1825ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த Rev.J.F கேர்ன்ஸ் தனது இளம் வயதிலேயே கடவுள் பக்தி மிக்கவராக வளர்க்கப்பட்டார். தனது வாலிப வயதில் மிசினரி பணியின் அழைப்பை ஏற்று 1849ம் ஆண்டு இந்தியா வந்தார். இடையன்குடியில் பேராயர் கால்டுவெல் அவர்களிடம் 1849-1854 வரை சபை ஊழியராக பயிற்சி பெற்றார். 12.03.1854 ல் உதவி குரு (டீக்கன்) பட்டம் பெற்று முதலூரில் பணி செய்தார். 24.03.1855 ஹேனா எலிசபெத் ராபர்ட் எண்பாரை திருமணம் செய்து கொண்டார். J.F கேர்ன்ஸ் - ஹேனா தம்பதியருக்கு 10.08.1855 அன்று மேரி எமிலிபார்ன் என்ற மகள் பிறந்து எட்டு மாதத்தில் 26.04.1856ல் கர்த்தருக்குள் மரித்து தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்பட்டாள். இதற்கிடையே பணிமாற்றம் செய்யப்பட்டு 1855-56வரை சாயர்புரத்தில் பணி செய்தார்.
இதன் பிறகு 29.09.1856ல் எட்வர்ட் வெஸ்லி பிளஸ்ஸிங் என்ற மகனும், 11.08.1858 இல் வெண்ணி அமெல்யா என்ற மகளும் 18.06.1861ல் ஆர்தர் என்ற மகன் உட்பட மூன்று பிள்ளைகள் பிறந்தனர். S.P.G மிஷினின் ஜில்லாவாக (தலைமை இடம்) இருந்த புதியம்புத்தூரை மையமாக வைத்து 1856 முதல் 1873 வரை பணி செய்தார். இங்கு வெண்ணி அமெல்யா என்ற மகளுக்கு 17.10.1858 அன்று புதியம்புத்தூரில் வைத்து திருமுழுக்கு கொடுக்கப்பட்டது.
புதியம்புத்தூரை மையமாக வைத்து 17 ஆண்டுகள் பணி செய்ததன் விளைவாக புதியம்புத்தூர் , நாகலாபுரம், புதுர், ஆற்றங்கரை, விளாத்திகுளம், குளத்தூர், தருவைகுளம், தூத்துக்குடி வடக்கூர் என பல சபைகளை உருவாகின.
1830 களில் புதியம்புத்தூர், எட்டையாபுரம் ஜமீன் எல்லைக்குள் இருந்ததது. ஜமீன் கிறிஸ்தவர்களை பிடித்து அடித்து பற்பல கொடுமைகளுக்கு உட்படுத்தினார். கிறிஸ்தவர்களில் அநேகர் மறுதலித்து போயினர். எஞ்சிய சிலர் ஊரை விட்டு ஓடி விட்டார்கள். கிறிஸ்தவ சமயத்தை வேரோடு பிடுங்கி எறிவதே அவர்களது நோக்கமாய் இருந்தது. பணி செய்த வந்த பிறகு இந்த எதிர்ப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
01.11.1861ல் வருகை புரிந்த S.P.Gயின் பொதுச் செயலாளர் AR சிமொன்ட் (SYMONDS) புதியம்புத்தூர் அருப்பணித்தளம் தனி ஒரு நபரால் மட்டும் சந்திக்கப்படுவது கடினமானது ஆனால் Rev .J.F கேர்ன்ஸ் மிக சிறப்பாக இங்கு ஊழியம் செய்து வருகிறார் என்று பாராட்டினார்.
1856 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் நாள் வேப்பலோடை சபையை சந்தித்து விட்டு குருவார் பட்டியை நோக்கி பயணப்படுகின்றார் . அன்று இரவு வைப்பார் கிராமத்தில் இராத்தங்க ஏற்பாடு. ஊர்வந்து சேர்வதற்குள் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. கொட்டும் மழையில் நடுநசிவரை நனைந்து கொண்டிருந்த Rev.J.F. கேர்ன்ஸ் ஐயர் ஊர் பெரியவர் வீட்டிற்குள் அழைக்கப்படுகிறார். ஏராளமான மக்கள் வீட்டுக்குள் கூடி வர பின் இரவில் ஆரம்பமான உரையாடல் விடிய விடிய செல்கின்றது. சுவிசேஷம் பிரபல்யம் அடைந்தது. கோடை பகலில் கடுமையாக ஊழியம் செய்துவிட்டு இரவில் கண்ணயரலாம் என்று நினைத்திருக்கலாம்.
சுவிசேஷத்திற்காக கண் விழிப்பும் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் தேவ ராஜ்ஜியத்தின் செய்தியை களைப்பின்றி சொல்வதும் அவர்களின் வாழ்வாக இருந்தது. மழையோ இரவோ தூக்கமோ களைப்போ ஆகிய யாதொன்றும் Rev.J.F. கேர்ன்ஸ் ஐயர் அவர்களின் ஊழியத்தை நிறுத்த முடியவில்லை.
1856 ஆம் ஆண்டு Rev .J.F. கேர்ன்ஸ் ஐயர் நாகலாபுரம் புதூர் செல்லுகின்றார். புதியதாக ஏராளமான மக்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். இதைக் கண்டு ஜமீன்தாருக்கு மிகுந்த கோபம். வாலிபன் ஒருவனுக்கு குடிக்க போதை தரும் பானம் ஒன்றை வாங்கி கொடுத்து ஊழியரையும் சபையாரையும் மிரட்டி விரட்டி விட ஏவி விடுகின்றார். வாலிபனும் நன்றாக குடித்து அவர்களை கெட்ட வார்த்தையில் பேசிக்கொண்டே விரட்ட வருகின்றான். சபையார் அந்த வாலிபன் குருவானவரை தாக்கி விடக்கூடாது என்று அச்சப்பட்டவர்களாக அருகில் வருகின்றனர்.
அப்பொழுது Rev .J.F.கேர்ன்ஸ் ஐயர் அவர்கள் சபையாரை பார்த்து அந்த வாலிபனை ஒன்றும் செய்து விடாதீர்கள். நீங்கள் இதில் தலையிடாதீர்கள். என்னை தாக்கினால் பரவாயில்லை, என்று சத்தமாய் சொல்லுகின்றார் . இதைக் கேட்ட வாலிபன் நிலை தடுமாறினவனாய் நிற்கின்றான். உடனே அவன் தன்னை ஏவி விட்டவர்களை நோக்கி வேகமாக கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டே ஓடுகின்றான். இந்த நிகழ்வுக்கு பின்னர் அந்த ஜமீன்தார் Rev .J.F. கேர்ன்ஸ் ஐயர் அவர்கள் புதூருக்கு வரும் பொழுதெல்லாம் அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகின்றார். மனதிலே உறுதியும், உள்ளத்திலே தைரியமும் கொண்ட வீராதி வீரர்களால் மட்டுமே அடி வாங்க துணிந்து நிற்க முடியும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டி நிற்பது தானே கிறிஸ்தவம்.
தூத்துக்குடியில் இருந்து ஐரோப்பியர்கள் ஒரு பள்ளியை தொடங்கி நடத்தினார்கள். அதை 1858 ல் SPG மிஷினிடம் ஒப்படைத்தனர். SPG Anglo Vernacular School என அழைக்கப்பட்ட பள்ளியை (தற்போதைய கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்தது) குறித்து தனது 1859 ஆம் ஆண்டு SPGக்கு அளித்த அறிக்கையில் திருநெல்வேலி மிஷினில் இதைவிட நல்ல பள்ளி வேறொன்றுமில்லை. நான் மாதம் மும்முறை இப்பள்ளியை பார்வையிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
1858ம் ஆண்டு புதியம்புத்தூர் மிஷன் மாவட்டத்தின் உறுதியான சபையாக தூத்துக்குடி வடக்கூரில் சபை தோன்றியது. 1861 இல் இருந்து தூத்துக்குடியில் வாழ்ந்த பல இத்திருச்சபையில் இணைந்தனர். கூரை வேய்ந்த ஆலயம் இருந்த நேரத்தில் இவர்களுக்கு நல்ல ஆலயம் தேவை என்பதை 1868 இல் உணர்ந்து அரசிடம் விண்ணப்பித்து பணம் செலுத்தி பெற்றுக் கொண்டார். அதே ஆண்டு ஜூலையில் Rev J.F கேர்ன்ஸ் புதிய ஆலயத்திற்கு அஸ்திவாரம் இட்டார். புதியம்புத்தூரில் தலைமை உபதேசியாக இருந்த திரு D ஞானப்பிரகாசம் என்பாரை தூத்துக்குடி சபை குருவாக நியமிக்க Rev.J.F கேர்ன்ஸ் சிபாரிசு செய்தார்.
அதன்படி 31.01.1868 ல் திரு. D ஞானபிரகாசம் அவர்களுக்கு பேராயர் பிரட்ரிக் ஜெல் அவர்களால் பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் குரு பட்டம் கொடுக்கப்பட்டது. 02.02.1869ல் தூத்துக்குடி தனி சேகரமானது. வடக்கூரில் கட்டப்பட்ட ஆலயத்தை கேர்ன்ஸ் அவர்களின் சொந்த தேசமாகிய அயர்லாந்தின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்ட தூய பேட்ரிக்கின் பெயரை வைத்து பேராயர் 19.01.1973 அன்று பிரதிஷ்டை செய்தார்.
Rev.J.F கேர்ன்ஸ் 1872ம் ஆண்டு SPG தலைமையகத்திற்கு எழுதிய ரிப்போர்ட் ஒன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
"I am now completing a neat and substantial norman church in Tuticorin and hope to have it opened in the first week of February for divine worship. The building is quiet and ornament to the town and is regarded by the native with pardonsble pride. It is through will build, but to me the most interesting feature in it is that I build this without putting the society to as much as the expenses of sixpence. The church will be known as the St.Patricks church."
நாகலாபுரம் திருச்சபைக்கும் தூய பேட்ரிக் ஆலயம் என்று அவர் பெயரிட்டார். 1903 ஆம் ஆண்டு முதல் அது திவ்ய உயிர்த்தெழுதலின் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.
பின்பு 1873ம் ஆண்டு தஞ்சாவூருக்கு மாறுதலாகி அங்கு 1877 வரை 4 ஆண்டுகள் பணி செய்தார். 21.05 1874 இல் சென்னை பேராயர் Rev J.F கேர்ன்ஸ் அவர்கள் தஞ்சை வந்த பிறகு மீண்டும் மறுமலர்ச்சி ஏற்பட்டு அவருடைய அருட்பணியின் விளைவுகளால் அநேக கனிகளை காண முடிகிறது என்று குறிப்பிடுகிறார். 1877-ல் தஞ்சை கொடிய காலராவினாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டது. 3000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு அரசால் ஒழுங்கு செய்யப்பட்டது. அப்பொழுது அருட்பணியின் தேவை அதிகமாக இருந்தது. இவர் பணியாற்றிய இடங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் உபதேசிமார்களுக்கான இறையியல் கல்லூரிகளிலும் Rev.J.F கேர்ன்ஸ் சிறப்பாக ஆசிரியர் பணியாற்றியுள்ளார்.
Rev.J.F கேர்ன்ஸ் தனது வாழ்நாளில் எழுதிய நூல்கள்
1. The Tribes of South India
2.The Cairns of tinnevely
3.AR SPG Tract
4.The Old Books.
5. Topographical notice of Tirunelveli
6. Introduction to panjalankurichi paligar and the state of Tirunelveli
7. Kalyan Satta anuku
இது தவிர
1. ஆத்ம போத பிரகாசிகா
2. சில்பா சாஸ்த்திரா என சில நூல்களை தமிழிலும் மொழிபெயர்த்துள்ளார்.
இவர் மனைவி 6 மாதம் இங்கிலாந்துக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் ஆஸ்துமாவினால் சில மாதம் பாதிக்கப்பட்டு 09.12.1877 இல் தன்னுடைய 52 வது வயதில் பரிசுத்தவான்களின் வரிசையில் சேர்க்கப்பட்டார். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனின் மகள் இளவரசி விஜய மோகன முத்தாம்பாள் அம்மணி சாகேப் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்ததால் Rev.J.F. கேர்ன்ஸ் அவர்களின் அடக்க செலவு முழுவதையும் மன்னன் ஏற்றுக்கொண்டு தஞ்சை தூய பேதுரு ஆலயத்தில் நினைவு கல்வெட்டையும், கல்லறை கல்வெட்டையும் வைத்தார்.
தஞ்சாவூர் தூய பேதுரு ஆலய வளாகத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் சிதலமடைந்த நிலையில் காணப்பட்ட Rev .J.F கேர்ன்ஸ் அவர்களின் கல்லறை 2015 ஆம் ஆண்டு தூத்துக்குடி தூய பேட்ரிக் இணைப் பேராலயத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
தனது அயராத உழைப்பினால் அநேக சபைகளையும் அனேகமாயிரம் ஆத்துமாக்களையும் ஆயத்தப்படுத்திய Rev.J.F. கேர்ன்ஸ் "வடகிழக்கு நெல்லை அப்போஸ்தலர்" என்றும் தூத்துக்குடி "தூய பேட்ரிக் இணைப் பேராலயத்தின் தந்தை" எனவும் அழைக்கப்படுகிறார்.
வசதி நிறைந்த இடத்தில் பிறந்து ஏராளமாய் கல்வி கற்று ஒய்யாரமாய் வாழ வேண்டிய மிஷினரிகள் கிறிஸ்துவின் அன்பு நெருக்கி ஏவினதினால் வாழ்வாதாரத்தில் பின்தங்கி கிடந்த நம்மை தேடி இங்கு வந்தனர் .சத்தியத்தை கற்றுத் தந்தனர் .சத்தியத்தின் படி வாழ்க்கை நடத்தினர் .அவர்களிடம் சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்ட நம் முன்னோர்கள் சுவிசேஷத்தின் படி வாழ்ந்தார்கள். ஆகவே இன்று நாம் சுகித்திருக்கிறோம் .இனி வரும் காலத்தில் நம் பிள்ளைகள் வாழ்ந்திருக்க வேண்டுமானால் இன்று நாம் சத்தியத்தை படிக்க வேண்டும் அதன்படி நடக்க வேண்டும். சுவிசேஷத்தை விசுவாசிக்க வேண்டும் .அதன்படி வாழ வேண்டும்.
Rev.J.F. கேர்ன்ஸ் ஐயர் அவர்களின் வாழ்கையின் நிகழ்வுகள் இன்றைய கிறிஸ்தவர்களாகிய நமக்கு நிருபங்களாக உள்ளதை மறுக்க இயலாது.
0 Comments