1. ஞாயிறு குறிப்புகள்:
ஞாயிறு: 1அட்வெந்து மூன்றாம் ஞாயிறு (களிகூருதலின் ஞாயிறு)
தேதி: 9/7/2023
வண்ணம்: ரோஸ் / செங்கரு நீலம்
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்:
2.திருவசனம் & தலைப்பு:
மீட்பின் நம்பிக்கை
செப்பனியா 3:16
(பவர் திருப்புதல்) அந்நாட்களிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.
(திருவிவிலியம்) அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்,"சீயோனே அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம்".
3. ஆசிரியர் & அவையோர்:
செப்பனியா தீர்க்கத் தரிசி மிக முக்கியமான ஒரு நபராவார். இவர், சமூக நிலைப்பாட்டை கணிசமான முறையில் நிலைநாட்ட முனைந்தவர். இவரது வார்தைகள் எல்லாம் நீதிமன்ற வட்டாரங்கள் மற்றும் தற்போதைய சமூக மற்றும் அரசியல் ரீதியான காரியங்களை எடுத்தியம்பும் தன்மையுள்ளதாய் இருக்கின்றன. யூத அரசன் யோசியாவின் காலத்திலே இவர் தீர்க்கத்தரிசனம் உரைக்கிறார்.
4. எழுதப்பட்ட காலம்& சூழ்நிலை:
செப்பனியா 1:1 ன் படி யூத மன்னன் யோசியாவின் காலம் (640 - 609 கி.மு) தான் செப்பனியா யூதாவுக்கு தீர்க்கத் தரிசனம் கூறியிருக்கிறார் என்று நாம் நன்றாகவே அறிய முடிகிறது.
அந்நாட்களிலே அங்குள்ள சூழ்நிலை
மிகவும் நெருக்கமான சூழ்நிலையாக காணப்பட்டது. இந்த சூழ்நிலைகளை கீழ்க்கண்ட வேதப் பகுதிகளிலே நாம் காணலாம். 2 இராஜா 22; 2 இராஜா 23:1-30; 2 நாளா 34, 35 மேலும்
எரேமியா மற்றும் நாகூம் தீர்க்கதரிசன புத்தகங்களிலும் காணலாம்.
5 திருவசன விளக்கவுரை:
செப்பனியா 3:16 -ல் மட்டுமல்ல, இந்த புத்தகம் முழுவதும் தீர்க்கத்தரிசி உரைப்பது: கடவுளின் நெருங்கி வரும் தீர்ப்பை யூதாவுக்கு அறிவிப்பதே ஆகும். ஆனால், கடைசியில் யூதாவின் மறுசீரமைப்பு பற்றி கூறி முடிக்கிறார். மேலும், செப்பனியா யூத ஜனங்களுக்கு உரைத்த கடவுளின் வார்த்தை மிகவும் துல்லியமானது; மூன்றே அதிகாரத்தில் இருவேறுப்பட்ட காரியங்கள் கூறப்படுகின்றன. முதலாவது, கடவுளின் கோபம் வெளிப்படும் என்றும், தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக் கொள்ளுவேன் என்றும் செப்பனியா 1:2- ல் பார்க்கிறோம். இரண்டாவதாக நாம் திருவசனமாக தியானிக்கின்ற செப்பனியா 3:16, 17- ல் பார்க்கிறோம், தேசம் பயப்பட வேண்டிய அவசியமில்லை, உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; அவர் இரட்சிப்பார் என்று யூதாவுக்கு கூறுகிறார் செப்பனியா. மீட்கும் ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறார்; நாம் பயப்பட வேண்டாம் என்று மக்களின் இருதயங்களில் ஒரு மீட்பின் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.
செப் 3:16 -ல் ஜனங்களே! நாம் பயப்பட வேண்டாம்; நம் கைகளை தளர விட வேண்டாம், ஏனென்றால் நம்மை மீட்க கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார். செப் 3:17 -ல் கடவுள் தன் சொந்த மக்களிடையே கெம்பீரமாய் களி கூருவார் என்று பார்க்கலாம்.
ஒருவேளை, நாம் நினைக்கிறோம் ஆண்டவர் நம்மை எல்லாம் கூட்டிச் செல்ல வருகிறார், வருகிறார் என்று கூறிக்கொண்டே இருக்கிறோமே ஆனால் அவர் தாமதிக்கிறாரே என்று நமக்குத் தோன்றுமல்லவா? அநேக நேரங்களில் நாம் பொறுமையை இழந்து விட்டிருப்போம் அல்லவா! ... உண்மை என்னவென்றால், மீட்பர் நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறார் (2 பேதுரு 3:9 (பி). மட்டுமல்ல, மீட்பின் நம்பிக்கையை நம் மேல் உறுதிப்படுத்துகிறார்! எப்படி? வசனங்கள் 2 பேதுரு 3:9; 3:15 -ன் படி "கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்" என்று பேதுரு தனது நிருபத்தில் எழுதுகிறார். ஆகவே, பரம அழைப்பிற்குப் பங்குள்ளவர்களாகிய நாம் கர்த்தரின் இரட்சிப்பு, நம்மேல் அவர் கொண்ட நீடிய பொறுமை என்பதை நினைவில் வைத்து இருக்க வேண்டும். இந்த பொறுமையின் காலத்தைப் பிரயோஜனம் பண்ணுங்கள். ஏனென்றால், இதுவே கடவுள் நமக்குத் தந்த மாபெரும் இரட்சிப்பு. மீட்பரின் வருகையை எதிர்நோக்கி இருக்கும் நமக்கு கர்த்தருடைய வருகையை அறிய முடியாது. ஆனால், ஒன்று நம்மால் செய்ய முடியும்! நாம் எல்லாரும் கர்த்தரின் வருகையில் அவரோடு சேர்ந்து செல்ல வேண்டும் என்றால், கர்த்தரின் விருப்பத்தை எப்போதும் செய்ய வேண்டும். அது என்ன....? 2 பேதுரு 3:9 -ல் "நாம் ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்று விரும்பி ".... ஆகவே, அன்பானோரே! நாம் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டு... மற்றும் 2 பேதுரு 3:14 -ல் சொல்லப்பட்டது போல, " நம்மேல் எவ்வளவேணும் பிழையில்லாதவர்களாய் அவர் சந்நிதியில் காணப்பட ஜாக்கிரதையாக இருங்கள்". இவ்விருப்பத்தை நாம் செய்து பொறுமையோடு அவருக்காக காத்திருப்போம்.
6. இறையியல் & வாழ்வியல்:
நமது வாழ்வில் நாம் எதைக் குறித்தும் பயப்பட வேண்டாம். நம்மை இரட்சிக்கும்படிக்கு ஆண்டவர் நம்முடன் இருக்கிறார். இரட்சிக்கிற ஆண்டவர் மீட்பை அருள இவ்வுலகில் வந்தார்; சத்திரத்திலே பிறந்து, சரித்திரத்திலே இடம் பெற்றார்; இன்றும் நம் ஒவ்வொருவருடைய இருதயங்களிலும் நிறைந்து காணப்படுகிறார்.
தற்போதைய இவ்வாழ்கையில் தேவனுக்குள் அழைக்கப்பட்ட நாம் தேவனின் அளவுக்கடந்த இரட்சிப்பைப் பெற்று இருக்கிறோம் என்பது தான் நிதர்சன உண்மை. ஆனாலும், நாம் பெற்றுக் கொண்ட உலகப்பிரகாரமான காரியங்களை சற்று ஒதுக்கி, ஆன்மீக இரட்சிப்பைச் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும். எப்படி நம் ஆண்டவர் இரட்சிப்பை அல்லது மீட்பை அருள வந்தாரோ, அதே போல, மகிமையோடே அவர் இரண்டாவது முறையாக திரும்ப இப்புவிக்கு இரட்சிக்க அல்ல மாறாக, நியாயந்தீர்க்க நியாயாதிபதியாக வரவிருக்கிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த தியானமானது, நம்முடைய ஆன்மீக வாழ்வின் முழுமையில் தேவையான ஒன்றாகும். கிறிஸ்துவின் வருகையில் நாம் நம்மை எந்த அளவிற்கு ஆயத்தமாக்கி இருக்கிறோம் என்றும், பரலோக வாழ்விற்கு நான் சரியானவன் தானா? , அல்லது எப்படி என்னை தயார் செய்ய வேண்டும் என்று கற்றுத்தருகிறது. கர்த்தரின் வார்த்தைகளும், தீர்க்கத்தரிசனங்களும் பொய்யுமல்ல, போதிப்பதற்கு மட்டுமல்ல, அதன்படி நடப்பதே! அதுதான் அவருடைய விருப்பமாகும். நம்மையே இந்த தியானத்தின் மூலம் ஆராயந்து பார்க்க அழைக்கப்படுகிறோம்...
7. அருளுரைக் குறிப்புகள்:
மீட்பின் நம்பிக்கை
செப்பனியா 3:16
1.இரட்சிக்கும் தேவன் நம்மோடு (செப் 3:16, 17).
2. தேவனின் நீடிய பொறுமையே இரட்சிப்பு (2 பேதுரு 3:15)
3. இரட்சிப்பைப் போக்கடியாமல், அதனைக் காத்துக் கொள்ளல் (ரோமர் 2:4 - 8).
எழுதியவர்:
இ. கோயில் பிள்ளை,
இறையியல் முதலாம் ஆண்டு,
கன்கார்டியா இறையியல் கல்லூரி,
நாகர்கோவில்.
0 Comments