Ad Code

ஆட்கொள்ளும் தூய ஆவியானவர் • அப்போஸ்தலர் 2:4 • Acts 2.4 Pentecostal Sunday

1. ஞாயிறு குறிப்புகள் :  
தேதி :24/05/2026
வண்ணம் : வெள்ளை
திருமறை பாடங்கள்
பழைய ஏற்பாடு:1 இராஜாக்கள் 19:11 - 18
 நிருப வாக்கியம்: அப்போஸ்தலர் 2:1-13 
 நற்செய்தி பகுதி: யோவான் 20:19-23
 
2. திருவசனம் & திருவசனத் தலைப்பு
ஆட்கொள்ளும் தூய ஆவியானவர்
அப்போஸ்தலர் 2:4
BSI: அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.
திருவிவிலியம்: அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.

3.  திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
இந்த ஞாயிறு  பெந்தேகோஸ்தே திருநாள், தூய ஆவியானவர் ஞாயிறு மற்றும் வெள்ளை ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது.

4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்: அப்போஸ்தலர் நடபடிகள் (Acts of the Apostles) நூலின் ஆசிரியர் மருத்துவராகிய லூக்கா ஆவார். இவர் புதிய ஏற்பாட்டில் உள்ள லூக்கா நற்செய்தியையும் எழுதியுள்ளார். இவர், பவுலின் நற்செய்திப் பயணங்களில் அவரோடு பயணித்தவர் ஆவார்.

அவையோர்: பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியைப் பெற்ற சீடர்கள் (அப்போஸ்தலர்கள்) மற்றும் பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்ட யூதர்கள் மற்றும் அநேக தேசங்களில் இருந்து வந்தவர்கள்.

வசன பின்னணி: இந்த சம்பவம் “பெந்தெகொஸ்தே” என்ற யூத பண்டிகை நாளில் நடந்தது.பெந்தெகொஸ்தே என்றால்: “ஐம்பதாம் நாள்” என்று அர்த்தம். பழைய ஏற்பாட்டில் அறுவடைப் பண்டிகையாக கொண்டாடப்பட்டது (Feast of Harvest). இது முதல் அறுவடைக்காக தேவனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும் 
யாத்திராகமம் 23:16

இது கிறிஸ்து விண்ணுக்கு எழுந்து பத்தாவது நாளில் நடந்த சம்பவம். பெந்தகோஸ்தே என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரு மனப்பட்டு ஓர் இடத்தில் கூடியிருந்தார்கள். அப்பொழுது அக்கினிமயமான நாவுகள் அவர்களுக்கு காணப்பட்டு அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டார்கள், வெவ்வேறு பாஷைகளையும் பேசத் தொடங்கினார்கள்.

 5. திருவசன விளக்க உரை:

அப்போஸ்தலர் 2 ஆம் அதிகாரம்  புதிய ஏற்பாட்டு சபையின் வெளிப்படையான ஆரம்பமாகும். அப்போஸ்தலர் 1: 8ல் இயேசு கிறிஸ்து விண்ணுக்கெழந்து போகும் போது சீஷர்களுக்கு கொடுத்த வாக்கு இங்கே நிறைவேற்றப்படுகிறது.(பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து ....பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.) 

பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக் கூடாரத்தில் ஆண்டவரின் பிரசன்னம் நிரப்பப்பட்டது போல (“அப்பொழுது மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடியது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.” யாத்திராகமம் 40:34)

தூய பவுல் புதிய ஏற்பாட்டு சபையாக நம்மை குறித்து பேசுகிறார். ( “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், தேவனுடைய ஆவியானவர் உங்களிடத்தில் வாசமாயிருக்கிறார் என்றும் அறியீர்களா?” 1 கொரிந்தியர் 3: 16). அப்படியென்றால் நமக்குள் தூய ஆவியானவர் வாசம் பண்ண விரும்பி நம்மை ஆட்கொண்டு பலப்படுத்துகிறார்.
 
வெவ்வேறு பாஷைகளிலே பேச தொடங்கினார்கள்... ஆதித்திருச்சபையின் சீடர்கள் என்ன பேசினார்கள் என்பதை வசனம் 11ன் பின்பாகம் குறிப்பிடுகிறது. தேவனுடைய மகத்துவங்களை பேச கேட்கிறோமே...

6. இறையியல் & வாழ்வியல்
ஆட்கொண்ட ஆவியானவரின் மகத்துவங்களை பேசவே இன்றைய திருச்சபையிலே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். தைரியமாய் ஆண்டவரை பிரசங்கிக்கவே ஆவியானவர் நம்மை ஆட்கொண்டிருக்கிறார் நம்மை பலப்படுத்துகிறார் அவருடைய மகத்துவங்களை ஆவியானவரின் பலத்தோடும் சாட்சியோடும் அறிவிப்போம்.

7. அருளுரை குறிப்புகள்:
1. ஆட்கொள்ளப்படுதல் (நிரப்பப்படுதல்)
2. தூண்டப்படுதல்
3. செயல்படுதல்

எழுதியவர்:
சகோ. இம்மானுவேல்
CSI Diocese of Tirunelveli 

Post a Comment

0 Comments