Ad Code

பலருக்கும் நலம்: இறைவாக்கை நிறைவேற்றிய இறைமைந்தர் • Jesus Healed Many People

1. தலைப்பு
பலருக்கும் நலம்: இறைவாக்கை நிறைவேற்றிய இறைமைந்தர் 

2. திருமறை பகுதி
மத்தேயு 8:16-17 
மாற்கு 1:32-34 
லூக்கா 4:40-41

3. இடம் & பின்னணி
இயேசுவின் தொடக்க கால ஊழியக்காலக் கட்டத்தில் இயேசு, ஊரிலிருந்த பலருக்கு குணமளித்த சம்பவம் நடைபெற்றது. பேதுரு மாமியின் வீட்டில் மாலை வேளையில் நடைபெற்ற சம்பவம் இது. 

4. விளக்கவுரை
சாயங்கால நேரமானபோது, பேய் பிடித்த நிறைய பேரை மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவர் ஒரு வார்த்தை சொன்னதும், அந்தப் பேய்கள் அவர்களைவிட்டு ஓடிவிட்டன என்று மத்தேயு நற்செய்தயாளர் எழுதியுள்ளார். மேலும் இயேசு எல்லா நோயாளிகளையும் தொட்டு குணமாக்கினார் என்று மாற்கு நற்செய்தியாளர் சொல்லுகிறார். லூக்கா நற்செய்தியாளரோ, பிசாசின் அசுத்த ஆவிகள் பலரிடமிருந்து வெளியேறின. அவை “நீர் தேவனுடைய குமாரன்” எனக் கூக்குரலிட்டன. ஆனால் அவை பேசாமல் இருக்கும்படியாக அந்த ஆவிகளை இயேசு வன்மையாகக் கண்டித்தார். இயேசுவே கிறிஸ்து என்று அவை அறிந்திருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

தொழுகைக்கூடத்தில் நடைபெற்ற அற்புதமும், பேதுருவின் மாமியார் குணமான அற்புதமும் ஓய்வுநாள் விதிகளை மீறி நிகழ்ந்த அற்புதங்கள். ஆனால், மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில், ஓய்வுநாள் முடிவுற்றதை உணர்ந்து, இவர்கள், நோயுற்றோரை இயேசுவிடம் அழைத்துச் சென்றனர். இதை ஓய்வுநாள் முடிந்தபின் நிகழ்ந்தது என்பதை ஆழமாகச் சிந்திக்கும்போது, இதில் பங்கேற்ற மக்களின் வியாகுல நிலைமையையும், சமூக நிலையயும் புரிந்துகொள்ள முடிகிறது. கொண்டுவருதல்' என்ற இச்சொல்லுக்கு, 'சுமந்து வருதல்' என்ற மற்றொரு பொருளும் உண்டு. நோயுற்றதாலும், பேய் பிடித்ததாலும், உடலால் தளர்ந்து, உள்ளத்தால் இறைவனை விட்டு விலகி வாழ்ந்த தங்கள் உறவுகளை, நண்பர்களை, இயேசுவிடம் 'சுமந்துவரும்' பணியை இம்மக்கள் ஆற்றினர்.

5. கருத்துரை
“அவர் நம்முடைய வியாதிகளைத் தாங்கிக்கொண்டு, நம் நோய்களைச் சுமந்தார்” என்று ஏசாயா தீர்க்கதரிசி (ஏசாயா 53.9) மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது என்று மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். மத்தேயு பழைய ஏற்பாட்டு வசனங்களை மேற்கோள் காட்டி எழுதியதில் மற்ற நற்செய்தி ஆசரியர்களைக் காட்டிலும் சிறந்தவர். புனித ரெமிஜியஸ் இந்த வேத பகுதிக் குறித்து கூறும் போது, "கிறிஸ்து, மனித இரட்சிப்பின் ஆசிரியர், அனைத்து நன்மைகளின் ஊற்று மற்றும் ஆதாரம், பரலோக மருந்துகளை அளித்தார், அவர் ஆவிகளை ஒரு வார்த்தையால் வெளியேற்றினார், நோய்வாய்ப்பட்ட அனைவரையும் குணப்படுத்தினார். பேய் மற்றும் நோய்களை அவர் அனுப்பினார். இந்த அடையாளங்கள் மற்றும் வல்லமையான செயல்கள் மூலம், அவர் மனித இனத்தின் இரட்சிப்புக்காக வந்ததாகக் காட்டுவார் என்று ஒரு வார்த்தையுடன் கூறினார்."
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments