோடு நாமும் நித்திய நித்திய காலமாக வாழப் போகிறோம் என்பதே கடவுள் நமக்கு அருளும் வாக்குறுதி.கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொள்ளும் நாம், நம் எதிர்கால உயிர்ப்பின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக அதற்கு பாத்திரராக வாழ வேண்டும்.
1 கொரிந்தியர் 15:19 -20 தெளிவாக சொல்லுகிறது: "கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம். ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது."
7. அருளுரை குறிப்புகள்
உயிர்த்த இயேசுவோடு வாழ்வைக் கொண்டாடுதல்
1. கிறிஸ்துவின் உயிர்ப்பு முன்மாதிரியான அடையாளம்
(1 கொரிந்தியர் 15:3–7)
2. கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்பிக்கைக்கு அடையாளம்
(1 கொரிந்தியர் 15:17)
3. கிறிஸ்துவின் உயிர்ப்பு நித்திய வாழ்வுக்கு அடையாளம்
(1 கொரிந்தியர் 15:55-57)
🌠🌠🌠
...... எழுதியவர்.....
யே. கோல்டன் ரதிஸ்
செராம்பூர் கல்லூரி.
0 Comments