Ad Code

புனிதர் மாற்கு திருநாள் ✠ St. Mark the Evangelist • April 25

பிறப்பு: கி.பி. 1ம் நூற்றாண்டு
காப்டிக் மரபுப்படி, வட ஆபிரிக்காவில் உள்ள செரின், பென்டபோலிஸ்
(Cyrene, Pentapolis of North Africa, (According to Coptic tradition)

இறப்பு: ஏப்ரல் 25, 68
செரின், லிபியா, பென்டபோலிஸ் (வட ஆபிரிக்கா) தற்போது ஷஹத், ஜபல் அல் அக்தர், லிபியா
(Cyrene, Libya, Pentapolis (North Africa), now Shahhat, Jabal al Akhdar, Libya)

திருநாள் Feast : ஏப்ரல் 25

சித்தரிக்கப்படும் வகை: 
பாலைவனத்தில் சிங்கம்; சிங்கங்கள் சூழ்ந்த அரியணையில் ஆயர் உடையில்; வெனிசு நகரின் மாலுமிகளைக் காப்பது போல; "pax tibi Marce" என்னும் எழுத்துக்களை தாங்கிய புத்தகத்தோடு; இரு இரக்கைகள் உடைய சிங்கம்;

சிறப்பு 
நற்செய்தியாளரான புனிதர் மாற்கு, பாரம்பரியப்படி மாற்கு நற்செய்தியின் ஆசிரியராகக் கருதப்படுபவர் ஆவார். மேலும், இவர் கிறிஸ்தவத்தின் மிகவும் பழைமையான நான்கு ஆயர்பீடங்களுல் ஒன்றான அலெக்சாந்திரியா திருச்சபையின் (Church of Alexandria) நிறுவனராகவும் கருதப்படுகின்றார்.

வரலாற்றாசிரியரான யூசெபியஸ் (Eusebius of Caesarea) என்பவரின் கூற்றின்படி, மாற்கு அனனியாசு என்பவருக்குப் பின்பு, நீரோ மன்னனின் ஆட்சியின் எட்டாம் ஆண்டில் (62/63) அலெக்சாந்திரியாவின் ஆயரானார். பாரம்பரியப்படி கி.பி. 68ம் ஆண்டு, இவர் மறைசாட்சியாக மரித்தார் என்பர்.

மாற்கு நற்செய்தி 14:51-52ல் கெத்சமனித் தோட்டத்தில் இயேசு கைதுசெய்யப்பட்ட பின்பு அவர் பின்னே சென்ற இளைஞர் இவர் என்பது மரபு; இயேசுவை கைது செய்தவர்கள் இவரைப் பிடித்தபோது, தம் வெறும் உடம்பின் மீது இருந்த நார்ப்பட்டுத் துணியைப் விட்டு விட்டு இவர் ஆடையின்றித் தப்பி ஓடினார்.

திருத்தூதர் பணியில் நாம் சந்திக்கும் ஜான் மாற்கும், புனித பேதுரு தமது முதல் திருமுகம் 5:13 -ல் குறிப்பிடும் மாற்கும் ஒருவரே. 
புனித பவுல் (கொலோ 4:10, 2 தீமோத்தேயு 4:11, பிலோமோனுக்கு எழுதிய திருமுகம் 2:4) இவற்றில் குறிப்பிடும் மாற்கும் இவரே. 

இவர் பர்னபாவுக்கு நெருங்கிய உறவினர். திருத்தூதரான புனித பவுலின் முதல் பயணத்தில் அவரோடு கூட சென்றவர். மூன்றாம் பயணத்தில் உரோமை வரை பின் தொடர்ந்தவர். பேதுருடைய சீடரும், அவருடைய மொழி பெயர்ப்பாளருமாக மாற்கு தமது நற்செய்தியில் காணப்படுகின்றனர். 

எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகர் திருச்சபையை நிறுவியவராகக் கருதப்படுகிறார். எருசலேம் திருச்சபையில் புனித பேதுருவுக்கு மிக உதவியாகவும், புதுக் கிறிஸ்தவர்கள் தமது வீட்டில் வந்து தங்கிப்போக உதவியாகவும், இருந்த மரியா என்பவர் மாற்கின் தாய். 

முதன் முறையாகப் பவுல் சைப்ரஸ் நாட்டிற்கு போகும் போது இவரை உடன் அழைத்துச் சென்றார். அவர்கள் பம்பிலியா நாட்டில் பெர்கா என்ற இடத்தில் தங்கியிருந்தபோது, மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்துவிடுவார் என்று அச்சம் கொண்ட பவுல், சிலிசியா, சிறிய ஆசியாவிலிருந்த திருச்சபைகளை சந்திக்க சென்றபோது, பர்ணபாஸ் பரிந்துரைத்ததால், பவுல் மாற்கை அழைத்து செல்லவில்லை. இதனால் பர்ணபாவும் பவுலை விட்டுப் பிரிந்தார். 

ரோம் நகரில் பவுல் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது, மாற்கு பவுலுக்கு உதவி செய்தார். பவுல், தான் இறக்கும்முன்பு, ரோம் சிறையில் இருந்தார். அப்போது எபேசு நகரிலிருந்த திமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் மாற்கு தன்னோடு இருப்பார் என்று எழுதியுள்ளார்.

பின்னர் மாற்கு, புனித பேதுருவின் நண்பனானார். அலெக்சாண்டிரியா நகர் கிளமெண்ட், இரனேயுஸ், பாப்பியாஸ் ஆகியோர் மாற்கைப் பேதுருவின் விளக்கவுரையாளர் என்று காட்டுகிறார்கள். 

மாற்கு இயேசுவை சந்திக்காதவர் என்று பாப்பியஸ் கூறுகிறார். இன்று விரிவுரையாளர் பலர் மாற்கு நற்செய்தியில் நாம் சந்திக்கும் இளைஞன் ஆண்டவர் கைதியாக்கப்பட்ட நிலையில் அவரைப் தொடர்ந்தவர் இதே மாற்குதான் என்று ஏற்றுக் கொள்கின்றனர். 

பேதுரு தாம் எழுதிய முதல் திருமுகத்தில் (1 பேதுரு 5:13) "என் மைந்தன் மாற்கு" என்று குறிப்பிடுவதன் மூலம் மாற்கு பேதுருவுடைய மிக நெருக்கமான நண்பர் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மாற்கு, அலெக்சாண்டிரியா நகரின் முதல் ஆயர். இவர் ஆயராக இருக்கும்போது அலெக்சாண்டிரியா நகரில் இறந்தார். இவரது உடல் 830ம் ஆண்டில் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு வெனிஸ் நகரிலுள்ள மாற்கு பேராலயத்தில் வைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. மாற்கு வெனிஸ் நகரின் பாதுகாவலர் என்று போற்றப்படுகின்றார். 

இறக்கையுள்ள சிங்கம் மாற்குவின் சின்னமாக உள்ளது. "பாலைவனத்தில் ஒலிக்கும் குரலொலி" (மாற்கு 1:3) எனப் புனித திருமுழுக்கு யோவானை இவர் குறிப்பிடுகின்றார். எனவே ஓவியர்கள் இவ்வாறு வரைந்துள்ளனர். 

நற்செய்தியில் காணப்படும் "எப்பேத்தா" என்ற சொல் இவருக்கே உரியது. புதிதாக மனந்திரும்பிய ரோமப் புற இனத்தவர்க்கு இவரது நற்செய்தி எழுதப்பட்டது. மாற்கு நற்செய்தி கி.பி. 60 - 70 க்குள் எழுதப்பட்டிருக்கலாம். என்று வரலாறு கூறுகின்றது. 

ஒரு நிகழ்வை கண்ணால் காண்பதுபோல் சித்தரிப்பதில் இவர் வல்லவராக இருந்தார். "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் என்ற நற்செய்தியை புறவினத்தார்க்கு அறிக்கையிடுவதே இவரது நற்செய்தியின் குறிக்கோள். கோப்த்து, பிசாந்தின் வழிபாட்டு முறையாளர் புனித மாற்குவின் திருவிழாவை ஏப்ரல் 25 ஆம் நாளன்று கொண்டாடுகின்றனர்.

Post a Comment

0 Comments