Ad Code

தூயர் பர்னபா திருநாள் • ஜூன் 11 June • The Feast of St. Barnabas

பிறப்பு : சைப்பிரஸ்
இறப்பு : 61 கி.பி, சைப்பிரஸ்
திருநாள்: ஜூன் 11
 
யேசேப்பு, என்ற இயற்பெயர் கொண்ட பர்னபா (கிரேக்கம்: Βαρναβᾶς) என்பவர் ஆதி கிறித்தவரும் இயேசுவின் சீடர்களுள் ஒருவரும் ஆவார். யோசே என்பதே அவருடைய உண்மையான பெயர், ஆனால், அவருடைய பண்புக்கு மிகவும் பொருத்தமாயிருந்த ஒரு சிறப்புப் பெயரான பர்னபா என்பதை அப்போஸ்தலர்கள் அவருக்கு சூட்டினார்கள்; இதன் அர்த்தம் “ஆறுதலின் மகன்” என்பதாகும். திருத்தூதர் பணிகள் 4:36இன் படி இவர் சைப்பிரஸில் வாழ்ந்த லேவியரான யூதராவார். திருத்தூதர் பணிகள் 14:14 இவரையும் ஒரு திருத்தூதர் எனக் குறிக்கின்றது. கொலோசையர் 4இன் அடிப்படையில் பர்னபா, மாற்குவின் உறவினர் என நம்பப்படுகின்றது. சில மரபுகளின் படி இயேசுவின் நேரடி எழுபது சீடர்களில் ஒருவராகக்கருதப்படும் அரிஸ்தோபுலுஸ் பர்னபாவின் சகோதரராக நம்பப்படுகின்றது.

பொதுவுடமை என்ற புதிய ஏற்பாட்டு சபை முறைமையின்படி, பர்னபா தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார். (தி.ப.4:36-37). மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மனந்திரும்பிய பவுல் யெருசலேமுக்கு வருகின்றார். சீடர்கள் அவர் மனந்திரும்பியவர் என ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இவ்வேளையில்தான் பர்னபா அவருக்கு துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார்.(தி.ப.9:27)

பின்னர் அந்தியோக் நகரில் திருத்தூதர் பணியின் மூலம் பலரும் மனந்திரும்பினர் என்பதனால் யெருசலேம் நகரில் இருந்து இந்தப் புதுக்கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க ஒருவரை அனுப்பத் தீர்மானித்தனர். நல்லவர் தூயஆவியால் நிரம்பப் பெற்றவர். ஆழமான விசுவாசம் கொண்டவர் பர்னபா என்று சொல்லி அவரை அனுப்பினர். அவர் அங்கு போய் நேரில் கண்டதும் ஒரே இன்பமும் மகிழ்ச்சியும் கொண்டவராய் பவுலின் ஒத்துழைப்பைப் பெற தார்சிஸ் நகர் சென்று அவரை அழைத்து வந்தார்.

யூதாவிலும் எருசலேம் எங்கும் கடும் பஞ்சம் உண்டாகவே, அந்தியோக்கியத் திருச்சபையிடம் பொருள் உதவி பெற்று பர்னபா சவுல் மூலம் யெருசலேமுக்கு அனுப்பி வைத்தார். லிஸ்திராவில் ஊனமுள்ள ஒருவரை இவர் இயேசுவின் பெயரால் புதுமையாகக் காலூன்றி நடக்க வைத்தார். இதைக் கண்டு வியப்படைந்த கூட்டத்தினர் இவர்கள் இருவரையும் தெய்வங்களாக நினைத்துப் பலியிட முயன்றனர். இது நடைபெற்று முடிந்தவுடன் யூதர்கள் அதே மனிதர்களை பர்னபா, பவுலுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டிவிடவே அவர்கள் கல்லால் எறியப்பட்டார்கள். (தி.பா.14:18-20)

பின்னர் நற்செய்தியாளர் மாற்கை அழைத்துக் கொண்டு பர்னபாவும் பவுலும் சைப்ரஸ் சென்றார்கள். அங்கு போதித்த பின் பம்பிலியா நோக்கிப் புறப்படும் போது மாற்கு அவர்களுடன் சேர்ந்து போகவில்லை. பவுல் இதனால் வருத்தமுற்றார். இதன் பின்னர் அந்தியோக்கியாவில் விருத்தசேதனம் பற்றிக் கடுமையான கருத்து மோதல் எழுந்தது. இதைத் தீர்த்து வைக்க யெருசலேம் முதல் பொதுச் சங்கம் கூடியது. பர்னபா கூட யூதர்கள் விரித்த வலையில் விழுந்துவிட்டாரே என்று வருத்தப்பட்டார் பவுல். இதனையடுத்து இன்னொரு கருத்து மோதல் பர்னபாவுக்கும் பவுலுக்குமிடையே எழுந்தது. ஏற்கனவே திருச்சபை தொடங்கப்பட்ட இடங்களுக்கு சென்று அவ்விருவரும் பார்வையிட திட்டம் தீட்டிய பொழுது மாற்கையும் அழைத்துச் செல்வோம் என்று பர்னபா சொல்ல பவுல் இசையவில்லை. விளைவு பவுல் தனியே சென்று விட்டார். பர்னபா மாற்குடன் சைப்பிரஸ் சென்றார். இங்கிருந்து பணியாற்றிய பர்னபாவின் முடிவு என்னவென்று திட்டவட்டமாக கூற இயலாது. கி.பி.61ல் உரோமையில் பவுல் சிறைக் கைதியாக இருக்கும் போது மாற்கை தம்மிடம் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார். அவ்வேளையில் பர்னபா கல்லால் எறிந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவருடைய திருப்பண்டங்கள் சைப்ரஸில் சலாமிசுக்கு அருகில் கிடைத்தன என்றும் அந்தக் கல்லறையில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட மத்தேயுவின் நற்செய்தி கிடைத்ததாகவும் நம்பப்படுகிறது.

 “எங்கெல்லாம் ஜனங்களைக் கண்டாரோ, எங்கெல்லாம் ஊக்குவிப்பு தேவைப்பட்ட சூழ்நிலை இருந்ததோ அங்கெல்லாம் பர்னபா தன்னால் இயன்ற எல்லாவிதத்திலும் ஊக்குவிப்பு அளித்தார்” என்று திருமறை அறிஞர் எஃப். எஃப். புரூஸ் குறிப்பிடுகிறார்.

Post a Comment

0 Comments