தலைப்பு: இயேசு கிறிஸ்து: இறைசித்தத்திற்கான ஜெபம்
வேதப்பகுதி : மாற்கு 14 : 32 - 42
வேதாகம நபர் குறிப்பு : இயேசு கிறிஸ்து.
விளக்கவுரை:
இயேசு கிறிஸ்து தம் பிதாவினுடைய சித்தத்தின் படி ,மனுக்குலத்தின் பாவங்களுக்காக தம்மை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்க வேண்டிய வேளை வந்தபோது ,ஜெபிக்கும்படியாக வழக்கத்தின்படியே ஒலிவ மலைக்குப் போனார்.
அங்கே கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்கு, இயேசு தமக்கு நெருக்கமான சீஷர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய மூன்று பேரை மட்டும் கூட்டிக் கொண்டு போய், என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது என்று தம்முடைய மனக்கலக்கத்தை அவர்களிடம் வெளிப்படுத்துகிறார். மேலும் இயேசு சீஷர்களை விழித்திருங்கள் என்று சொல்லி, இயேசு சற்று அப்புறம் போய் தரையிலே விழுந்து அப்பா பிதாவே, எல்லாமே உம்மால் கூடும், இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும். ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.
ஜெபம் மற்றும் இறைசித்தத்திற்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் உதாரணத்தை நாம் இதன் மூலம் கற்றுக் கொள்கிறோம்.இயேசு தாம் ஜெபிக்கும் போது இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும் என்று பிதாவிடம் ஜெபிக்கிறார், இயேசு தனது ஜெபத்தை அங்கேயே முடிக்கவில்லை. அவர் உடனடியாக தொடர்ந்து ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று இறைசித்தத்திற்கு முழுமையாக கீழ்ப்படிகிறார்.
"இயேசு திரும்ப வந்த போது , அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்."
அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு இயேசு பேதுருவை கடிந்து கொண்டார்.
சீஷர்களிடம் ஒரு மணிநேரம் விழித்திருந்து ஜெபிக்கும்படி சொல்லியபின்பு,
இயேசு மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபம் பண்ணினார்.
அவர் இரண்டு மற்றும் மூன்றாந்தரம் வந்த போதும் அவர்கள் மாம்சத்திற்கு இடம் கொடுத்தபடியால் அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார் என்றார்.
இயேசு பிதாவின் சித்தத்தின்படி நடக்கவும், தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளவும் இயேசு மூன்று விசை ஜெபம் செய்தார்.
கற்றுக்கொள்ளும் பாடம்:
உட்கருத்து : இறைசித்தத்திற்கு கீழ்ப்படிதல் மற்றும் ஜெபத்தின் முக்கியத்துவம்.
இயேசுவைப் போல, பிதாவின் சித்தம் இன்னது என்று அறிந்து ஜெபியுங்கள் !
இறைசித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபியுங்கள் !
விழித்திருந்து ஜெபியுங்கள் !
சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபியுங்கள் !
அன்று தூங்கிய பேதுரு, இன்று நம்மைப் பார்த்து ,
1 பேதுரு 5: 8 ல் "... விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்" விழித்திருந்து ஜெபித்தால் மட்டுமே ஜெயம் வரும் என்பதை தன் வாழ்க்கையில் கற்றுக் கொண்டார்.
எழுதியவர்
திரு. சா. அலெக்ஸ் கிறிஸ்டோபர்
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments