பிறப்பு: காலம் குறித்த தகவலில்லை
மகதலா, யூதேயா
(Magdala, Judea)
இறப்பு: தகவலில்லை
பிரான்ஸ் அல்லது எபேசஸ்
(France or Ephesus)
சிறப்பு: அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலர்:
(Apostle to the Apostles)
நினைவுத் திருவிழா: ஜூலை 22
புனிதர் மகதலின் மரியாள், புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் பிற சீடர்களில் ஒருவராக இயேசுவுடன் பயணித்த யூதப் பெண் ஆவார். இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள மகதலாவின் மரியாள் எனப் பொருள்படும்.நான்கு நற்செய்தி நூல்களுல், பிற அப்போஸ்தலர்களைவிட, சுமார் 12 தடவைக்கும் அதிகமாக இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயேசு அவரை "ஏழு பிசாசுகளிடமிருந்து" காப்பாற்றியதாக, (லூக்கா 8:2 & மாற்கு 16:9) கூறப்படுகிறது.
இவர் வேறு பல புண்ணிய பெண்களோடு இயேசுவைப் பின்சென்று அவருக்கு சேவை செய்து வந்தார். இயேசு தனக்குச் செய்த உதவிகளுக்கு நன்றியாக, இவர் தனது உடமைகளைப் பயன்படுத்தி, அவருக்குச் சேவை செய்தார். சாகும்வரை அவருக்குப் பிரமாணிக்கமாய் இருந்தார்.
மகதலின் மரியாள் இயேசுவின் கடைசி நாட்களில் - பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை கூடவே இருந்தார்; அவரை சிலுவையில் அறைந்தபோது, (அன்பிற்குரிய யோவானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும், பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். அன்னை மரியாளுக்குப் பிறகு, இயேசுவின் அருகில் எப்போதும் அவருக்காக வாழ்ந்தவர்.
கல்லறை வெறுமனே இருப்பதை முதன்முதலில் பார்த்து, இயேசுவை காணவில்லையே என்று ஆதங்கப்பட்டு, கண்ணீர் விட்டு அழுது, இயேசுவை பற்றிக்கொண்டவர் இவர்.
உயிர்த்த இயேசுவைக் காணும்வரை இவர் இளைப்பாறவில்லை. "அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்? நான் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வேன்" என்றார். அவரைத் தூக்கிச் செல்ல இவரால் முடியாதென்றாலும், இச்சொற்கள் இவரது அன்பைக் காட்டுகின்றன.
உயிர்த்த இயேசு முதலில் காட்சி கொடுத்தது இவருக்கே. யோவான் 20 மற்றும் மாற்கு 16:9 ஆகிய இரு நற்செய்தியாளர்கள் கூற்றுப்படி, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, முதலில் அவரைக் கண்டதும் மகதலின் மரியாளேயாவார். "என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே" என்று ஆண்டவரே கூறுமளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசுவைப் பற்றிக்கொள்வதில் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை திகழ்கிறார்.

0 Comments