தியானம்: 37 / 40 - குரு
எழுதியவர்: திரு. யே. கோல்டன் ரதிஸ்
தலைப்பு: குரு / Priest (ஆசாரியர்)
மத்தேயு 23:10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
வசன இருப்பிடம்:
மத்தேயு 23.10
தலைப்பின் அர்த்தம்:
இயேசு கிறிஸ்து நம் எல்லாருக்கும் ஆன்மீக பணி செய்யும் குரு. குரு" என்ற சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் ஆன்மீக ஆசிரியர். குரு என்பது ஒரு பெயரடையாக "கனமான" என்று பொருள்படும்; அதாவது,ஆன்மீக அறிவு மற்றும் ஞானத்தால் கனமானவர்.
விளக்கவுரை:
ஆசாரியத்துவம் (குருத்துவம்) என்பது யூத வழிபாட்டு முறைமையில் மிக முக்கியமான ஒன்று. மக்கள் இவர்களை மிக கனமிக்கவர்களாக கருதினர். ஆகவே தான், மத்தேயு நற்செய்தியாளர், தம் நூலில், கிறிஸ்து ஒருவரே குருவாயிருக்கிறார் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
1. முறைமை மாறியது:
நியாயப் பிரமாண முறைமையின் படி, லேவி கோத்திரத்தில், குறிப்பிட்ட சிலர் மாத்திரமே ஆசாரியத்துவ பணிக்கு வர முடியும். இயேசு லேவி கோத்திரத்தில் அல்ல, யூத கோத்திரத்தில் பிறந்தார். ஆனல், மெல்கிசெதெக் (நீதியின் ராஜா) முறைமையின் படி இயேசு மகா பிரதான ஆசாரியர் என்று எபிரெயருக்கு ஆக்கியோர் மிக தெளிவாக எழுதியுள்ளார். இயேசு நிரந்தர ஒரே மகா பிரதான குருவானார்.
2. குரு - சீடர் உறவு:
குரு - சீடர் உறவு என்பது பண்டைய கால கல்வி முறையில் மட்டும் அல்ல; ஆன்மீக கற்பித்தல் வழக்கத்தில் பொருந்தக் கூடிய ஒன்று. ஆகவே, குரு இயேசுவுக்கு என்று சீடர்கள் அவரோடு இருந்தார்கள்; அவரிடம் கற்றனர். அவரைப் பின்பற்றினார்கள்.
நிறைவுரை:
ஆசாரியத்துவம் கடவுளால் ஸ்தாபிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் உள்ள பிரதான ஆசாரியனைப் போலவே, பிதாவாகிய கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையில் இடைத்தரகர் பாத்திரத்தை இயேசு ஏற்றுக்கொண்டார். இயேசு அந்த இடைவெளியை நிரப்பினார். இயேசு என்னும் ஒரே மத்தியஸ்தர் நமக்கு இருப்பதால், நாம் பல மத்தியஸ்தர்களை நாட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, குருவை தொடரும் சீடர்களாக வாழ்வோம்; குருவின் புகழைப் பிரஸ்தாபிப்போம். ஆமென்.
0 Comments