"வாழ்வைக் காத்து, ஆன்மாவைச் செதுக்கி" என்ற தரிசனத்தோடு (Vision) தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில், கோவிலூற்று ஊரில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காகச் செயல்பட்டு வரும் ஒரு உன்னத புகலிடம் தான் கனம். வில்லியம் கிளார்க் அன்பின் இல்லம் (Rev. Willam Clark Anbin Illam).
1. தோற்றமும் வளர்ச்சியும் (Origin & Evolution)
திருநெல்வேலி திருமண்டலம் நல் ஆலோசனை திருப்பணியின் தொலைநோக்குப் பார்வையால், இயக்குநர் Rev. ஆமோஸ் அவர்களின் சீரிய முயற்சியினால் தென்காசி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த இல்லம் உருவாக்கப்பட்டது.
தொடக்க நாள்: முதன்முதலில் 13.06.2023 அன்று இதற்கான முதல் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
திறந்து வைத்தவர்கள்: நெல்லைப் பேராயர் Rt.Rev.ARGST பர்னபாஸ் அவர்கள் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. துரை. ரவிச்சந்திரன் அவர்கள்
ஆண்கள் இல்லம்: தொடக்கத்தில் வெறும் 5 ஆண் பயனாளிகளோடு தனது சேவையைத் தொடங்கியது.
பெண்கள் இல்லம்: இல்லத்தின் அடுத்தகட்ட மைல்கல்லாக, 2025 ஜனவரி 09 அன்று பெண்களுக்கான பிரத்யேக இல்லம் திறந்து வைக்கப்பட்டது.
தற்போதைய நிலை: தற்போது 18 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதான அலுவலகம், சமையலறை மற்றும் உணவருந்தும் அறை கட்டப்பட்டு வருகிறது.
2. பெயரின் பின்னணி (Historical Legacy)
இந்த இல்லத்திற்குப் பெயரிடப்பட்டுள்ள கனம். வில்லியம் கிளார்க் (Rev. William Clark) 19-ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி மற்றும் தென்காசிப் பகுதிகளில் கிறிஸ்தவ நற்செய்திப் பணிகளையும், சமூகப் பணிகளையும் ஆற்றிய ஒரு முன்னோடி மிஷனரி ஆவார். தற்போது அன்பின் இல்லம் அமைந்துள்ள 2 ஏக்கர் நிலம் அன்று அவரால் வாங்கப்பட்டதாகும். தற்போது கோவிலூற்று சபை இந்த இடத்தை அன்பின் இல்லத்தின் பணிகளுக்காக முழுமனதோடு வழங்கியுள்ளது. அவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சமூகப் பணிகளை நினைவுகூரும் வகையில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
3. நோக்கங்கள் (Core Mission)
3.1 மீட்டெடுத்தல்: தென்காசி மாவட்டத்தின் வீதிகளிலும், பொது இடங்களிலும் ஆதரவற்ற நிலையில் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரியும் மனிதர்களைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பான முறையில் மீட்பதை முதன்மை நோக்கமாகக் இந்த இல்லம் கொண்டுள்ளது.
3.2 ஆதரவு அளித்தல்: அன்பின் இல்லத்தில் வைத்து பராமரிக்கப்படுதல்.
3.3 குணப்படுத்துதல் (Healing): முறையான சிகிச்சை மூலம் மனநிலையை சீராக்குதல்.
3.4 திறன் மேம்பாடு (Skill Development): தோட்டம் மற்றும் பிற வேலைகள் மூலம் சுயசார்பை உருவாக்குதல்.
3.5 மறுஇணைப்பு (Reintegration): முடிந்தவரை இவர்களின் குடும்பங்களைக் கண்டறிந்து, இவர்களை மீண்டும் அவர்களின் சொந்தங்களோடு சேர்த்து வைப்பது அல்லது சமூகத்தில் ஒரு கௌரவமான மனிதராக வாழ வைப்பதே இதன் உன்னத நோக்கமாகும்.இது வெறும் தங்குமிடம் அல்ல, அவர்களின் மனித உரிமைகளை (Human Rights) மீட்டெடுக்கும் தளம்.
4. மறுவாழ்வுச் சேவைகள் (Services & Therapies)
சமுதாயத்தால் கைவிடப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதோடு, அவர்களின் வாழ்வை மேம்படுத்தப் பல்வேறு உன்னதப் பணிகள் இங்கு வழங்கப்படுகின்றன. அன்பின் இல்லம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் சீரமைக்கும் வகையில் சிகிச்சைகளை வழங்குகிறது:
4.1 அத்தியாவசியத் தேவைகள்:
இங்கு மீட்கப்படுபவர்களுக்குத் தேவையான பாதுகாப்பான தங்குமிடம், சத்தான உணவு, உடை மற்றும் உரிய மருத்துவச் சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டு, ஒரு புதிய வாழ்க்கை முறை அமைத்துக் கொடுக்கப்படுகிறது.
4.2 மருத்துவ மேலாண்மை (Medical Management): இங்கு மீட்கப்படுபவர்களுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, மனநல மருத்துவர்களின் ஆலோசனையோடு தொடர் மருந்துகள் (Psychiatric Medications) மூலம் மனநிலை சமநிலைக்குக் கொண்டு வரப்படுகிறது.
4.3 தொழில்முறை சிகிச்சை (Occupational Therapy): இல்லத்து மக்கள் தோட்டத்தில் பயிரிட்டு அறுவடை செய்கின்றனர். இது அவர்களின் சிதறிய சிந்தனைகளை ஒருங்கிணைத்து கவனக் குவிப்பை (Focus) ஏற்படுத்துவதுடன், "நம்மாலும் சாதிக்க முடியும்" என்ற சுயமதிப்பை (Self-Esteem) வளர்க்கிறது.
4.4 ஆன்மீக & உளவியல் சிகிச்சை (Spiritual Therapy): தினமும் நடக்கும் காலை, மாலை பிரார்த்தனைகள் அவர்களுக்குள் ஆழ்ந்த மன அமைதியையும் (Inner Peace), தங்களைப் பாதுகாக்க ஒரு பேரன்பு இருக்கிறது என்ற பாதுகாப்பு உணர்வையும் (Sense of Security) ஏற்படுத்துகிறது.
4.5 உடற்பயிற்சி: தினமும் உடற்பயிற்சி கொடுக்கப்படுகிறது.
4.6 சிறப்பு தினங்கள்: மேலும், இவர்களின் மகிழ்ச்சிக்காகச் சிறப்பு விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
5. மக்கள் பேராதரவு (Community Support)
அன்பின் இல்லம் அரசு அல்லது ஒரு தனி அமைப்பால் மட்டுமே இயங்கவில்லை; அது ஒட்டுமொத்த மக்களின் கூட்டுப் பங்களிப்பால் (Community-Driven) இயங்குகிறது. மதம், ஜாதி, இனம் என எந்தவிதமான பாகுபாடுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயமும் இந்த இல்லத்தைத் தாங்கிப் பிடித்து வருகிறது.
5.1 அடிப்படைத் தேவைகள்: பொதுமக்கள் தங்களால் இயன்ற உணவு, ஆடை மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்களை வழங்கி ஆதரவளிக்கின்றனர்.
5.2 மகிழ்ச்சியைப் பகிர்தல்: மக்கள் தங்களின் பிறந்தநாள்களை இந்த இல்லத்து மக்களுடன் இணைந்து கொண்டாடி, உணவையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
5.3 நினைவுப் பகிர்வுகள்: திருமண நாள், புதுமனை புகுவிழா, இதர சுப நிகழ்ச்சிகள் மற்றும் தங்களின் முன்னோர்களின் நினைவு நாள்களில் மக்கள் இங்கு வந்து, இவர்களைப் பார்வையிட்டு அன்போடு உணவளிக்கின்றனர்.
நிறைவாக,
அன்று விதைக்கப்பட்ட மனிதநேய விதை, இன்று அதே நிலத்தில் 'அன்பின் இல்லமாக' ஆலவிருட்சமாய் வளர்ந்து சமுதாயத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு, கைவிடப்பட்ட மனிதர்களுக்கு அன்பையும், மறுவாழ்வையும், புதிய நம்பிக்கையையும் வழங்கும் ஒரு நிஜமான "அன்பின் புகலிடமாக" கனம். வில்லியம் கிளார்க் அன்பின் இல்லம் திகழ்கிறது.

0 Comments