இன்று மே மாதத்தின் முதல் நாள். இன்றைய நாளில் புனித யோசேப்பை தொழிலாளர் என நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். பல நாடுகளில் இன்றைய நாள் ‘மே தினம்’ அல்லது ‘உழைப்பாளர் தினம்’ என்று கொண்டாடப்படுகிறது. ‘மனிதர் என்பவர் உழைப்பாளர்’ என வரையறுத்தார் கார்ல் மார்க்ஸ். படைப்பின் தொடக்கத்தில் உழைப்பு என்பது நம் தலைமேல் வைத்து அமுக்கப்பட்ட முள்முடி எனத் தோன்றினாலும், உழைப்பின் வழியாகவே நாம் ஒவ்வொருவரும் நமக்கும் மற்றவருக்கும் மணிமுடி சூட்டுகிறோம். இச்சூழலில் நம் புனிதர் நமக்கு எப்படி பொருள் தருகிறார்?
திருத்தந்தை 12-ஆம் பயஸ், 1 மே 1955 அன்று இத்தாலியக் கத்தோலிக்கத் தொழிலாளர்கள் கொண்டாட்டத்தில் ஆற்றிய உரையில், ‘நாசரேத்தில் வாழ்ந்த எளிய தொழிலாளர் யோசேப்பு’ என்று அவரை அழைத்தார்.
யோசேப்பு ஒரு தொழிலாளர் என்பதற்கு கிரேக்க மொழியில் ‘டெக்டோன்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘உழைப்பாளி,’ ‘தச்சர்,’ ‘கொத்தனார்’ என்று நாம் எப்படி பொருள் கொண்டாலும், ‘டெக்டோனின்’ பணி கைகளைச் சார்ந்தது. கைகளைப் பயன்படுத்தியே இவர் உழைக்கிறார். கைகள் பயன்பாட்டுடன் அறிவுப் பயன்பாடும் இணைந்தே செல்கிறது. குறிப்பாக தச்சுத் தொழிலில் மரத்தின் தன்மையைக் கணிப்பதற்கும் அளவிடுவதற்கும் மூளையின் பயன்பாடு அவசியமானது.
யோசேப்பைப் பொருத்தவரையில், ‘உழைப்பு என்பது பொறுப்புணர்வு’ – தன் உழைப்பைக் கொண்டே அவர் மரியாவுக்கும் இயேசுவுக்கும் உணவு தருகிறார். ‘உழைப்பு என்பது கீழ்ப்படிதல்’ – ஒவ்வொரு நிகழ்விலும் தன் எண்ணம் விடுத்து கடவுளின் திருவுளத்திற்குப் பணிகிறார். ‘உழைப்பு என்பது புனிதமாக்கல்’ – அவருடைய அன்றாட வேலையே இறைவேண்டலாக மாறுகிறது.
‘தந்தையின் இதயத்தோடு’ (2020) என்னும் திருத்தூது மடலில், ‘யோசேப்பு உழைக்கிற தந்தை … உழைப்பு மனிதருக்கு மாண்பு தருகிறது’ என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
படைப்பின் தொடக்கத்தில் மனிதர்களாகிய நாம் நம் கைகளைப் பயன்படுத்தி உழைத்தோம். பின் கைகளின் நீட்சிகளாகக் கருவிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினோம். மின்சாரம் கண்டுபிடிப்பு, தொழில் புரட்சி, இயந்திரங்களின் உருவாக்கம் என்று உழைப்பு சற்றே எளிதானது. கணினி, மின்னணு, இணையதளம் வந்தவுடன் உழைப்பு இன்னும் எளிதானது. இப்போது நாம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு மனித உழைப்பு பற்றிய பார்வையை மாற்றிவிட்டது.

0 Comments