Ad Code

உயிர்த்தெழுதல் • Resurrection • Nixon • SMC

SMC Lenten Meditation 2024
தியானம்: 27/ 40 - உயிர்த்தெழுதல் (Resurrection)
எழுதியவர்: திரு. ஸ். நிக்ஸன் ஐசக் ராஜா
தலைப்பு: உயிர்த்தெழுதல்
யோவான் 11:25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். 

 வசன இருப்பிடம் :
யோவான் 11:25

 தலைப்பின் அர்த்தம்:
உயிர்த்தெழுதலின் தேவன் அவர். அவர் மரித்தோரின் தேவன் அல்லர் என்றும் வேதம் சொல்லுகிறது.

விளக்கவுரை:
  இயேசுவின் நண்பர் லாசரு மரணத்துக்கு ஏதுவான வியாதி படுக்கையில் இருக்கிறார் என்று அவருடைய சகோதரிகளான மார்த்தாள் மரியாள் மூலம் இயேசு தகவல் அறிந்தும் தாம் இருந்து பகுதியில் மேலும் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். காரணம் என்னவெனில், லாசருவின் வியாதி மரணத்துக்கு ஏதுவாக இல்லாமல் தேவனுடைய மகிமையைக் காண்பிக்க ஆகும். 

பெத்தானியாவுக்குப் பக்கத்தில் மார்த்தாளையும் மரியாளையும் இயேசு சந்தித்த பிறகு, அவர்கள் எல்லாரும் லாசருவின் கல்லறைக்குப் போகிறார்கள். அது ஒரு கல்லால் மூடப்பட்ட குகை. அங்கே போனதும், “இந்தக் கல்லை எடுத்துப் போடுங்கள்” என்று இயேசு சொல்கிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்று மார்த்தாளுக்குப் புரியவில்லை. அந்தக் கல்லை எடுத்துப் போடுகிறார்கள். பிறகு, இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, ஜெபித்து விட்டு, "லாசருவே, வெளியே வா!” என்று சத்தமாகக் கூப்பிடுகிறார். உடனே, லாசரு வெளியே வருகிறார். இவ்விதமாக லாசருவின் உயிர்த்தெழுதல் நடைபெற்றது.


உயிர்த்தெழுதல் கிடையாது என்று கூறும் பல சதுசேயர்கள் மற்றும் யூதர்கள் முன்பு இயேசு இதை செய்தார். இது இயேசு மீண்டும் உயிர்த்தெழுவார் என்பதற்கு முன்னோடி அற்புதம் எனலாம். மேலும் மரணத்திற்கு பின்பும் வாழ்வு உண்டு என்பதற்கான அச்சாரம் உயிர்த்தெழுதலில் உள்ளது. 1 கொரிந்தியர் 15:16 சொல்லுகிறது: மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. 

முடிவுரை: 
இயேசு வாழ்ந்த காலத்தில் இருபிரிவினர் இருந்தார்கள் ஒன்று உயிர்த்தெழுதலை விசுவாசிப்பவர்கள் (பரிசேயர்) மற்றொன்று உயிர்த்தெழுதல் கிடையாது என்பவர்கள் (சதுசேயர்). இன்றைக்கும் மரணத்துக்கு பின்பான வாழ்வு குறித்த சந்தேகம் பலருக்கு உள்ளது. 
இயேசுவே உயிர்த்தெழுதல் என்பதை நாம் உணர்ந்தால் நித்திய வாழ்வு உண்டு என்ற நம்பிக்கை வளரும். ஆமென்.

Post a Comment

0 Comments