Ad Code

பரிசுத்த பெத்தேல் ஆலய வரலாறு | மேலமெஞ்ஞானபுரம் | CSI Holy Bethel Church, Melameignanapuram Pastorate, CSI Tirunelveli Diocese

CSI Holy Bethel Church Melameignanapuram
 Copyright ©️ Meyego  

பூர்வநாட்களை நோக்கி…

இறைவன் படைத்த பாரின் ஆசியாவினிலே,
பரிசுத்த வேதம் எஸ்தரில் வரும் இந்தியாவிலே,  
பக்தன் தோமா குருதிச் சிந்திய தமிழ்நாட்டினிலே,  
மேற்கத்திச் சாரல் வீசும் தென்காசி மாவட்டத்தினிலே,  
மேலமெஞ்ஞானபுரம் என்னும் கிறிஸ்தவக் கிராமத்திலே,
நூறாண்டு கண்ட பெத்தேலின் ஆலயமே வாழிய வாழியவே!

“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது பழமொழி. “இறை வீடு” என்னும் பொருளில் “பரிசுத்த பெத்தேல் ஆலயம்” என்ற பெயருடைய, நூற்றாண்டு கண்ட அழகிய இறையாலத்தைக் கொண்ட மேன்மையான கிறிஸ்தவ கிராமம் மேலமெஞ்ஞானபுரம். வரலாற்று சிறப்புமிக்க இம்மண்ணின் மைந்தனாய், எம் இறையாலயத்தின் நூற்றாண்டு விழா மலரில், அதன் வரலாற்றை எழுதுவதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

கிராமத்தின் தோற்றம்
நம் ஆலயத்தின் வரலாறும், நம்மூரின் வரலாறும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. நம்முடைய கிராமத்தின் முன்னோடிகளான, மூதாதையரின் பூர்வீகம் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் அருகிலுள்ள பகுதியாகும். பிற சமயப் பக்தர்களான இவர்கள் பனையேறி குடும்ப வகையறாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் வீர விளையட்டுகளில் சிறந்து விளங்கியவர்கள். அன்றாட அடிப்படை தேவைகளைச் சந்திக்கும் வண்ணம் உழைத்து, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். சில வருடங்களுக்குப் பின் இப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, பனைகள் பாளையில்லாமல் பலனற்றுப் போனதால், சாப்பிட கஞ்சிக்குக் கூட திண்டாட்டம் வந்ததால், பலர் பிழைப்புக்கு வழி தேடி வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
 
சப்பாணி முத்து, பலவேசமுத்து, திருமலைவேல், ஆனந்தப்பன் மற்றும் மாசானம் ஆகிய ஐந்து பேரும் தங்கள் பகுதியிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, பல்வேறு இடங்களைக் கடந்து, திருநெல்வேலி தாமிரபரணியோரம் முக்கூடல் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். “பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்பார்கள். இவர்கள் வந்த கொஞ்ச நாட்களில் முக்கூடலில் மாபெரும் பஞ்சமுண்டானது. எனவே இவர்கள் இன்னும் மேற்கு நோக்கி பிரயாணப்பட்டு, இன்றைய இடைகால், வெள்ளிகுளம், கடையம், ஆகிய இடங்களைக் கடந்து வந்து, ஆவுடையானூரில் குடியேறினர். இங்கு அவர்களின் வாழ்க்கை முறையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது கோவில் கச்சேரிகளில் பங்கெடுத்து தங்கள் நாட்களைக் கழித்தனர். 

நாட்கள் உருண்டோடின. ஆவுடையானூரிலும் வறட்சி ஏற்பட்டது. அக்காலத்தில் ஒருவர் அங்கேயே இருந்து விட்டார். இன்னொருவர் மைலப்புரத்திற்கு இடம்பெயர்ந்தார். ஆகவே மீதமுள்ள மூவரும் வெண்ணீயூர் என்ற மடத்தூருக்கு வந்து, சிறிதுகாலம் அங்கேயே தங்கியிருந்தனர். பின்பு கொஞ்சம் மேற்கே வந்து, மக்கள் குடியிருக்க ஆரம்பிக்காத பனைமரங்கள் நிறைந்த அந்தக் காட்டில் நாடோடிகள் போல் வாழ்ந்தனர். அந்த இடத்திலேயே மூவரும் தங்க ஆரம்பித்து, பனைத் தொழில் செய்து வந்தனர். இந்த இடம் வாழ்வதற்கேற்ற இடம் என்றறிந்த மற்ற இருவரும் அவ்வண்ணமே சிறிதுகாலம் கழித்து இங்கு வந்து சேர்ந்தனர். காட்டூரார் என்ற அடைமொழியில் மற்றவர்கள் இவர்களை அழைத்தனர். ஐவராகிய பஞ்சாண்டவர்களின் வாழ்வு துளிர்க்க ஆரம்பித்தது.

Melameignanapuram
 பனை மரக் காடு 

மடத்தூர் தூய திரித்துவ ஆலயத்தில் உபதேசியராக பணியாற்றி வந்த ஆபிரகாம் உபதேசியார் அவர்கள் இந்த ஐவருடன் நல்ல நட்புறவுடன் பழகி வந்தார். அவர்களும் ஆபிரகாம் ஐயாவுடன் தினமும் பேசி பழகினர். ஐவரும் தங்கள் மார்க்க நம்பிக்கையில் தீவிரமானவர்களாக இருந்தாலும், அவர்களது வாழ்வின் முன்னேற்றத்தில் ஆபிரகாம் உபதேசியார் அன்புடன் கவனம் செலுத்தி வந்தார். அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு மட்டுமே வருமான ஈட்டிய அவர்களுக்கு, தெற்கூர் பண்ணையாரிடம் பேசி, அவர்களிடமிருந்த குறைந்த பணத்தை வைத்து, அவர்கள் தங்கியிருந்த இடத்தை சொந்தமாக வாங்க உதவி செய்தார். பரிசுத்த பெத்தேலின் ஆலயத்தை சுற்றிய 18.5 ஏக்கர் இடத்தை சுமார் 300 ரூபாய்க்கு விலைக்கிரயம் பேசி சொந்தாக வாங்கினர். அவர்கள் இந்த பகுதியை “இராமலிங்கபுரம்” என்றழைத்தனர். அதில் வீடுகள் கட்டவும், விவசாயம் செய்யவும், ஆரம்பித்து அங்கே வாழ்ந்து வந்தனர்.

முதல் ஓலைக்கோயிலின் தோற்றம்
ஆபிரகாம் உபதேசியாரின் முன்மாதியான வாழ்க்கை இவர்களை ஆண்டவர் அன்பிற்கு நேராக வழிநடத்தியது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இறையன்பு இயேசுவின் மூலமாக வெளிப்பட்டதுக் குறித்து ஆபிரகாம் உபதேசியாரும் ஐவரும் கலந்தாலோசித்து வந்தனர். ஆபிரகாம் உபதேசியார் சபை பொறுப்புகளைக் கவனித்து வந்த மடத்தூர் ஆலயத்திற்கு அவ்வவ்போது இவர்களும் செல்ல ஆரம்பித்தனர். கிறிஸ்துவின் அன்பை நாளுக்கு நாள் ருசிபார்த்து இறையருளால் மனம் மாற்றம் பெற்றனர். சில நேரங்களில் தாங்களாகவே கூடி,  இறைவனை வழிபட்டு வந்தனர். சில வருடங்களுக்குப் பின்பு, திருமுழுக்கு பெற்றனர்.  பக்கத்துவூரார் பெண் கொடுக்க சில வருடங்களில், திருமணங்கள் முடிந்து, மக்கட்பேறுகள் பெற்றெடுத்தனர். சில பெண் கொடுத்து எடுத்த வீட்டார், மற்றும் பிற ஊர்களிலுள்ளோர் வந்து குடியேற கிராமம் தழைக்க ஆரம்பித்து. இறை வாஞ்சையும், கிறிஸ்தவ பக்தியும் அவர்களில் காணப்பட்டது.

காட்டூர் என்றழைக்கப்பட்ட இராமலிங்கபுரத்தில் கிறிஸ்தவ்ர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக வளர ஆரம்பிக்க, தங்களுக்கென தனியே ஆலயம் வேண்டும் என்ற ஆசை இறைமக்களின் எண்ணங்களில் இருந்தது. இந்த ஆசையை ஆபிரகாம் உபதேசியாரிடம் தெரிவித்து, அதற்காக ஜெபத்துடன் செயல்பட ஆரம்பித்தனர். ஐவரில் ஒருவராகிய அதிசயமுத்து அவர்கள் தனது 9 செண்ட் இடத்தை ஆலயம் கட்டுவதற்காக கொடுக்க முன்வந்தார். இதிலிருந்து இந்த ஆசையானது இறைத்தூண்டுதலில் வெளிப்பாடே என்பது உறுதியாகிறது. இறைமக்களின் சொந்த காணிக்கையாலும், உழைப்பாலும் ஜெபத்தாலும் கட்டப்பட்ட முதல் ஓலைக்கோயில் 1903 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த புதிய சபையின் சங்க வரவு பதிவு செய்யப்பட்டுள்ள 1912 ஆம் வருட திருநெல்வேலி அத்தியாட்சன சங்கப் புத்தகம் திருமண்டல நூலகத்தில் உள்ளது. அப்போது நல்லூர் சர்க்கிளின் கீழ் சபை இருந்திருக்கிறது.

தொடக்கப்பள்ளியின் தோற்றம்
வெளியூராருக்கும் இவ்வூரார் அடைக்கலம் கொடுத்ததால் மக்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது. பிள்ளைகள் கல்வி கற்க வெளியூர் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. அப்போது சபையின் மூப்பர்கள், ஆபிரகாம் உபதேசியாரிடம் இது குறித்து கலந்தாலோசித்து, 1907 ஆம் ஆண்டு முத்து என்பவரிடம் இருந்து, ஆலயத்திற்கு வடக்கே வாங்கப்பட்ட 5 செண்ட இடத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்ட முடிவு செய்தனர். அதற்கான அனுமதியும் உடனடியாக அத்தியாட்சனத்திலிருந்து கிடைக்கவே, கட்டுமான பணிகளும் விரைந்து நடைபெற்றன. 1915 ஆம் ஆண்டு இறைநாம மகிமைக்கென்றும், அனைவரின் கல்விவிருத்திக்கென்றும் புதிய தொடக்கப்பள்ளி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

காரைக்கோயிலின் தோற்றம்
1915 ஆம் வருடத்திலிருந்து இராமலிங்கபுரம் சபை புலவனூர் சர்க்கிளின் கொண்டுவரப்பட்டது. கனம் தேவதாசன் சாமுவேல் வேதநாயகம் ஐயரவர்கள் புலவனூர் குருவானவராகவும், மடத்தூர் சபை ஊழியராக இருந்த ஆபிரகாம் உபதேசியார் இச்சபைக்கு ஊழியராகவும் ஆணிமுத்து கோவில் பணிவிடைக்காரராகவும் நியமிக்கப்பட்டு இறைப்பணி சிறப்பாக நடைப்பெற்றது. மழைக்காலங்களில் ஓலைக்கோயில் மிகவும் சேதம் அடைய ஆரம்பித்தது. எனவே, சபை மக்களின் உதாரத்துவமான காணிக்கைகளைக் கொண்டு புதிய ஆலயம் கட்ட முடிவு செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. தண்ணீருக்குப் பதிலாக பனைமரத்துப் பதனீரே அதிகமாக பயன்படுத்தப்பட்டது. 1922 ஆம் வருஷம் ஆவணி மாஷம் 25 ஆம் தேதி (09.09.1922) சனிக்கிழமையன்று, திருநெல்வேலி அத்தியட்சர் மகாகனம் நார்மன் ஹென்றி ஹப்ஸ் ஐயா அவர்களால் புதிய ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, “பரிசுத்த பெத்தேல் ஆலயம்” என்று பெயரிடப்பட்டது. அந்நாளிலே, அவர் மேலமெஞ்ஞானபுரம் என்ற பெயரையும் ஊருக்குச் சூட்டி மக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். திருமறையில் முற்பிதா யாக்கோபு தம் வழிபிரயாணத்திலே, லூஸ் என்ற இடத்திற்கு வருகையில், அன்றிரவில் கடவுள் தனக்கு தரிசனமாகி, இறைநம்பிக்கையூட்டியதால் அவ்விடத்திற்கு பெத்தேல் என்று பெயரிட்ட சம்பவம் தான் நினைவுக்கு வருகின்றது.
மேலமெஞ்ஞானபுரம்
  ஊரின் முகப்பு  

மணிமண்டபத்தின் தோற்றம்
கிறிஸ்துவின் அன்பிலும் கிருபையிலும் மக்கள் நாளுக்கு நாள் வளர்ந்து பெருகினர். ஆபிரகாம் உபதேசியார் ஐயாவின் முயற்சியினால் ஊர் மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கென்று புதிய கிணறு ஒன்று வெட்டப்பட்டது. இந்தக் கிணறு தான் அனைவரின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்தது. மேலும் அவருடைய காலக் கட்டத்தில் தான் மடத்தூருக்கும், மேலமெஞ்ஞானபுரத்திற்கும் பொதுவாக கல்லறைத்தோட்டம் இருவூர்களூக்கும் இடையில் வாங்கப்பட்டது. ஆபிரகாம் உபதேசியார் ஐயா, மடத்தூருக்கும், மேலமெஞ்ஞானபுரத்திற்கும் செய்த காரியங்கள் எண்ணி முடியாதவை; அவர் மறைந்த பிறகு சப்பாணிமுத்து என்ற ஆணிமுத்து சபை பொறுப்புகளை சேர்த்து கவனித்தார். சில வருடத்திற்கு பின்பு ஊரின் மூதாதையர்கள் ஒவ்வொருவராக மரித்துப் போனார்கள்; பின்பு 1928 ஆம் ஆண்டு வரை ஆணிமுத்து மகன் தாவீது என்பவர் ஊர் பொறுப்புகளைக் கவனித்து வந்தார். 1928 ஆம் ஆண்டில் ஐசக் பொன்னுசாமி உபதேசியார் பொறுப்பேற்றார்; .இவர் காலத்தில் சுவர்க்கடிகாரமும் வாங்கப்பட்டது. உபதேசியாருக்கான வீடும் கட்டப்பட்டு 06:01:1934 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1935 ஆம் ஆண்டு யோசேப்பு என்பவரின் மகன் பாக்கியமுத்து அவர்கள் நேர்ச்சையாக ஒரு ஆடு வளர்த்து அதன்மூலம் கிடைத்த 3 கிடாக்களை விற்று கைப்பணம் போட்டு 536 ரூபாய்க்கு ஆலயத்திற்கு பெற்றோமாக்ஸ் லைட்டும், மீதமுள்ள நால்னாவையும் காணிக்கையாக கொடுத்துள்ளார்கள். 

இங்கிலாந்திலிருந்து ஒரு குறிப்பிட்ட ஆலயத்திற்கென்று கொண்டுவரப்பட்ட பெரிய மணியை அந்த ஆலயத்தார் திடீரென வாங்க முன்வரவில்லை. இதையறிந்ததும், மேலமெஞ்ஞானபுரம் ஆலய அழகைக் கண்டிருந்த அத்தியட்சர் அவர்கள் அந்த பெரிய மணியை பரிசுத்த பெத்தேல் ஆலயத்திற்கென வாங்க, மனோன்மணீயம் உபதேசியார் வாயிலாக மக்களை உற்சாகம் காட்டினார். 1935 ஆமாண்டு இறைமக்களும் அதை வாங்க முன்வந்தனர். பாளையங்கோட்டையில் இருந்து மணியைக் ஊருக்குக் கொண்டுவர ஊரிலுள்ள அனவரும் பாளையங்கோட்டைக்குச் சென்றிருந்தனர். மாட்டு வண்டியில் வைத்துக் கொண்டு வந்து, ஊரில் விழா நடத்தில் மகிழ்ந்தனர். இதற்கென்று புதிதாக மணிமண்டம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மிக அழகாகவும், விரைவாகவும் கட்டிமுடிக்கப்பட்ட மணிமண்டபம் 09.07.1939 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. 
CSI Holy Bethel Church
1948 இல் பரிசுத்த பெத்தேல் ஆலயம் 

நடுநிலைப் பள்ளியின் தோற்றம்
திருத்தொண்டர்கள் சபைப்பணியில் மாத்திரமல்ல, கல்வி மற்றும் சமூகப் பணியிலும் அக்கறையுடன் செயல்பட்டனர். 1939 ஆம் ஆண்டில் ஓலைப் பள்ளிக்கூடமும் புதுப்பிக்கப்பட்டு காரைப் பள்ளிக் கூடமாக மாற்றப்பட்டது. பல வருடங்களுக்குப் பின்பு பள்ளியின் ஒருபகுதி கான்கிரீட் கட்டிடமாக தரம் உயர்த்தப்பட்டது. வருடங்கள் உருண்டோடின. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர உயர தேவையும் அதிகரித்தது. 1990 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியானது எட்டாம்வகுப்பு வரையாகி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் நற்பெயர் பெற்ற தரமான கல்விக் கூடமாக திகழ்ந்ததால் ஊருக்கு அருகிலுள்ள மற்ற கிரமாங்களிலிருந்தும் மாணவ மாணவியர் இப்பள்ளிக்கு வந்து கல்வி பயின்றனர். 
TDTA Middle School Melameignanapuram
 1990 இல் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம் 

சேகரத்தின் தோற்றம்
இறையருளால் சபையில் விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. தென்காசி சேகரம் உருவான காலம் முதலே, அதில் அங்கமாக இருந்த மேலமெஞ்ஞானபுரம் சபையானது, 2008 ஆம் ஆண்டு, தென்காசி சேகரத்தினின்று பிரிக்கப்பட்டு மேலமெஞ்ஞானபுரம் சேகரம் தனி யூனிட்டாக அறிவிக்கப்பட்டது. ஒரு வருடம் அருட்திரு. எபனேசர் ஐயரவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்குப் பின்பு, மேலமெஞ்ஞானபுரம் சேகரமாக 01.04.2009 அன்று அறிவிக்கப்பட்டது. அருட்திரு. பாஸ்கர் கனகராஜ் ஐயரவர்கள் முதல் சேகரத் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றினார்கள். பாரம்பரியமிக்க குற்றாலம் ஸ்தோத்திரப் பண்டிகையில் ஆறாவது சேகரமாக மேலமெஞ்ஞானபுரம் சேகரமும் இணைந்து வருடந்தோறும் பண்டிகையை ஆசரிப்பது குறிப்பிடத்தக்கது. 

மேயேகோவின் மனதின் ஆழத்தினின்று…
மேலமெஞ்ஞானபுரத்தின் சிறப்பே பரிசுத்த பெத்தேல் ஆலயம் என்றால் மிகையாகாது. ஊரின் வரலாறும், ஆலயத்தின் வரலாறும் சமகால சரித்திரங்கள். ஓலைக்கோயிலில் 9 ஆண்டுகள், காரைக்கோயிலில் 100 ஆண்டுகள் என வளர்ந்து நிற்கும் நம் சபையில், கட்டப்படவிருக்கும் புதிய ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும். நீண்ட நெடுங்காலமாக ஆலயத்தின் தூய ஸ்தலத்தின் பின்சுவரில் எழுத்தப்பட்டுள்ள “கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்” என்ற வசனம் என் உள்ளங்கவர்ந்த திருவசனமாகும். நான் திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்துவுக்குள் வளர்த்தெடுத்த என் தாய் சபையின் நூற்றாண்டு விழா மலரில், அதின் வரலாற்றுச் சுவடுகளைப் பதிக்க இறையியல் மாணவனாக எனக்குக் கிடைத்த வாய்ப்பு மிகுந்த பாக்கியமே. யார் இந்த மேயேகோ click here.

பரிசுத்த பெத்தேல் ஆலயத்தில் முதல் முறையாக, 01.11.2021 அன்று மாதப்பிறப்பு திருவிருந்து வழிபாட்டில் “பெத்தேல்” என்னும் வேதாகம இடத்தை மையமாகக் கொண்டு, “இறைநம்பிக்கையில் பயணிப்போம்” என்ற கருப்பொருளில் அருளுரையாற்றிய மறக்க முடியாத தருணத்தை நினைவுகூர்ந்து, தொடர்ந்து நாம் அனைவரும் இணைந்து இறைநம்பிக்கையில் பயணிக்க இறைவேண்டலோடு வாழ்த்துகின்றேன். “பெத்தேலின் (இறைவீட்டின்) நன்மையால் திருப்தியாவோம்” என்ற இறைவாக்கு நம் வாழ்வில் பரிபூரணமாக சித்தி பெறட்டும். இறையாசி நம்மோடிருப்பதாக.
       


Acknowledgement
This history is collected by 
Y. Golden Rathis B.A, B.Sc, B.Th, B.D,
Mannin Mainthan Meyego



Post a Comment

0 Comments