Ad Code

15. துன்புறுவோருடன் இணைந்து கொள்வோம் | Together with the Persecuted | எஸ்தர் 4.14 Esther | திருமறை தியானம்

தியானம் : 15 / 06.03.2022
தலைப்பு : துன்புறுவோருடன் இணைந்து கொள்வோம்
திருவசனம் : எஸ்தர் 4.14 "நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்."

முகவுரை

இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். சூசான் நகரமே கலங்கியது. ஏனென்றால் அங்குள்ள யூதர்களை கொலை செய்யும்படி, ஆமான் என்வரின் சூழ்ச்சியினால் இந்த கட்டளை ராஜ அனுமதியோடு வந்தது. இதைக் கேட்ட, மொர்தெகாய் என்னும் யூதர், தன் சகோதரர் மகளாகிய எஸ்தர், இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண அழைப்பு கொடுக்கிறார். இவரின் ஆலோசனையின் பேரில் தான் எஸ்தரால், நூற்றிருபது நாடுகளை ஆண்ட ஆகாஸ்வேருவின் துணைவியாக முடிந்தது. இந்த எஸ்தர் ராஜாத்தியாக இருந்தாலும், எப்படி துன்புறுவோருடன் இணைந்து கொண்டாள் என்று தியானிப்போம்.

1. மன்றாட்டு ஜெபம்

துன்புறும் மக்களுக்காக, இறைவனிடம் மன்றாடுவது என்பது நாம் அவர்களின் துக்கத்தில் பங்கெடுப்பதாகும். யூத மக்களுக்கு உபவாசத்தை மூன்று நாட்கள் அறிவித்து, தானும் அதில் இணைந்து ஜெபித்தாள் (எஸ்தர் 4.16a). தற்போதைய முக்கிய செய்தியாக வரும் உக்கரைன் நாட்டிற்காக நம்மில் எத்தனை பேர் ஜெபித்து கொண்டிருக்கிறோம்?

2. முன்வந்து குரல் எழுப்புதல்

இந்த (4.14) வசனத்தில், "நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால்..." மொர்தெகாய் எஸ்தரை தன் மக்களுக்காக ராஜாவிடம் சென்று குரல் எழுப்ப அழைப்பு கொடுக்கிறார். அதை எஸ்தர் ஏற்றுக் கொண்டாள். இந்த இடத்தில் எஸ்தர் நினைத்தால் கூட ராஜாவை சந்தித்து பேசுவது கடினம். ஏனென்றால், ராஜா கொலு விருக்கும் ஸ்தானத்தில் இருந்தார். We have to raise our voices for the voiceless in the society. உங்கள் கிராமத்தில் நடக்கும் அநியாயத்திற்கு எதிராக குரல் எழுப்ப முடிகிறதா?

3. மனதார செயல்படுதல்

"...சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்..." (எஸ்தர் 4.16b) என்ற வார்த்தைகள் எந்தளவிற்கு முழு மனதோடு எஸ்தர் செயல்பட முன்வந்தாள் என்பதைக் காட்டுகிறது. தன் பதவி, புகழுக்காக, தன் முந்தைய மனைவியை தள்ளிவிட்ட இந்த ஆகாஸ்வேரு ராஜாவிடம் இவ்வளவு தைரியமாக சென்று தன் இன மக்களுக்காக பேசிட மனம் வேண்டுமல்லவா? மனமிருந்தால் மார்க்கமுண்டு.

நிறைவுரை

இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாக இருக்கும்படியாகவே, இந்த மேன்மை என்பதை உணர்ந்து கொண்டு எஸ்தரால், சூசான் நகரமே கலிகூர்ந்து மகிழ்ந்தது (எஸ்தர் 8.16). பிரச்சினை என்றால், ஒதுங்கி செல்வது நல்ல கிறிஸ்தவருக்கு அழகல்ல. இயேசு கிறிஸ்துவும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, குரல் எழுப்பினார்; நன்மைகள் செய்தார். எனவே நம்மோடு வாழ்பவர்கள், வேலை செய்பவர்கள் துன்புறும் போது, நமது நல்ல நடக்கையினால் அவர்களுடைய துன்பங்களில் பங்கெடுப்போம். இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments