Ad Code

எழுந்து கட்டுவோம் வாருங்கள் • Let's Get up and Build • 9/7/2023 Diocesan Sunday

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: திரித்துவ திருநாளுக்குப் பின்வரும் ஐந்தாம் ஞாயிறு (திருநெல்வேலி திருமண்டல ஞாயிறு)
தேதி: 9/7/2023
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்: 
உபாகமம் 6. 1 - 17
எபேசியர் 3.11 - 22
மத்தேயு 7.24 - 29
சங்கீதம்: 119. 89 - 104

2. திருவசனம் & தலைப்பு 
     எழுந்து கட்டுவோம் வாருங்கள் 
    எபேசியர் 2:20 (பவர் திருப்புதல்) அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். 
     (திருவிவிலியம்) திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். 

3. ஆசிரியர் & அவையோர் 
எபேசியர் நிருபம் பரிசுத்த பவுல் அப்போஸ்தலரால் எழுதப்பட்டது. ஆசியாவின் எபேசு பட்டணத்து விசுவாசிகளுக்கு எழுதியுள்ளார். 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
பவுல் சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் போது எழுதப்பட்ட நிருபம் இது. ஏறக்குறைய 60–62 கிபி ஆக இருக்கலாம் என நம்பப்படுகிறது. தன்னால் ஏற்படுத்தப்பட்ட சபைக்கு திருச்சபை குறித்தும் (எபே 1.3 - 3.21) , மீட்பின் வாழ்வும் (எபே 4.1 - 6.20) குறித்தும் கற்றுக்கொடுக்க இந்த நிருபம் எழுதப்பட்டது. 

5. திருவசன விளக்கவுரை 
திருச்சபையின் அடிப்படை மற்றும் கிரமமான வளர்ச்சிக் குறித்து பவுல் எபேசியர் 2:20 இல் குறிப்பிட்டுள்ளார். திருச்சபைக்கு கிரேக்கத்தில் வரும் மூல பதம் எக்கெளேசியா (ekklesia) என்பதன் அர்த்தம் அழைக்கப்பட்ட கூட்டம் (Called out community). ஆக, இது நமக்குக் கற்றுத் தரும் தெளிவான உண்மை என்னவென்றால், திருச்சபை என்பது இறைமக்களின் கூட்டமைப்பு அல்லது விசுவாசிகளின் ஐக்கியம். இதனடிப்படையில் தான் பரிசுத்த பவுல் திருச்சபை எப்படிப்பட்டது என்பதைக் குறித்து இந்த வசனத்தில் உருவகமாக எழுதியுள்ளார். 

திருச்சபையின் அஸ்திபாரம் மற்றும் வளர்ச்சியை ஒரு கட்டிட பணியமைப்புடன் குறிப்பிட்டுள்ளார். கட்டிடத்திற்கு உருவகப்படுத்தப்படும் திருச்சபையின் மூலைக்கல் அதின் நிறுவனராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அந்த மூலைக் கல்லின் மேல் கட்டுபவர்கள் அப்போஸ்தலர் மற்றும் தீர்க்கதரிசிகள். ஆகவே அவர்கள் தான் மூலைக் கல்லின் மேல் கட்டப்பட்ட முதல் அமைப்பாக, அதாவது கிறிஸ்துவுக்கு அடுத்து, அஸ்திபாரமாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லா விசுவாசிகளும் ஒரே கடவுளின் வீடாக கட்டப்படுகிறோம். இதற்கு அச்சாரமாக இருந்து செயல்படுபவர் தூய ஆவியானவர். 

6. இறையியல் & வாழ்வியல்
இன்றைக்கு சபை என்பது வெறும் கட்டிடம் என்று பலர் எண்ணி வாழ்வது போல் உள்ளது. திருச்சபை உயிருள்ள விசுவாசிகளின் ஐக்கியம் என்பது மறக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்: "எவ்வளவு அழகான, பெரிதான ஆலயமாக இருந்தாலும் சரி, அங்கு விசுவாசிகளின் கூட்டமைப்பு இல்லா விட்டால், அது சபையே இல்லை." இது தான் உண்மை. சபை என்பது வெறும் கட்டிடம் அல்ல. மாறாக கடவுள் தங்கும் வீடு.

7. அருளுரை குறிப்புகள்
      எழுந்து கட்டுவோம் வாருங்கள்
 1. முதலில் நாம் எழும்புவோம்
 2. இணைந்து வந்து செயல்படுவோம்
 3. சபையாக வாழ்வோம்

எழுதியவர்
மே.யே. கோல்டன் ரதிஸ்
சபை ஊழியர், இராமையன்பட்டி.
meyegoofficial@gmail.com

Post a Comment

0 Comments