தியானம் : 28 / 05.06.2022
தலைப்பு : விடுதலயாக்கும் ஆவியானவர்
திருவசனம் : 2 கொரிந்தியர் 3:17 கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். திருச்சபை வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாளாகிய ஐம்பதாம் நாள் என்னும் பெந்தெகொஸ்தே ஞாயிறாகிய தூயாவியாரின் திருநாளாகும். ஆதித்திருச்சபையில், ஈஸ்டருக்கு அடுத்த ஐம்பதாவது நாள், இயேசுவின் வாக்குப்படி, மேல்வீட்டறையில் காத்திருந்தோர் தூயாவியாரால் நிரப்பப்பட்ட நாளை திருச்சபை ஆசரிக்கிறது. "அவருடைய வித்தியாசமான செயல்பாடுகள் குறித்து வேதம் சொல்லுகின்றவற்றில், ஒன்று "விடுதலையாக்கும் ஆவியானவர்."
1. ஆண்டவரே ஆவியானவர்
திரித்துவத்தில் மூன்றாம் நபராக கருத்தப்படும் தூயாவியார் குறித்து ஆதியாகமம் 1.2 இல் வாசிக்கிறோம். ஆவியானவரை ஏதோ தந்தையாம் கடவுள் வேற பரிசுத்த ஆவியானவர் வேற என்று மூன்றாவது நபரைப் போலவோ, அஃறிணையில் குறிப்பிடுவதோ சரியானதல்ல. ஆவியானவர் ஒருவரே" (1 கொரி 12.4) என்றும் "கடவுள் ஆவியாயிருக்கிறார்" (யோவான் 4. 24) என்றும் திருமறை தெளிவாக கற்பிக்கிறது. ஆவியான கடவுளுக்கு ரூபம் ஒன்றுமில்லை என்பதே உண்மை.
2. ஆவியானவர் எங்கே இருக்கிறார்?
ஏந்திரத்தில் செயலாற்றும் விசை போன்று (Mechanical Force) எங்கிருந்தோ செயல்படும் பொருள் ஆவியானவர் அல்லர். "என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளன்" "அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால்..." (யோவான் 14:16,17). அவரை விசுவாசிக்கும் அனைவருக்குள்ளும் அவர் இருக்கிறார். ஆவியானவர் நம்மில் செயல்பட நம் மாம்சீக சுயத்தை வெறுத்து விட்டுக்கொடுப்போம்.
3. ஆவியானவர் அருளும் விடுதலை
நமது இரட்சிப்பின் விடுதலை வாழ்வில், சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்தி, பாவங்களை உணர்த்தியும், பாவ மன்னிப்பும் நிச்சயத்தை அருளுபவர் தூயாவியாரே. நம் விடுதலை வாழ்வில், தந்தை, மைந்தன், துயாவியாராகிய மூவொரு கடவுளின் வித்தியாசமான செயல்பாடுகள் பங்குவகிக்கின்றன என்றால் மிகையாகாது. நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலை, பாவத்திலிருந்து விடுதலை, சாபத்திலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை, என் சொல்லிக்கொண்டே போகலாம்.
நிறைவுரை
இந்த ஆண்டில், பெந்தெகொஸ்தே பண்டிகையை ஆசரிக்கும் நாம், ஆவியான கடவுள் நமக்குள் இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு, நித்தமும் விடுதலை வாழ்வில் மகிழ்வோம். எபேசியர் 1.14 சொல்லுகிறது, அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். இறையாசி உங்களோடிருப்பதாக.
1 Comments