Ad Code

உன்னதரில் உண்மையும் உறுதியுமான பெண்கள் • CSI Diocese of Tirunelveli

1. ஞாயிறு குறிப்புகள் :
கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 9ம் ஞாயிறு (செப்துவகெசிமா ஞாயிறு) 
திருமண்டல பெண்கள் ஞாயிறு 
தேதி : 01-02-2026
வண்ணம் : ஊதா நிறம் 
திருமறைப் பாடங்கள் : 
பழைய ஏற்பாட்டுப் பகுதி: ரூத் 1:6-19 
நிருப வாக்கியம்: ரோமர் 16:1-17 
நற்செய்தி பகுதி : மத்தேயு 15:21-28 
சங்கீதம் 18:1-19 

2. திருவசனம் 
தலைப்பு: உன்னதரில் உண்மையும் உறுதியுமான பெண்கள் 
இருப்பிடம் : ரூத் 1 : 16 (பி) 
திரு வசனம் : (பவர் திருப்புதல்) 
உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். 
(திரு விவிலியம்)  உம்முடைய இனமே எனது இனம்: உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்.

3. திருவசன தலைப்பு & ஞாயிறு தொடர்பு : 
திருநெல்வேலி பேராயம் பிப்ரவரி முதல் ஞாயிறு பெண்கள் ஞாயிறாக ஆசரிப்பது மரபு.
மேலும், செப்துவகெசிமா ஞாயிறு - இது இலத்தீன் மொழி. இதன் பொருள் *எழுபதாவது* என்பது ஆகும். சாம்பற் புதன் முந்தைய மூன்றாவது ஞாயிறு (அ) உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முந்தைய ஒன்பதாவது ஞாயிறு ஆகும். 

4. வசனக்குறிப்புகள்
நூலாசிரியர்: ரூத் புத்தகத்தின் ஆசிரியர் யாரென்று குறிப்பிடப்படவில்லை. அதற்கான சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும், யூதர்கள் சாமுவேல் எழுதியதாக நம்புகின்றனர். 

அவையோர்: நியாயாதிபதிகளின் நாட்களுக்கும் தாவீது ராஜாவின் நாட்களுக்கும் இடைப்பட்ட காலங்களில் உள்ள இஸ்ரவேல் மக்களுக்கு எழுதப்பட்டது.

வசன பின்னணி: 
நியாயாதிபதிகளின் நாட்களில் உண்டான பெரும் பஞ்சத்தில் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற மோவாப் தேசத்திற்கு சென்ற எலிமெலேக்கு குடும்ப வாழ்வின் சூழலை சித்திரிக்கிறது. எலிமெலேக்கு மனைவியாகிய நகோமி தன் குடும்பத்தின் ஆண் மக்களையெல்லாம் இழந்த சூழலில் தனது மருமக்களின் எதிர்கால வாழ்வை நினைத்து , தன்னை விட்டுப் போக சொன்னாள். அப்போது ஒர்பாள் திரும்பி தன் வீட்டிற்கு சென்றுவிட, ரூத் பெண்மணி தன் மாமியாரை தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல், தைரியமான முடிவெடுத்து நகோமியோடு வாழ உறுதியாக சொன்ன வார்த்தை. 

5. திருவசன விளக்கவுரை
ரூத் பெண்மணியின் தீர்க்கமான முடிவு, மங்கிப்போன குடும்பத்தை பிரகாசமடைய செய்ததை இந்த வசனத்தில் காணமுடிகிறது. இரு பக்கத்தில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் என சுதந்தரம் கொடுக்கப்பட்ட போதும், சமுதாயம் தன் மாமியாரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமையை கொடுத்தபோதும், அது கட்டாயமல்ல என தெரிந்தும், நகோமியாகிய தன் மாமியாரை நேசித்து அவளோடு வாழ துணிந்த ரூத்தின் அன்பும் கருணை உள்ளமும் வியக்கத்தக்கது (V.16 a). ஆண்மகன் இல்லாத பெண்கள் மதிக்கப்படாத காலத்தில் தன் இனம், மொழி, உறவு என அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு தனது மாமியாரின் முகவரியை தன்னுடையதாக்கிக்கொண்டு, நகோமியுடன் சென்றால் எதுவும் கிடைக்காது, முதிர்ந்த பெண்மணியால் ஒன்றும் முடியாது என தெரிந்தும் எதையும் எதிர்பாராமல் பின்தொடர்ந்த ரூத்தின் தியாக உள்ளம் ஆச்சரியமானது (V.16 b). வாழ்க்கையில் கலக்கமும் கண்ணீரும் சூழ்ந்த போதும் தனது மாமியார் பின்பற்றும் கர்த்தர் தான் தனக்கும் ஆண்டவர் என்ற அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை ரூத்தின் உறுதிப்பாட்டினை வெளிப்படுத்துகிறது (V.16 c). 

6. இறையியல் & வாழ்வியல்: 
ரூத் என்ற பெண்ணின் ஆழமான கடவுள் பற்றுறுதியும், தியாகமும், தைரியமும், முடிவெடுக்கும் திறனும் இன்றைய சூழலில் வாழும் பெண்களுக்கு சிறந்த முன்மாதிரியான வாழ்க்கை. அதற்கு அடிப்படையானது அன்பு. அந்த அன்பு கடவுளிடமும் சக மனிதரிடமும் செலுத்தப்பட வேண்டியது அவசியம். விட்டுக்கொடுப்பதில் தான் தியாகம் ஆரம்பிக்கிறது. கஷ்டம் தான் கடவுள் மீது உள்ள நமது நம்பிக்கையின் அளவுகோலாயிருக்கிறது. 

7. அருளுரை குறிப்புகள் 
அ) கடமைக்கு அப்பாற்பட்ட அன்பு 
ஆ) கடனை எதிர்பாராத தியாகம் 
இ) கலக்கத்திலும் கர்த்தர் மீது உறுதியான நம்பிக்கை

எழுதியவர்
திரு. கிறிஸ்து ராசையா 
சபை ஊழியர் 
அடைமிதிப்பான்குளம்

Post a Comment

0 Comments