தியானம்: 39 / 40 - கர்த்தர் (LORD)
எழுதியவர்: திரு. ஜெ. ஜோ அகஸ்டின்
தலைப்பு: - கர்த்தர் (LORD)
வசன இருப்பிடம் - மத்தேயு 3:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
தலைப்பின் அர்த்தம்
ஒருவர் மீது வல்லமையும் அதிகாரமும் கொண்டவர் என்பதே கர்த்தர் என்ற பெயரின் அர்த்தமாகும்.
விளக்கவுரை
கர்த்தராகிய இயேசு சகலவற்றையும் உண்டாக்கியவர், சகலவற்றின் மேலும் அதிகாரம் உடையவராகவும் இருக்கிறார். எத்தனை அதிகாரம் உடையவராய் இருந்தும் மனிதனை ஒருபோதும் எதற்க்கும் கட்டாயப்படுத்துவதில்லை. இதோ வாசற்படியில் நின்று கதவை தட்டுகிறேன் என்பதாகவே கர்த்தராகிய இயேசுவை குறித்து வேதத்தில் வாசிக்கின்றோம்(வெளி 3.20).
அவருக்கு வாழ்க்கையில் இடம் கொடுத்து அவரோடு ஐக்கியப்படும்போது அவர் நம்மை ஆளுகைசெய்து மறுமை வாழ்வின் பரியந்தம் நம்மை வழிநடத்த வல்லமை உடையவராக இருக்கின்றார். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்கு இடம் கொடுத்து அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்கின்றோமா என்று நிதானித்து பார்ப்போம்.
கர்த்தருக்கென்று தன்னை அர்ப்பணித்த ஒருவர் தேவனுடைய விருப்பத்தை செய்வதையே நோக்கமாய்க்கொண்டு செயல்பட வேண்டும்.
நம்முடைய சுய விருப்பத்தின்படி வாழ்ந்துகொண்டு இயேசுவே என் கர்த்தர் (Jesus is my Lord) என்று சொல்வது மாய்மாலமே(நடிப்பு). அப்படிப்பட்டோர் பரலோகத்தில் பிரவேசிப்பதில்லை என்றும் வேதத்தில் பார்க்கின்றோம்(மத்தேயு 7:21).
முடிவுரை
நம்முடைய ஆசையும் பிரயாசமும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் திருசித்தத்தையே நிறைவேற்ற வேண்டும் என்பதாகவே இருப்பின் அவரோடு நித்திய நித்தியமாய் வாழ்வது சாத்தியமே. அவ்வண்ணமே நாம் வாழ கர்த்தர் தாமே கிருபை செய்வாராக. ஆமென்:
0 Comments