தியானம் : 3 / 17.02.2022
தலைப்பு : ஆண்டவரும் போதகருமான நானே...
திருவசனம் : யோவான் 13.14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துக்கள். இறைமகன் இயேசுகிறிஸ்து தம் சீடர்களோடு கடைசி பஸ்காவை ஆசரிக்கும்முன் நடைபெற்ற சம்பவம் தான் யோவான் 15 ஆம் அதிகாரத்தின் முதல் பகுதியில் காணப்படுகிறது. இதன் வாயிலாக, ஆண்டவரும் போதகருமாகிய இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்கு தம் மாதிரியைத் கற்றுக்கொடுத்தார். அந்த அணுகுமுறைகள் (Approach) என்னவென்று அந்த இரண்டு பதங்களிலிருந்து இந்த தியானத்தில் தியானிப்போம்.
1. தலைமைத்துவ அணுகுமுறை
ஆண்டவரும் போதகருமாகிய நானே (13.14மு) என்ற பதங்கள் இயேசுகிறிஸ்துவின் தலைமைத்துவத்தை வெளிக்கொணருகிறது. குறிப்பாக ஆண்டவர் என்ற பதம் தலைவர் (Master, Owner, Sir) என்பதையும் குறிக்கிறது. சிறந்த தலைவரின் வெற்றி சிறந்த பணிவிடையில் இருக்கிறது. தன்னைக் காட்டிக்கொடுக்க போகும் யூதாஸ் காரியோத் மற்றும் மறுதலித்த பேதுருவின் கால்களையும் கழுவினார். ஏன் அவர் கழுவின பெரும்பாலான சீடர்களின் கால்கள் அவரது சிலுவை பாதையில் அவருடன் பயணிக்க முன்வரவில்லை. ஒரு தலைவர் என்பவர் பிறருக்கு பணிவிடை செய்ய தயங்கக் கூடாது என்றும் எதிராளியையும் அணைத்து செல்ல வேண்டும் என்றும் உணர்த்துகிறது. Leader is not a ruler, but a worker.
2. போதகத்துவ அணுகுமுறை
குருவாகிய இயேசு தம் சீடர்களுக்கு ஆணையை மட்டும் போடவில்லை. அதை தாமும் செயல்வடிவில் காட்டி அதன்படி செய்ய (13.14பி) கற்றுக்கொடுத்தார். ஒரு சீலையை எடுத்து அரையில் கட்டிக்கொண்டவராக தம் சீடர்களின் கால்களை கழுவி, அதினால் துடைத்தார் (13.4,5). தன்னைத் தான் தாழ்த்தி, தான் கைக்கொண்டதைப் போதித்த இயேசுகிறிஸ்து கற்பித்தலுக்கு சிறந்த உதாரணம். 'வேலியே பயிரை மேய்ந்தது போல' என்ற நிலைவராதவாறு, நல்ல முறையில் வாழ வேண்டும். Teacher is not a teller, but a guide.
நிறைவுரை
செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து, இந்தியா வந்த அன்னை தெரசாவும், இயேசுவின் அணுகுமுறைகளை கைக்கொண்டு, தனது மேன்மையை விட்டு, தம் வாழ்நாள் முழுவதும் தொழுநோயாளிகளுக்காக பணிபுரிந்தார். இயேசுவைப் பின்பற்றுகிற நாமும், நமது ஆஸ்தி, பதவி, கெளரவம், செல்வாக்கு, போன்ற எதுவும் நற்பணியாற்ற இடையூறாக வராமல் தடுத்து, இயேசுவைப் போல் வாழ்வோம். ஒருவருக்கு ஒருவர் நற்செயல்கள் செய்து மகிழ்வோம். இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments