திருவசன தியானம் 2026
1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: திரித்துவ திருநாள் பின்வரும் 7 ஆம் ஞாயிறு
தேதி: 19/07/2026
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
2. திருவசனம்
தலைப்பு: அர்ப்பணிப்புள்ள ஆசாரியத்துவம்
இருப்பிடம்: மத்தேயு 20.28
திருவசனம்:
(பவர் திருப்புதல்) "மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படிக்கு வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்."
(திருவிவிலியம்)
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
குருத்துவ ஞாயிறு
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்: மத்தேயு
அவையோர்:
யூத கிறிஸ்தவர்கள்
வசன பின்னணி:
செபெதேயுவின் குமாரருடைய தாயார் தன் பிள்ளைகளுக்கு இயேசுவின் அரசில் முக்கிய இடங்களைக் கேட்டு விண்ணப்பிக்கிறார். மற்ற சீடர்களுக்கு இதில் அதிருப்தி ஏற்படுகிறது. உலகத்தில் உயர்ந்தவர்கள் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவதைப் போல, தம்முடைய சீடர்கள் இருக்கக்கூடாது என்று இயேசு போதிக்கிறார்.
5. திருவசன விளக்கவுரை
இயேசு தன்னை 'மனுஷகுமாரன்' என்று குறிப்பிடுவது தானியேல் 7:13-14-ல் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தை நினைவூட்டுகிறது. அவர் அதிகாரத்திற்குரியவர், ஆனால் அந்த அதிகாரத்தை ஆதிக்கத்திற்காகப் பயன்படுத்தாமல், சேவை செய்வதற்காகவே பயன்படுத்துகிறார்.
வார்த்தையின் பொருள் – "ஊழியஞ்செய்ய"
கிரேக்கம்: Diakoneō (διακονέω)
அதாவது தாழ்மையுடன், அன்போடு, பிறரின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்து சேவை செய்வது ஆகும்.
இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள "மீட்கும்பொருளாக" (Ransom) என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது. அக்காலத்தில் அடிமைகளை விடுவிக்க ஒரு விலை கொடுக்கப்பட வேண்டும். மனுக்குலத்தை பாவம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்க, இயேசு தன்னையே ஒரு ஈட்டுத் தொகையாக (விலையாக) வழங்குகிறார் என்பதை இது குறிக்கிறது.
இயேசு கிறிஸ்து உண்மையான தலைமை என்பது அதிகாரம் செலுத்துவதல்ல; தாழ்மையுடன் பிறருக்காக சேவை செய்வதே என்று தமது வாழ்வின் மூலம் கற்பிக்கிறார். அவர் தமது உயிரையே மனிதருக்காக அர்ப்பணித்தார்.
கிறிஸ்துவின் ஆசாரியத்துவம் அதிகாரத்தில் அல்ல; தியாகமுள்ள சேவையிலே நிறைவேறுகிறது.
6. இறையியல் & வாழ்வியல்
ஆசாரியத்துவம் என்பது ஒரு பதவி அல்ல; அது ஒரு அர்ப்பணிப்பான சேவை அழைப்பு என்பதை நினைவூட்டுகிறது. ஒரு உண்மையான குரு மக்களிடையே இருந்து, துன்பப்படுகிறவர்களை ஆறுதல்படுத்தி, தேவவார்த்தையை உண்மையோடு அறிவித்து, கிறிஸ்துவின் தாழ்மையை வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும். சேவையே ஆசாரியத்துவத்தின் அடையாளம்; தியாகமே அதன் மகிமை.
கிறிஸ்துவைப் போல சேவை செய்யும் ஆசாரியரே, தேவனுடைய இருதயத்தை பிரதிபலிக்க வேண்டும்.
அதேபோல், சபை மக்களும் தங்கள் குருமார்களுக்காக ஜெபித்து, அவர்களுடன் இணைந்து தேவனுடைய ஊழியத்தில் பங்கெடுக்க வேண்டும்.
7. அருளுரை குறிப்புகள்
1. மனுஷ குமாரன் - மக்களில் ஒருவராக
2. ஊழியம் செய்ய - மக்களுக்காக பணிவிடை
3. மீட்கும் பொருள் - மக்களுக்காக தியாகம் செய்ய
குருத்துவ ஞாயிற்றுக்கிழமையில் நமது போதகர்களுக்கும் குருமார்களுக்கும் நன்றி செலுத்துகிறோம்!!!
எழுதியவர்
கோயில்பிள்ளை
இறையியல் மாணவர்

0 Comments