தியானம்: 35 / 40 - நீதிபரர்
எழுதியவர்: திரு. யே. கோல்டன் ரதிஸ்
தலைப்பு: நீதிபரர்
லூக்கா 23:47 நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
வசன இருப்பிடம்:
லூக்கா 23.47
தலைப்பின் அர்த்தம்:
நேர்மையானவர், நிரபராதி, நீதிமான் (Righteous Man) என்று பொருள்.
விளக்கவுரை
லூக்கா 23.47 ஆம் வசனத்தில் இயேசு சிலுவையில் தம் ஆவியை ஒப்புக்கொடுத்து ஜீவனை விட்ட பின்பு, அங்கிருந்த நூற்றுக்கதிபதி "இயேசுவை நீதிபரர் என்று சொல்கின்றார். அவர் ஆறு முறை விசாரிக்கப்படும் போது, அவரை நீதிமான் என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில் அவர் சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடப்படத்தக்கது.
1. மரணம் வாயிலாக ஆத்தும ஆதாயம்
இயேசு சிலுவை சுமக்கும் போதும், அதில் தொங்கும் போதும் அவரைக் குறித்து ஏளனமாக பேசியோர் அதிகம் அதிகம். அப்படி இருக்க அவர் மரித்த பின்பு இன்னும் எத்தனை ஏளனமாக பேசியிருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களை போல இந்த நூற்றுக்கதிபதி இல்லை. "சம்பவித்ததைக் கண்டு" உண்மையைக் கண்டுகொண்டவன் போல், இயேசுவை நீதிமான் என்று சொல்லுகிறார். அவருக்குள் ஏற்ப்பட்ட மாற்றம், அவரை தேவனை மகிமைப்படுத்த வைத்தது. மத்தேயு, மாற்கு நற்செய்திகளில், தேவனுடைய குமாரர் என்று அறிக்கையிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. மரணத்தின் போதும் நற்சாட்சி
இயேசு மரணம் அடைந்து விட்டார். இனி அவரைக் குறித்து எப்படிப்பட்ட சாட்சிகள் கொடுத்தால் என்ன என்ற நிலை தான் அங்கு. ஆனால், இந்த நூற்றுக்கதிபதி சும்மா நிற்கவில்லை. இயேசுவை நேர்மையானவர் என்று சொல்லுகிறார். இயேசுவின் குற்றமற்ற தன்மையில் அவர் சிலுவையில் ஜீவன் விட்டது இந்த நூற்றுக்கதிபதியின் மனதில் இடம் பிடித்துவிட்டது போலும்.
நிறைவுரை:
இயேசுகிறிஸ்துவின் "நீதிபரர்" என்ற தலைப்பை தியானிக்கும் நாம் எப்படி வாழ்கிறோம்? நம் வாழ்க்கை ஆத்தும ஆதாயம் செய்கிறதா? நம்மை சுற்றி வாழ்வோர் நம்மைக் குறித்து கொடுக்கும் நர்சாட்சி என்ன? நம்மை யார் (கிறிஸ்து + அவர்கள்) என்று அவர்கள் அறிந்து கொண்டால் நம் மூலம் அவர்கள் கடவுளை (கிறிஸ்துவை) அறிந்து கொள்வார்கள். ஆமென்.
0 Comments