தியானம்: 34 / 40 - சத்தியமுள்ளவர்
எழுதியவர்: திரு. வி. பிரவீன் ஜோன்ஸ்
தலைப்பு: சத்தியமுள்ளவர்
தலைப்பின் அர்த்தம்:-
சத்தியமுள்ளவர் என்றால் உண்மையுள்ளவர் என்று அர்த்தம். (உண்மை பேசுகிறவர்)
வசன இருப்பிடங்கள்:
மத்தேயு 22:16 தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
தீத்து 1:3 - பொய்யுரையாத தேவன் என்று வேதம் நமக்கு கூறுகிறது.
எண்ணாகமம் 23:19 - பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
விளக்கவுரை
கர்த்தர் அநேக இடங்களில் சத்தியமுள்ளவராய் (உண்மையுள்ளவராய்) அவர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி இருக்கிறார். திரித்துவ தேவனை வணங்குகிற நாம் "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்" சத்திய முள்ளவர்கள் என்று வேதம் நமக்குக் கற்றுத்தருகிறது.
யோவான் 7:28 ல் இயேசு இப்படியாக கூறுகிறார். "என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்". எனவே, பிதா சத்தியமுள்ளவர் என்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
அதேபோலவே, 1 யோவான் 5:20 ல்
இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது "இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்திய முள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்" எனவே இயேசு கிறிஸ்துவும் சத்தியமுள்ளவர் என்று நம்மால் அறிந்துக் கொள்ள முடிகிறது.
யோவான் 16:13 ல் "சத்திய ஆவியாகிய" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது, இதிலிருந்து ஆவியானவரும் சத்தியமுள்ளவரென்று நம்மால் அறிந்துக்கொள்ள முடிகிறது.
உதாரணமாக ஆபிரகாமை எடுத்துக் கொள்வோம். ஆபிரகாமை அழைத்து தேவன் வாக்குப் பண்ணினார். அனைவரும் அந்த வாக்குத்தத்தத்தை அறிவோம். ஆதியாகமம் 15:5 ல், நீ வானத்தை அண்ணார்ந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால் அவைகளை எண்ணு என்று சொல்லி பின்பு அவனை நோக்கி உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். கர்த்தர் வாக்குப்பண்ணின படியே ஆபிரகாமுக்கு நூறாவது வயதில் ஈசாக்கைக் கொடுத்தார். அதிலிருந்து ஒரு தேசமே எழும்பும்படி செய்தார். அதைப் போல வேதத்தில் அநேகருக்கு வாக்குப்பண்ணினபடி அதை நிறைவேற்றி இருக்கிறார்.
முடிவுரை :-
தேவன் உண்மையை விரும்புகிறவர்.
வேதத்தில் அநேக உண்மையுள்ளவர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. உதாரணமாக எண்ணாகமம் 10:7ல் என் வீட்டில் எங்கும் உண்மை உள்ளவனென்று ஆண்டவரே மோசேயைக் குறித்து சாட்சிக் கொடுக்கிறார். மத்தேயு 25:21 ல் சொல்லப்பட்ட உவமையில் தேவன்
குறிப்பிடுகிறது என்னவென்றால் "கொஞ்சத்திலே உண்மையாய் இருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாய் வைப்பேன்", என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதேபோல நீதிமொழிகள் 28:20 "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்". இதில் இருந்து அவர் உண்மையை விரும்புகிறவர் என்றும் உண்மையுள்ளவர்களை தேவன் கனப்படுத்துகிறார் என்றும் நம்மால் திட்டமாய் அறிய முடிகிறது. நாம் இன்றைய காலக்கட்டத்தில் குடும்பத்தில், வேலையில், ஊழியத்தில், ஆலயக் காரியங்களில், மற்ற மனிதர்கள் மத்தியில் எப்படிப் பட்டவர்களாய் இருக்கிறோமென்று சிந்தித்துப் பார்த்து உண்மையுள்ளவர்களாய் வாழ முயற்சி செய்வோம்.
0 Comments