தமிழ்நாட்டில் தென்மேற்கு எல்லையில் தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் உருவான தினமான நவம்பர் 22, தென்காசி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டமானது, தமிழக அரசின் 12.11.2019 தேதியிட்ட அரசு ஆணை எண் 427 ன் படி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் படி, அதிகாரப் பூர்வமாக 22 நவம்பர் 2019 அன்று தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
தென்காசி மாவட்டத்தின் தெற்கில் திருநெல்வேலி வடக்கில் விருதுநகர், கிழக்கில் தூத்துக்குடி, மேற்கே கேரளத்தையும் எல்லையாக கொண்டுள்ளது.
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 30 குறுவட்டங்களும், 246 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், ஊராட்சி நிர்வாக அமைப்புகளில் 10 ஊராட்சி ஒன்றியங்கள், 221 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன.
மாவட்டத்தின் செழிப்பூட்டும் விவசாயத்திற்கு, சிற்றாறு மற்றும் அனுமன்நதியிலிருந்து பாசனத்திற்கு செல்லும் நீரே காரணம். சிற்றாறு, குண்டாறு நதி, ஹரிஹர நதி, கல்லாறு, நிட்சேபநதி, அனுமன் நதி ஆகிய நதிகளின் பிறப்பிடமாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது. மேலும் குண்டாறு, அடவிநயினார், இராமநதி, கடனாநதி, கருப்பாநதி, மோட்டை, செண்பகவல்லி அணைகளும் பாசனத்திற்கு பெருமளவில் பயன்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் 800 மேற்பட்ட ஊரணிகள் உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் 65% மேற்பட்ட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலம், குற்றாலம் சி.எஸ். ஐ மறுரூப ஆலயம் மற்றும் சுரண்டை தூய திரித்துவ ஆலயம் ஆகியன புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆகும். தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், திருக்குற்றால நாத சாமி கோவிலில் சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோயில் மற்றும் இலஞ்சி குமாரர் கோவில் ஆலயம் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க புன்னிய ஸ்தலங்கள் இங்கு உள்ளது. தென்காசி ஸையது சுலைமான் தர்கா மற்றும் பொட்டல்புதூர் முஹைதீன் ஆண்டவர் தர்கா ஆகியன பிரசித்தி பெற்ற இடங்களாகும்.
புகழ்பெற்ற குற்றால அருவி, சிற்றாற்றில் அமைந்துள்ளது. இது மருத்துவ குணமிக்க மூலிகை நீராக கருதப்படுகிறது. மேலும் பேரருவி, ஐந்தருவி, புலி அருவி போன்றவைகளும் இங்கு அமைந்துள்ளது. இதன் சிறப்பு பற்றி திரிகூடராசப்ப கவிராயர், தன்னுடைய குற்றால குறவஞ்சியில் பாடியுள்ளார்.
கடையநல்லூர் அருகில் உள்ள சொக்கம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் இனிப்பகமும், சங்கரன்கோவில் கீழரத வீதியில் உள்ள தனியார் அல்வா கடையும் அல்வாவிற்கு பெயர் போனவை. இதேபோல், செங்கோட்டை அருகில் உள்ள பிரானூர் பார்டர் புரோட்டாவும், புளியங்குடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் உணவக புரோட்டாவும், இந்திய அளவில் சுற்றுலா பயணிகள் மத்தியில் சிறப்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது.
0 Comments