சமூக விடுதலைப் பயணத்தில் கைகோர்ப்போம்
இந்திய தேசம் விடுதலைப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்தத் வேளையில், நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு உண்மை: அரசியல் ரீதியான விடுதலை கிடைத்துவிட்ட போதிலும், சமூக விடுதலை இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதாகும்.
1. பணக்காரன் - ஏழை
நாட்டின் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிவதும், பெரும்பான்மையான மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கே போராடுவதும் தொடர்கிறது. வறுமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகள் ஏழை எளிய மக்களை முழுமையாகச் சென்றடைவதில்லை.
அனைவருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளும், செல்வப் பகிர்வு முறையில் நீதியும் வழங்கப்பட்டால் மட்டுமே உண்மையான சமூக விடுதலை சாத்தியமாகும்.
ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
சங்கீதம் 82:3
2. மேல் ஜாதி - கீழ் ஜாதி
சட்டங்கள் பல இயற்றப்பட்டாலும், நடைமுறையில் சாதிய ஒடுக்குமுறைகளும், பாகுபாடுகளும், கௌரவக் கொலைகளும் இன்னமும் முழுமையாக ஒழியவில்லை. மனிதனை மனிதனாக மதிக்கவிடாமல் தடுக்கும் சாதியக் கட்டமைப்புகள் சமூக ஒற்றுமையைச் சிதைக்கின்றன.
சாதிய அடையாளங்களைக் கடந்து மனிதநேயம் மட்டுமே மேலோங்கும் மனமாற்றமும், சட்டத்தின் கடுமையான அமலாக்கமும் சமூக விடுதலையின் நீதிக்கு வழிவகுக்கும்.
கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை..... கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
கொலோசெயர் 3:11
3. ஆண் - பெண்
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறி வந்தாலும், சமூகத்தில் நிலவும் சில அவர்களை முடக்குகின்றன. பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் ஊதியத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் பாலின சமத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன.
பெண்களுக்கான சம உரிமையும், சம வாய்ப்பும், பாதுகாப்பான சூழலும் உறுதி செய்யப்படும்போது மட்டுமே நாடு முழுமையான விடுதலையை எட்ட முடியும்.
"ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்."
— கலாத்தியர் 3:28
இத்தகைய வேறுபாடுகள் இன்னும் சுதந்திர இந்தியாவில் மறையவில்லை. அரசியல் சுதந்திரம் என்பது நம் நாட்டின் தொடக்கப்புள்ளி மட்டுமே; சமூக விடுதலை என்பதே நம் பயணத்தின் இறுதி இலக்காகும். சமூக நீதியை நிலைநாட்டி, ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க கைகோர்த்து பயணிப்போம்.

0 Comments