Ad Code

கனம் ஜான் தாமஸ் மிஷனரி வரலாறு | Rev. John Thomas (1808-1870)

முன்னுரை
அயர்லாந்து நாட்டில் பிறந்து இந்திய நாட்டின் தென் பகுதியில் இறைப் பணி மற்றும் சமூகப் பணியாற்றிய கனம். ஜான் தாமஸ் மிஷனரி அவர்கள் வாழ்க்கை வரலாறு இதோ...
 
ஆரம்ப கால வாழ்க்கை 
ஜான் தாமஸ் அவர்கள் அயர்லாந்து தேசத்தில் 1807 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ம் நாள் செல்வ செழிப்போடு இருந்த தாமஸ் மற்றும் பிரான்சஸ் என்ற தம்பதியினருக்கு பிறந்தார். சிறுவயதிலேயே மிகவும் பக்தியிலும் ஒழுக்கத்திலும் வளர்க்கப்பட்டார். 

ஜான் தாமஸ் அவர்கள் தன்னுடைய 19 ம் வயதில் ஒரு சிறந்த வழக்கறிஞராக வர விரும்பினார். ஆகவே அயர்லாந்தில் புகழ்பெற்ற சட்ட கல்லூரியில் பயின்று வழக்கறிஞராக தேர்ச்சி பெற்று பணி செய்து கொண்டு இருந்தார். தன்னுடைய வாலிய பருவத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நற்செய்திபணியை அறிவிப்பதிலும் நாட்டம் கொண்டவராய் இருந்தார்.

மிஷன் பணிக்கு அர்ப்பணிப்பு
இந்நிலையில் ஜான் தாமஸ் அவர்கள் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட Church Mission Society (சர்ச் மிஷன் சொசைட்டி) மூலம் 1827 ம் ஆண்டு அயர்லாந்திலுள்ள லாம்பீல்டு என்ற இடத்தில் நடத்தப்பட்ட மிஷனெரி அறைகூவலில் இயேசுவின் நற்செய்திபணியை முழுநேரமாக செய்ய ஆண்டவர் அழைப்பதை உணர்ந்து மிஷனெரி பணிக்கு தன்னை அர்பணித்தார்.

ஆகவே தான் பார்த்துக்கொண்டிருந்த வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு லண்டனில் 1833 ம் ஆண்டு ஜான் தாமஸ் அவர்கள் அங்குள்ள வேதாகம கல்லூரியில் இறையியல் கற்றுக்கொள்வதற்காக சேர்ந்தார். அங்கு எபிரேயம், கிரேக்கு மற்றும் இலத்தீன் மொழிகளை கற்று வேதாகமத்தை நன்கு போதிக்கும் அளவிற்கு கற்று தேர்ந்தார். பின்னர் ஜாண் தாமஸ் அவர்கள் வேதாகம கல்லூரி படிப்பை முடித்துவிட்டு 1836 ம் ஆண்டு ஜுன் மாதம் 5 ம் நாள் இங்கிலாந்தில் குருவானவராக அருட்பொழிவு பெற்றார்.

மிஷன் பணியின் ஆரம்ப காலம்
1836 ஆம் ஆண்டு CMS மிஷன் மூலம் ஜான் தாமஸ் அவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆறு மாதங்களில் தமிழ்மொழியை கற்றுக்கொண்டு பின்னர் தென் தமிழகமான திருநெல்வேலிக்கு அருகே 18 மைல் தொலைவிலுள்ள மெஞ்ஞானபுரம் என்ற கிராமத்திற்கு 1837 ம் ஆண்டு பிப்ரவரி 5 ம் நாள் நற்செய்திபணி அறிவிக்க வந்து சேர்ந்தார். 

ஜான் தாமஸ் அவர்களுக்கு பல தாலந்துகளை கர்த்தர் கொடுத்திருந்தார். ஆகவே சிறந்த வழக்கறிஞராக, போதகராக, சுவிஷேசகராக, திறமையான ஆசிரியராக, நிர்வாக துறையிலும், மருத்துவ கல்வி பயிலாமலே நல்ல மருத்துவ ஞானம் மிகுந்தவராகவும், பல மொழிகளில் நன்கு பாடுபவராகவும் அத்துடன் பொறியியல் துறையிலும் சிறந்து விளங்கி, சிறப்பான பேச்சாளராகவும், நல்ல ஒழுக்கம் மற்றும் கண்டிப்பு குணம் நிறைந்தவராகவும் சிறந்து விளங்கினார். இவையெல்லாம் அவருடைய நற்செய்திபணிக்கு மிகவும் உதவியாக இருந்தது.

குடும்ப வாழ்க்கை
ஜான் தாமஸ் அவர்கள் 1838 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ம் நாள் சென்னையில் மிஷனெரியாக பணியாற்றிக்கொண்டிருந்த மேரி டேவிஸ் என்ற பெண்ணை சென்னையில் வேப்பேரி ஆலயத்தில் திருமணம் செய்து கணவனும் மனைவியாக மெஞ்ஞானபுரத்தின் சுற்று வட்டாரங்களில் பல கிராமங்களுக்கு நடந்துசென்றே நற்செய்திபணியை செய்தார்கள். 

1839 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ம் தேதி ஜாண் டேவிஸ் என்ற மகனும் 1842 ம் ஆண்டு ஜுன் மாதம் 9 ம் நாள் மேரி ஜேன் என்ற மகளும் 1847 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ம் நாள் பிரான்சுஸ் என்ற மகளும் இவர்களுக்கு பிறந்தனர்.

மெஞ்ஞானபுரம் - மாதிரி மிஷன் கிராமம்
ஜான் தாமஸ் அவர்கள் நற்செய்திபணி அறிவித்த பகுதிகள் தரிசு நில பகுதிகளாக இருந்தமையால், அங்குள்ள மக்களின் பொருளாதார வாழ்க்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆகவே ஜாண் தாமஸ் அவர்கள் அங்கிருந்த மண்ணை ஆராய்ச்சி செய்து, நிலத்தை பண்படுத்தி, கிணறுகள் வெட்டி, நிலத்தின் தன்மைக்கு ஏற்ற மரங்களை நட்டு, நிழல் தரும் மரங்களை நட்டு, கிராமங்கள் சுத்தப்படுத்தி, குடிசை வீடுகள் எல்லாவற்றையும் இடித்துவிட்டு, தெருக்களை ஒழுங்கு படுத்தி, தெருக்களின் இரண்டு பகுதியிலும் தென்னை மரம், வேம்பு மரம் போன்ற பல வகையான மரங்களை நட்டு மெஞ்ஞானபுரத்தை பூஞ்சோலை கிராமமாக மாற்றினார்.

ஜான் தாமஸ் அவர்களின் சேவையை கண்ட பனை மரம் ஏறும் சாணார் இன மக்கள் முதலில் இயேசுவின் நற்செய்தியை கேட்க வாஞ்சை கான்பித்தார்கள். பின்னர் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆகவே அவர்களுக்கு என்று ஒரு சிறிய ஆலயத்தை மெஞ்ஞானபுரத்தில் கட்டினார். 

கல்விப் பணி 
மெஞ்ஞானபுரம் கிராமத்தில் இருந்த பிள்ளைகளுக்கு என்று 1844 ல் கல்விக்கூடத்தை ஆரம்பித்தார். அநாதை பிள்ளைகள் மற்றும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மக்களின் பிள்ளைகளுக்கு என்று விடுதிகளையும் கட்டினார். இதனால் அநேக இந்து மக்களும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர்கள் பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஜான் தாமஸ் அவர்கள் கல்விகூடத்தில் கிறிஸ்தவ நன்னெறியும், வேத போதனை, ஆங்கில இலக்கணம், தமிழ், கணிதம், சரித்திரம் மற்றும் மேலைநாட்டு அறிவியல் பாடங்களையும் கற்று கொடுத்தார். அங்கு பயின்ற மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினர்.

கிறிஸ்தவத்தின் வளர்ச்சிப் பணிகள் 
ஜான் தாமஸ் அவர்கள் அங்கிருந்த ஒவ்வொரு கிராமங்களுக்கும் பஞ்சாயத்து முறைமைகளை ஏற்படுத்தி, புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தார். ஆகவே மெஞ்ஞான புரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அநேக மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஞானஸ்நானம் கொடுத்து காலையிலும் மாலையிலும் ஆராதனை முறைகளை ஏற்படுத்தினார். 

ஆலயத்தில் ஆராதனை நடத்துவதற்கு என்று உபதேசியார்களையும் நியமித்து அவர்களை கிறிஸ்துவை பற்றிய விசுவாசத்தில் பலப்பட செய்தார். ஜாண் தாமஸ் அவர்கள் ஆரம்பம் முதலே மக்களின் மலிந்து கிடந்த சீர்கேடுகளை கண்டித்து திருத்தினார். பாவத்தை உணர்ந்து திருந்திய மக்களை மட்டுமே திருச்சபையில் இனைத்துக்கொண்டார்.

கிறிஸ்தவ ஈகைப் பண்பை வளர்த்தல்
ஜான் தாமஸ் அவர்கள் கிறிஸ்தவ ஈகை என்னவென்று தெரியாமல் இருந்த காலத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனைக்கு முதல்மணி அடித்தவுடன் கையில் காணிக்கை தட்டை ஏந்தியவாறு அதில் காணிக்கை காசுகளுடன் வாசலில் நின்றிருப்பார். ஆலயத்திற்கு வரும் ஒவ்வொருவரிடமும் காணிக்கை இருக்கின்றதா? என்று கேட்டு இல்லை என்றால் ஒரு நாணயத்தை எடுத்துக்கொடுத்து, காணிக்கை படைக்க கற்றுக்கொடுத்தார். இப்படியாக பின்நாட்களில் ஒவ்வொருவரும் ஆலயம் வருப்போது கைகளில் காணிக்கை காசுகளோடு ஆலயத்திற்கு வந்தனர்.

உபத்திரவத்தில் வளர்ந்த சபைகள்
ஜான் தாமஸ் அவர்களின் நற்செய்தி பணியையும் சமுதாய சீர்திருத்த பணிகளையும் பார்த்துக் கொண்டிருந்த இந்துமத பூசாரிகள் இவருடைய நற்செய்திபணிகளுக்கு கடும் இடையூறு விதித்தார்கள். ஆங்காங்கே கூறைவீடுகளால் கட்டப்பட்டிருந்த ஆலயங்களை தீயிலிட்டு கொளுத்தினார்கள். கிறிஸ்தவர்களின் வீடுகளையும், உடைமைகளையும், அவர்களுடைய விளை நிலங்களையும் நாசப்படுத்தினார்கள். மதம் மாறிய கிறிஸ்தவர்களின் வாழ்வாதாரமாக இருந்த பனை ஏறும் தொழிலில் இருந்தும், விவசாய தொழில்களில் இருந்தும் அவர்களை விலக்கி வைத்தார்கள். மேலும் அவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள். இவைகளையெல்லாம் கிறிஸ்தவர்கள் பொறுமையாக சகித்துக்கொண்டார்கள். துன்பமான நேரங்களில் தேவனை இன்னும் உறுதியாக பற்றிக்கொண்டு விசுவாசத்தில் பலப்பட்டார்கள். ஒருவரும் கிறிஸ்துவைவிட்டு பின்வாங்கவில்லை. இது இந்துமத பூசாரிகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 1845 ம் ஆண்டு மெஞ்ஞானபுரத்திலும் அதின் சுற்று வட்டாரத்திலும் கடுமையான சூராவளி காற்று தாக்கியது. அத்துடன் காலரா நோயும், வாந்தி பேதி நோயும் பல கிராமங்களில் பரவ ஆரம்பித்தது. இவைகள் மக்களை மரண படுகுழியில் தள்ளியது. இதில் பல கிறிஸ்தவர்களும் மரித்தார்கள். இதற்கிடையே கடுமையான பஞ்சமும் தலைவிரித்து ஆடியது. இதனால் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு உண்டாயிற்று. எங்கு பார்த்தாலும் மரண ஒலங்கள் தான். இதில் ஜாண் தாமஸ் அவர்களின் மகள் மேரிஜேன் னும் குழந்தையாக இருந்த போது மரித்து போய்விட்டது.

இதற்கிடையே இந்துமத பூசாரிகள் இந்த பஞ்சம், பட்டினி, கொள்ளை நோய்களுக்கு மக்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதே காரணம் என்றும், இதனால் இந்துமத தெய்வங்கள் கோபப்பட்டு, சாபமிட்டதால் இந்த பேரழிவு உண்டானதாகவும், இதற்கு காரணம் ஜாண் தாமஸ் அவர்களே என்று குற்றம் சாட்டினார்கள். ஆகவே இந்துமத பூசாரிகள் இனி ஜாண் தாமஸ் அவர்கள் நற்செய்திபணியை செய்யக்கூடாது என்று அவருக்கு விரோதமாக வன்முறையில் ஈடுபட்டு, பயமுறுத்தினார்கள். ஆயினும் ஜாண் தாமஸ் அவர்கள் கொஞ்சம்கூட பயப்படாமல், தன் மகள் மரித்துப்போன சூழ்நிலையிலும் மனம் தளராமல், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரிடையாக சென்று, பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு என்று கடுமையாக உழைத்து பாதிக்கப்பட்ட கிராமங்கள் எல்லாவற்றையும் புணரமைப்பு செய்தார்.

பெண்கள் நலவாழ்வு பணிகள்
ஜான் தாமஸ் அவர்களின் மனைவி மேரி டேவிசும் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு என்று சுய உதவி குழுக்களை உறுவாக்கி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தினார்கள். பெண்களுக்கு கல்வி அறிவு கொடுப்பதற்காக மெஞ்ஞானபுரத்தில் ஒரு பாடசாலையை ஏற்படுத்தினார். 
ஜாண் தாமஸ் அவர்களும் மேரி டேவிஸ் அம்மையாரும் இன்னும் முழுபலத்தோடு நற்செய்தி பணியையும், சமுதாய பணிகளையும், பெண்கள் முன்னேற்ற பணிகளையும் கண்ட அநேக கிராமத்து மக்கள் இயேசுக்கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.

மெஞ்ஞானபுரம் ஆலய கட்டுமானப் பணி
ஜான் தாமஸ் அவர்கள் மெஞ்ஞானபுரத்தில், அநேகர் கிறிஸ்தவர்கள் ஆனதால் ஆண்டவரை ஆராதிப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் புதிய ஆலயம் கட்ட 1844 ம் ஆண்டு ஜுன் மாதம் 20 ம் நாள் அஸ்திபாரம் போட்டு பின்னர் அங்கிருந்த சிறிய ஆலயத்தை இடித்துவிட்டு, 1847 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ம் நாள் ஆலயத்தை கட்டிமுடித்து, அதற்கு துய பவுலின் ஆலயம் என்ற பெயரில் மங்கள பிரதிஷ்டை செய்யப்பட்டது. மெஞ்ஞானபுரம் ஆலயம் குறித்து மேலும் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஜாண் தாமஸ் அவர்கள் தூய. பவுலின் ஆலயத்தின் உபயோகத்திற்கு என்று பெரிய ஆலய மணியை, பிரத்தியேகமாக இங்கிலாந்திலிருந்து கப்பல் மூலமாய் கொண்டுவந்து பொருந்தினார். இந்த ஆலயத்தின் மணியோசை இரண்டு கிலோ மீட்டர் தொலைவுவரை கேட்கும் திறன் கொண்டதாய் இருந்தது.

கிறிஸ்தவ ஆலயங்கள் பெருகுதல் 
ஜான் தாமஸ் அவர்கள் வெள்ளாளன்விளை, ஆறுமுகநேரி, நாலுமாவடி, கடாட்சபுரம், காயாமொழி, பிரகாசபுரம், பண்ணவிளை, கிறிஸ்டியான் நகரம் போன்ற கிராமங்களில் பெரிய ஆலயங்கள் கட்டினார். சுப்பிரமணியபுரம், இராசாமணிபுரம், பூவரசூர் கிராமங்களில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே அங்கும் ஆலயங்கள் கட்டப்பட்டது.

மெஞ்ஞானபுரத்தின் சுற்று வட்டாரங்களில் 1857ம் ஆண்டு வரை கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை 5, 500 ல் இருந்து ஜாண் தாமஸ் அவர்களின் நற்செய்தி பணியின் மூலம்1869 ம் ஆண்டிற்குள் 45, 000 வரை உயர்ந்தது. 

ஜாண் தாமஸ் அவர்கள் 125 கிராமங்களில் நற்செய்திபணி அறிவித்து பின்னர் அங்கு ஆலயங்களை கட்டினார். அத்துடன் 54 கல்விக்கூடங்களையும் ஏற்படுத்தி மெஞ்ஞானபுரத்திலும் அதனை சுற்றியிருந்த கிராமங்களிலும் கல்வி அறிவை கொடுத்து அவர்களை ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்க செய்தார். ஆலயங்களில் உபதேசிமார்களை ஏற்படுத்தியும், நற்செய்திபணிக்கு என்று 54 சுவிசேஷகர்களை உறுவாக்கியும், திருச்சபை மக்களை கிறிஸ்துவுக்குள் பலப்படுத்துவதற்காக 12 குருவானவர்களையும் நியமித்தார். இவருடைய அயராத உழைப்பினால் திருச்சபைகள் நன்கு வளர்ச்சி பெற்றன.

இறுதிக் காலம் 
33 ஆண்டுகளாக ஓயாமல் உழைத்து, மெஞ்ஞானபுரத்திற்கும்அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் தன் வாழ்க்கையை அற்பணித்த ஜாண் தாமஸ் ஐயர் அவர்களின் சரீரம் 1865 ம் ஆண்டு மிகவும் பெலவீனப்பட்டது. ஆகவே அவருடைய நண்பர்களும் CMS ஸ்தாபனமும் இங்கிலாந்திற்கு போய் மருத்துவ சிகிச்சை பெற்று, இறுதி காலம்வரை இங்கிலாந்திலேயே குருவானவர் பணியை செய்ய வற்புறுத்தினார்கள். இதை ஏற்று சில மாதங்கள் அங்கு சென்ற ஜான் தாமஸ் அவர்கள், சற்று சுகம் பெற்றதும் மெஞ்ஞானபுரத்து மக்களின் அன்பையும், பாசத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல், தான் மரித்தாலும் தென் திருநெல்வேலி மக்கள் மத்தியிலே மரிப்பேன் என்று பிடிவாதமாய் மீண்டும் மெஞ்ஞானபுரத்திற்கே திரும்பி வந்து விட்டார். இதைக் கண்ட மக்கள் அவருடைய தியாகத்தை எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்.

ஜான் தாமஸ் அவர்களின் சரீரம் தொடர்ந்து பலவீனப்பட்டது. இந்நிலையில் 1870 ம் ஆண்டு மார்ச் மாதம் 27 ம் நாள் மரிக்கும் தருவாய்க்கு சென்றார். மெஞ்ஞானபுரத்தில் ஜான் தாமஸ் அவர்களின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் அவரை சூழ்ந்து நிற்க்கும்போது, தமக்கு கர்த்தர் கொடுத்த பணியைச் சிறப்புறச் செய்து முடிக்க அவர் கிருபை கொடுத்ததற்காக நன்றி செலுத்தி அவர்களோடு ஜெபித்தார். பின்னர் அவருடைய நாடி துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. பின்னர் மறுநாள் தன்னுடைய 62 ம் வயதில் 1870 ம் ஆண்டு மார்ச் மாதம் 28 ம் நாள் பிற்பகல் 3 மணிக்கு நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார். அவருடைய சரீரத்தை மெஞ்ஞானபுரத்தில் அவர் கட்டிய தூய பவுலின் ஆலயத்தின் கிராதி அறைக்கு வலப்பக்கம் நல்லடக்கம் செய்தார்கள். 

குடும்பத்தாரின் இறைப் பணி
1896 ம் ஆண்டுவரை ஜாண் தாமஸ் அவர்களின் மனைவி மேரி டேவிஸ் அம்மையாரும், அவருடைய மகன் ஜாண் டேவிஸ் மற்றும் மகள் பிரான்சுஸ் அவர்களும் மெஞ்ஞானபுரத்தில் தங்கி இருந்து நற்செய்தி பணியையும் அவர்கள் மூலமாய் நிறுவப்பட்ட எலியட் டஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை தொடர்ந்து நடத்தினார்கள். இந்நிலையில் மேரி டேவிஸ் அம்மையார் 1899 ம் ஆண்டு தன்னுடைய 88 ம் வயதில் நமதாண்டவரின் அழைப்பை பெற்று மறுமைக்குள் பிரவேசித்தார்கள். அவர்களின் மகன் ஜாண் டேவிஸ் மெஞ்ஞானபுரத்தின் இரண்டாம் மிஷனெரியாக இருந்து நற்செய்திபணியை தொடர்ந்து செய்துவந்தார்.

நிறைவாக....
ஜான் தாமஸ் அவர்கள் தென் நெல்லை அப்போஸ்தலன் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்றார். இவருடைய புகழ்பெற்ற வாசகம் "பண ஆசையை மேற்கொள்வதற்கு ஒரே வழி கொடுத்து உதவுவதாகும்" என்பதே. மெஞ்ஞானபுரம் இருக்கும்வரை ஜாண் தாமஸ் அவர்களின் நற்செய்திபணியும் சமுதாய பணியும் இதை சுற்றியுள்ள கிராம மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு ஜாண் தாமஸ் மெஞ்ஞானபுர பகுதியில் கோதுமை மணியாய் விதைக்கப்பட்டார்; ஆனால் இன்று இந்த பகுதிகளில் இருந்து அனேக மிஷனெரிமார்கள், சுவிசேஷகர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், வேத பண்டிதர்களாக முளைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். மெஞ்ஞானபுரத்தின் சுற்றுவட்டார மக்களுக்கு ஆண்டவர் கொடுத்த, மிஷனெரி குருவானவர் ஜாண் தாமஸ் அவர்களுக்காக நன்றி செலுத்தி, இறையரசின் பணியில் இணைந்து செயல்பட முன்வருவோம்.

Post a Comment

1 Comments

Anonymous said…
Thank you