Ad Code

நட்பில் காமம் இல்லை • No Lust in Friendship

நட்பில் காமம் இல்லை: வேதாகமப் பார்வையில் ஓர் ஆய்வு

மனித உறவுகளில் மிகவும் உயரியதும், தூய்மையானதும் நட்பு ஆகும். அது எவ்வித எதிர்பார்ப்புகளும், உடல் சார்ந்த இச்சைகளும் அற்ற ஒரு ஆன்மீக மற்றும் மனரீதியான இணைப்பு. வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நல்ல நட்புகள் அனைத்தும் சுயநலமற்ற, தூய்மையான அன்பின் வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன.
 
1. அன்பின் இயல்பு: அகாபே மற்றும் பிலியா
வேதாகமத்தின் மூல மொழியான கிரேக்கத்தில் அன்பை விவரிக்கப் பல சொற்கள் உள்ளன.
• எரோஸ் (Eros): காமம் அல்லது உடல் சார்ந்த ஈர்ப்பு.
• பிலியா (Philia): தூய்மையான நட்பு மற்றும் சகோதர அன்பு.
• அகாபே (Agape): நிபந்தனையற்ற, தெய்வீக அன்பு.

வேதாகமம் கற்பிக்கும் நட்பு என்பது பிலியா மற்றும் அகாபே சார்ந்ததே தவிர, ஒருபோதும் எரோஸ் என்ற காமத்தோடு இணைந்தது அல்ல. உண்மையான நட்பு என்பது இக்கட்டான சூழ்நிலைகளிலும், துன்ப காலங்களிலும் தாங்கிப் பிடிக்கும் ஒரு பலமே தவிர, அது சரீர இச்சைகளைத் தீர்க்கும் வழிமுறையல்ல 

"சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இக்கட்டில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்." - நீதிமொழிகள் 17:17

2. தாவீது - யோனத்தான் நட்பு: தூய்மையான நட்பின் சிகரம்
வேதாகமத்தில் தூய்மையான நட்புக்கு மிகச் சிறந்த உதாரணம் தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே இருந்த நட்பு ஆகும். அவர்கள் இருவரின் ஆத்துமாவும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருந்தது. அரசுரிமையைப் பெற வேண்டிய யோனத்தான், தன் நண்பன் தாவீதுக்காகத் தன் உயிரையே பணையம் வைத்தார். 

தாவீது யோனத்தானின் மறைவுக்குப் பின் புலம்பும்போது, "உன் சிநேகம் எனக்கு மிகவும் அருமையாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப் பார்க்கிலும் உன் சிநேகம் அதிசயமாயிருந்தது" (2 சாமுவேல் 1:26) என்று கூறுகிறார்.
இங்கே "ஸ்திரீகளின் சிநேகத்தைப் பார்க்கிலும்" என்று குறிப்பிடப்படுவது, பாலின ஈர்ப்பு மற்றும் உடலார்ந்த அன்பைக் காட்டிலும், சுயநலமற்ற இந்த ஆன்மீக நட்பு மேன்மையானது என்பதைக் குறிக்கிறதே தவிர, அதில் காமம் இருந்தது என்பதைக் குறிக்கவில்லை.

"தாவீது சவுலோடே பேசி முடித்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய்ப் பிணைக்கப்பட்டது; யோனத்தான் அவனைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்தான்."- 1 சாமுவேல் 18:1


3..இயேசு கிறிஸ்துவும் சீடர்களும்: தோழமையின் உச்சம்
இயேசு கிறிஸ்து தம்முடைய சீடர்களை வேலைக்காரர்களாகப் பார்க்காமல், அவர்களைத் தம்முடைய "சிநேகிதர் (நண்பர்கள்)" என்று அழைத்தார். மேலும், மார்த்தாள், மரியாள், இலாசரு ஆகியோருடன் இயேசு கொண்டிருந்த நட்பும், இயேசுவின் சீடரான யோவான் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்ததாகக் கூறப்படும் நிகழ்வும் தூய்மையான அன்பின் அடையாளங்களே.

இயேசு காட்டிய நட்பு தியாகத்தின் அடிப்படையில் அமைந்தது. அதில் எந்தவித சுயநலமோ, உடலார்ந்த விருப்பங்களோ இல்லை. பிறருக்காகத் தன் உயிரையே கொடுக்கும் அளவுக்குத் தூய்மையான அர்ப்பணிப்பே நட்பின் இலக்கணம் என்பதை இயேசு தன் வாழ்நாளின் மூலம் நிரூபித்தார்.

 "ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் பார்க்கிலும் மேன்மையான அன்பு ஒருவரிடத்திலுமில்லை." - யோவான் 15:13

நிறைவாக...
வேதாகமப் பார்வையில், நட்பு என்பது இரு ஆத்துமாக்களுக்கு இடையே ஏற்படும் புனிதமான பிணைப்பு. அதில் சுயநலத்திற்கோ, உடலார்ந்த காம இச்சைகளுக்கோ இடமில்லை. வேதாகமம் காமத்தையும், மாம்சத்தின் இச்சைகளையும் நட்பிலிருந்து முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுகிறது. காமத்தைக் கடந்து, தியாகத்தையும் உண்மையான அன்பையும் அடிப்படையாகக் கொண்ட நட்பே இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட உயரிய உறவாகும். 


International Friendship Day Article 2026
By 
Meyego 
9486 810 915

Post a Comment

0 Comments