இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரால் அன்பின் வாழ்த்துகள். இந்த ஆண்டு ஒவ்வொரு மாதப்பிறப்பிலும் "இறையதிகாரம்" (Divine Sovereignty) என்ற தலையங்கத்தின் கீழ் தியானிக்கிறோம். அதில் இந்த மாதம், பயம் நீக்கும் இறையதிகாரம் என்ற கருப்பொருளை வைத்து சிந்திப்போம். அதற்கு ஆதாரமாக, உபாகமம் 7:21 "அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்."
உபாகமம் 4.44 - 26 ஆம் அதிகாரம் முடிய உள்ள சொற்பொழிவு மோசே கானானின் எல்லை அருகே இஸ்ரவேல் மக்களுக்கு ஆற்றிய எட்டு உரைகளில் இரண்டாவது உரை. கடவுள் கற்றுக் கொடுத்த பிரமாணங்களை மீண்டும் மக்களுக்கு ஞாபகப்படுத்தும் பகுதி தான் இது. கானானில் இருந்த திரளான மக்கள் இனங்களை பார்த்த இஸ்ரவேலர் பயந்து போகக் கூடாது என்று சொல்லி பேசிய வார்த்தை தான் உபா 7.17 - 26. இந்தப் பகுதியில் கடவுள் கற்றுக் கொடுக்கும் பயம் நீங்கி வாழ்வதற்கான 3 வழிமுறைகள் என்னென்ன என தியானிப்போம்.
1. நினைத்துப் பாருங்கள்
இக்கட்டான சூழலில் பயம் நம்மை ஆட்கொள்ளும் போது, கடவுள் நம்மை இதுவரை எப்படி அற்புதமான வழியில் தம் பலத்த கரத்தினால் நடத்தினார் என்று நினைத்து பார்க்க வேண்டும். உபாகமம் 7:19 "உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும்; அடையாளங்களையும் அற்புதங்களையும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு, நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜாதிகளுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார்."
2. நிதானமாக செயல்படுங்கள்
பயம் நம் மனதை அழுத்தும் போது, நாம் பதறி போய், நம் சுய முயற்சியில் மேற்கொள்ள தீவிரிக்க கூடாது. மாறாக நிதானமாக கடவுள் வழிகாட்டும் வண்ணம் நிதானமாக செயல்பட வேண்டும். நிதானம் இல்லாமல் செயல்பட்டால், ஒரு பயத்தை போக்க பல பயம் நம்மை மேற்கொள்ள நாமே வழி போட்டு விடுவோம். உபாகமம் 7:22 "அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார், நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்,; நிர்மூலமாக்கினால் காட்டு மிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்"
3. நிர்முலமாக்கிப் போடுங்கள்
தேவையற்ற பயம் உண்டாக காரணம் தேவையற்ற நபர்களோடு அல்லது பொருட்களோடு நாம் ஒட்டிக்கொள்வதாகும். பயத்தை மேற்கொள்ள ஆண்டவருக்கு பிரியம் இல்லாத அவற்றை நிர்முலமாக்கி போட வேண்டும். உபாகமம் 7:25 "அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய், நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக, அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்."
நிறைவாக.
நீங்களும் நானும் ஆராதிக்கும் கடவுள் வல்லமையும் பயங்கரமான அதிகாரம் மிக்கவர். அவர் நமக்குள்ளே இருக்கிறார் (உபா 7.21). அவர் அதிகாரத்தின் கீழ் நாம், அவர் செய்த அற்புதங்களை நினைத்து, நிதானமாக செயல்பட்டு, தேவையில்லாதவற்றை நிர்முலமாக்கினால், பயமில்லா வாழ்வு நமக்குண்டு. அப்படிப்பட்ட பயமில்லா வாழ்வை அவர் நமக்குத் தந்தருளுவாராக. ஆமென்.
பிரசங்கி. மேயேகோ
சபை ஊழியர்,
இராமையன்பட்டி.
0 Comments