தேதி: 22-02-2026
வண்ணம்: கரு நீல நிறம்
திருமறை பாடங்கள்:
பழைய ஏற்பாட்டு பகுதி: ரூத் 2 : 4 - 20
நிருபவாக்கியம்: எபேசியர் 4 :35 - 32
நற்செய்தி பகுதி: மாற்கு 1: 40 - 45
சங்கீதம்: 145
2. திருவசனம் & தலைப்பு
"இரக்கம் பாராட்ட அழைப்பு"
“ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.”
லூக்கா 6:36
திருவிவிலியம்: உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
ஆசிரியர்:
இந்நூலின் ஆசிரியர் லூக்கா, இவர் ஒரு மருத்துவர், அப்போஸ்தலனாகிய பவுலின் நெருங்கிய நண்பர் மற்றும் உடன் ஊழியர், அவருடன் அடிக்கடி ஊழியப் பயணங்களில் உடன் பயணம் செய்தவர்.
அவையோர்:
லூக்கா நற்செய்தி (அதிகாரம் 6 உட்பட) தெயோப்பிலு (Theophilus) என்ற நபருக்கு எழுதப்பட்டது. இவர் இயேசுவை நேசிக்கும் ஒரு உயர்பதவியில் இருந்த நபராகக் கருதப்படுகிறார். ஒட்டுமொத்தமாக, யூதரல்லாத பிற இனத்து கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனைகளை உறுதியாக விசுவாசிக்க இந்த நற்செய்தி நூல் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது.
எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
காலம்:
சுமார் கி.பி. 60–70 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சூழ்நிலை:
யூத மதத் தலைவர்கள் நியாயப்பிரமாண சட்டத்தை மக்கள் மீது தவறான முறையில் கடுமையாக திணித்தனர். ரோமர்களின் அரசியல் ஆட்சி மக்களை அழுத்திகொண்டிருந்த சூழல். வேத பாரகர்கள் மோசேயின் சட்டத்தையும் யூத புதிய கலாச்சார சட்டத்தையும் மக்கள் மீது அழுத்தினார். மக்கள் எது சரி தவறு என்று பகுத்தறிய முடியாத சூழ்நிலையிலிருந்தனர்.
பின்னனியம் :
லூக்கா 6-ல், இயேசு பன்னிரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு திரளான மக்களுக்குப் உபதேசிக்க தொடங்கினார். இது மத்தேயுவின் மலைப்பிரசங்கத்திற்கு இணையாக அமைந்திருக்கிறது. சட்டமும் தவறான மத பாரம்பரியமும் மையமாக கொண்ட சமுதாய சூழலில், இயேசு இரக்கம், அன்பு ,மன்னிப்பு, போன்ற நல்ல போதனைகளை எடுத்துரைக்கிறார்.
திருவசன விளக்கவுரை:
இரக்கம் என்பதன் கிரேக்க பதம் "ஓய்க்டிர்மோன்" ஆகும்
இது கடவுளின் குணத்தை எடுத்துரைக்கும் பதம் ஆகும். கிறிஸ்து நமக்கு கொடுக்கும் மாபெரும் உன்னத அழைப்பு: "இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்." தகுதியற்றவர்கள் மீது காட்டப்படும் அன்பே இரக்கமாகும்.
பழைய ஏற்பாட்டில் தந்தையாம் கடவுள் இரக்கமுள்ளவர் என்பதை இயேசுவே சாட்சி பகருகின்றார். புதிய ஏற்பாட்டிலும் கடவுள் தம்முடைய குணத்தை இரக்கம் உள்ளவராய் வெளிக்காட்டுகிறார்.
தேவனின் இரக்கம் (V 35) நன்றி அறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்யும் இரக்கமாயிருக்கிறது.
இரக்கம் உள்ளவர்களாய் இருக்கும்போது மற்றவர்களை குற்றவாளிகளாக நாம் தீர்க்க முன்வரமாட்டோம்.(v 37)
மற்றவர்களுக்கு நம்மால் கொடுத்து உதவிட முடியும் (v 38). இந்த அளவின்படி நாம் மற்றவர்களுக்கு அளக்கும்போது தேவனும் நமக்கு அதே அளவின் படி அளக்கிறார்.
இறையியல் & வாழ்வியல்
லெந்து என்னும் விசுவாச ஆன்மீக வசந்த காலத்துக்குள்ளாக கடந்து வந்திருக்கிற நமக்கு கிறிஸ்து மாபெரும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
தேவனின் பண்பினை, குணத்தை நாமும் தரித்துக்கொண்டவர்களாய், பழிவாங்கும் பண்புக்கு மாறாக, மன்னிப்பு மற்றும் பணிவு கொண்டவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.
நம்முடைய இரக்க பண்பை நன்றி அறிதலற்றவர்களிடத்திலும் பகைவரிடத்திலும் காட்டுவதே தேவனின் நோக்கமாய் இருக்கிறது
இயேசுவும் கூட தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காய் அவர்கள் மீது அன்பு கூர்ந்து இரக்கமாய் உருக்கமாய் அவர்களுக்காக மன்னிப்பின் வேண்டுதலை செய்தார், அதேபோல நாமும் நம்முடைய சமுதாயத்திலும் நம்முடைய திருச்சபையிலும் தேவனின் இரக்கம் என்னும் அன்பின் குணத்தை வெளிப்படுத்துவோம்.
அருளுரை குறிப்புகள்:
1. மறு வாழ்வளிக்கும் இரக்கம் (ரூத்)
2. மன்னிக்கும் இரக்கம்(எபேசியர்)
3. மாற்றமளிக்கும் இரக்கம் (மாற்கு)
எழுதியவர்
சகோ. இம்மானுவேல்
சபை ஊழியர்
பாவூர்சத்திரம் சேகரம்

0 Comments