Ad Code

மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலயம் | St. Paul's Church, Meignananapuram | மெஞ்ஞானபுர அசனம்

தென்தமிழகத்திலுள்ள, சி. எஸ். ஐ. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திலுள்ள மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலயம் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகும். இது தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் சாத்தான்குளத்திலிருந்து 10 கி.மீ கிழக்குத் திசையில் நாகா்கோவில் - திருச்செந்துாா் சாலையில் அமைந்துள்ளது. மேலும் இது நாசரேத் - உடன்குடி சாலையில் நாசரேத்திலிருந்து 11 கிமீ தெற்கில் அமைந்துள்ளது.

ஆலயத்தின் சிறப்பு

மெஞ்ஞானபுரம் கனம் சி. டி.இ. ரேனியஸ் ஐயரவா்களின் உழைப்பினால் உருவான கிராமமாகும். நெடுவிளை கிராமக் கோவில் பூசாரியின் மகனைப் பாம்பு கடித்து மரணத்தருவாயில் இருந்தபோது, கனம் ரேனியஸ் அவர்கள் மருத்துவ உதவி செய்ததால் அவன் உயிா் பிழத்தான். இதற்கு பின்னர் ஒவ்வொருவராக இரட்சிக்கப்பட்டு, முழு கிராமமும் கிறித்துவத்திற்கு மாறியது. இந்து கோயில் இருந்த இடத்தில், ஜெர்மானிய பாணியிலான தேவாலயம் கட்டப்பட்டது. மார்ச் 7, 1830 இல் ரேனியஸ் "நெடுவிளை" என்ற பெயரை உண்மையான ஞானம் என்ற அர்த்தத்தில் "மெஞ்ஞானபுரம்" என மாற்றினாா்.

1837-இல் மெஞ்ஞானபுரம் வந்த கனம் ஜான் தாமஸ் அவர்கள், கிராமத்தை புதியதாக கட்டமைத்ததுடன் ஆலயத்தையும் மிக நேர்த்தியாக வடிவமைத்தார். 20.06.1847 அன்று புதிய ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1868 ஆம் ஆண்டில், 192 அடி உயரமுள்ள கோபுரம் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கனம் ஜான் தாமஸ் ஐயா இறந்த பொழுது இந்த ஆலயத்தின் ஒரு மூலையில் அடக்கம் செய்யப்பட்டாா். கனம். ஜான் தாமஸ் மிஷனரி குறித்து வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அசனப் பண்டிகையின் சிறப்பு

மெஞ்ஞானபுர அசனம் என்றாலே வியாழன்கிழமை தான். ஒவ்வொரு ஆண்டும் அதே பராம்பரிய மரபின்படி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அசனப்பண்டிகை நடைபெறும் நாளுக்கு முந்தின நாளான புதன்கிழமை காலை 11 மணிக்கு அசன வைபவ மங்களகால் நடுதல் என்ற சிறப்பான பாரம்பரிய நிகழ்வு நடைபெறுகிறது. மறுநாள் வியாழன்கிழமை அதிகாலை பிரதிஷ்டை பண்டிகை பிரதான வழிபாடு நிறைவுற்றப் பின்னர், காலை 6 மனிக்கு உலை ஏற்றும் வைபவம் நடைபெறும். அன்று மாலை 3 மணிக்கு அசன விருந்து தொடங்குகிறது.

இந்த பண்டிகைக்கு கிராமவாசிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்கின்றனர். இயற்கையான முறையில் அங்கு உணவு தயாரிக்கப்பட்டு எல்லாருக்கும் வழங்கப்படுவது தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இரவு வானவேடிக்கையோடு பண்டிகை கொண்டாட்டம் நிறைவு பெறும்.

Post a Comment

1 Comments

John Peter said…
👏👏👏👏👏👏👏👏👌👌