கனம். D. ஞானமுத்து ஐயா வரலாறு (சுருக்கம்)
Rev. D. Gnanamuthu Iyyah History
முன்னுரை
நாடார் குல இந்தியர்களில் முதல் குரு என்று போற்றப்படும் கனம். D. ஞானமுத்து ஐயா அவர்களின் பங்கு திருநெல்வேலி மிஷனரி வரலாற்றிலும், குறிப்பாக நல்லூர் சர்க்கிள் மற்றும் கோவிலூற்று தூய சிமியோன் ஆலய வளர்ச்சியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவர், எதிர்ப்புகளும் உபத்திரவங்களும் நிறைந்த காலக்கட்டத்தில் ஆண்டவரின் பணிக்காகத் தம்மையே அர்ப்பணித்த ஒரு விசுவாசப் போராளி.
1. இளமைக் காலம்
ஞானமுத்து இளம் பருவத்தில் இருக்கும்போது,திருநெல்வேலி காரங்காடு பகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமாகக் தன் பெற்றோருடன் இடம்பெயர்ந்து கேரளம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது,மிஷனரி ரேனியஸ் ஐயா (Missionary Rhenius) ஞானமுத்து அவர்களின் சுறுசுறுப்பைக் கண்டு அழைத்து, இறையியல் கல்லூரியில் படிக்க வழிவகுத்தார்.
2. ஆரம்பகாலப் இறைப்பணி
1845-இல் சபை ஊழியராக (catechist) நியமிக்கப்பட்டார். 1847 ஏப்ரல் 4 அன்று திருத்தொண்டர் (deacon) நிலைக்கான திருநிலைப்படுத்தலைப் பெற்றார். நாடார் சமுதாயத்திலேயே முதன்முதலில் திருநிலைப்படுத்தப்பட்ட (Ordained Priest) முதல் குருவானவர் B. ஞானமுத்து ஐயா ஆவார்.
3. சென்னையில் இறைப்பணி
1847 முதல் 1856 வரை சென்னையில் பணியாற்றினார்.
4. புலவனூர் சேகர குருவானவர்
1857 இல் நல்லூர் சர்க்கிளின் கீழ் புலவனூர் சேகரமாக போது, அங்கு முதல் குருவானவராக அருட்திரு. D. ஞானமுத்து ஐயா பொறுப்பேற்றார். 1857 முதல் 1869 வரை 12 ஆண்டுகள் புலவனூர் சேகர குருவானவராக பணியாற்றினார்.
4.1 புலவனூர் சபை பணிகள்
இவரது தீவிர முயற்சியினாலும் ஆத்தும பாரமுள்ள ஊழியத்தினாலும், 1861 ஆம் ஆண்டில் 52 பேர் ஞானஸ்நானம் பெற்று சபையில் அங்கம் வகிக்கும் அளவுக்குச் சபை வளர்ச்சி கண்டது.
ஞானமுத்து ஐயாவின் ஊழியப் பாதையில் 1862 ஆம் ஆண்டு பெரும் சவால்கள் குறுக்கிட்டன. இந்துத்துவா ஆதரவாளர்களால் புலவனூர் சேகர சபைகள் அனைத்தும் கடுமையான துன்பங்களைச் சந்தித்தன.அதே காலகட்டத்தில் கொடிய காலரா நோயும் பரவியதால், "கிறிஸ்தவத்தைத் தழுவியதால்தான் குல தெய்வம் கோபமடைந்து தண்டிக்கிறது" என்ற பொய்ப் பிரச்சாரம் பரப்பப்பட்டது.
பயத்தின் காரணமாகவும், பொய்ப் பிரச்சாரங்களினாலும் பல விசுவாசிகள் சபையை விட்டுப் பின்வாங்கிச் சென்றனர். இத்தனை இடையூறுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் கனம். ஞானமுத்து ஐயா சோர்ந்து போகவில்லை. பின்வாங்கிப் போன விசுவாசிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களின் விசுவாசத்தை மீண்டும் பலப்படுத்தினார்.
4.2. சங்கக் காணிக்கை அறிமுகம்
Rev. D. ஞானமுத்து அவர்கள் புலவனூர் சேகரத்தின் போதகராகப் பணியாற்றிய காலத்தில், திருச்சபையின் நிதி மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் 'சங்கக் காணிக்கை' முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தினார்.
4.3 கோவிலூற்று ஆலய கட்டுமானப் பணி
கோவிலூற்று கிராம முக்கிய பிரமுகர் திரு. மனுவேல் அவர்களின் மறைவுக்குப் பின் பாதியில் நின்றுபோன கோவிலூற்று ஆலய கட்டுமானப் பணியை மீண்டும் கையிலெடுத்துத் தொடங்கினார். (Rev. கிளார்க் ஐயாவின் சகோதரி கொடுத்த ₹465 காணிக்கை போன்ற உதவிகளோடு ஆலயப் பணியை முடுக்கிவிட்டார்).
இவரது தளராத முயற்சியால், 23.12.1868 அன்று காலை 11 மணியளவில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கோவிலூற்று ஆலயம் (65.5 அடி நீளம், 28 அடி அகலம்) நல்லூர் சர்க்கிள் குரு கனம். டிக்சன் ஐயாவினால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் 400 பேர் கலந்து கொண்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதிஷ்டை ஆராதனையில், 4 பேருக்குத் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) கொடுக்கப்பட்டது.
5. கோவிலூற்று சேகர குருவானவர்
1869 முதல் 1886 வரை கோவிலூற்று சேகர குருவானவராக 18 பணியாற்றினார். இங்கு அவர் தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார். மறுதலித்துப் போனவர்களில் 5 பேரை மீண்டும் சபையில் சேர்த்தார். மேலும், 77 பேரை ஞானஸ்நானத்திற்கு ஆயத்தப்படுத்தினார்.
நிறைவாக...
திருநெல்வேலி திருச்சபை வரலாற்றில், நாடார் சமுதாயத்தில் முதன்முதலில் திருநிலைப்படுத்தப்பட்ட (Ordained Priest) முதல் குருவானவரான கனம். D. ஞானமுத்து (Rev. D Gnanamuthu) ஐயா அவர்களின் குடும்பப் பாரம்பரியம் மற்றும் சமூகச் சேவையைக் கௌரவிக்கும் விதமாக பாளையங்கோட்டை நகரின் முக்கியச் சாலையான திருவனந்தபுரம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Complied by
Meyego
9486810915

0 Comments