Ad Code

இறைமைந்தர் சூம்பினக்கையை நேராக்குதல்: நாளைக் காட்டிலும் மேலான மனிதத்துவம் • 4/3/2023 • Humanity of Jesus Christ

1. தலைப்பு
இறைமைந்தர் சூம்பினக்கையை நேராக்குதல்: நாளைக் காட்டிலும் மேலான மனிதத்துவம்

2. திருமறை பகுதி
மத்தேயு 12: 9-14
மாற்கு 3: 1 - 6
லூக்கா 6: 6 - 11

3. இடம் & பின்னணி
இயேசு, சூம்பின கையை நேராக்கிய அற்புதம் பாஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாள் அன்று ஒரு ஜெப ஆலயத்தில் வைத்து செய்தது. ஆனால் எந்த ஊர் ஜெப ஆலயம் என்று எந்த நற்செய்தியாளரும் குறிப்பிடவில்லை. இயேசுவின் சீடர்கள் ஓய்வு நாளன்று பயிர் கதிர் கொய்து சாப்பிட்ட அன்று பரிசேயர்கள் விவாதம் செய்த பின்பு, இந்த அற்புதம் நடைபெற்றதாக மூன்று நற்செய்தி நூல்களிலும் எழுதப்பட்டுள்ளது. 

4. விளக்கவுரை
இயேசு கிறிஸ்து ஒரு ஜெபக் ஆலயத்துக்குள் சூம்பிய கையுடைய மனிதனைக் கண்டார். அப்போது, அந்த ஓய்வுநாளில் அவர் அவனைக் குணமாக்குவாரா என்று பரிசேயர்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவரிடம் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், "ஓய்வு நாளில் சுகம் கொடுப்பது சரியா?" என்று வினவினர். இயேசு, சூம்பிய கையுடையவனைப் பார்த்து, “எழுந்து வந்து நடுவில் நில்” என்று சொல்லி, பரிசேயர்களைப் பார்த்து, “ஓய்வுநாளில் எதைச் செய்வது சரி? நல்லது செய்வதா கெட்டது செய்வதா, ஒரு உயிரைக் காப்பாற்றுவதா கொல்வதா? என்று கேட்டார் குழியில் விழுந்த ஆட்டின் உவமையை சொல்லி, ஆட்டைக் காட்டிலும் மனிதன் எவ்வளவு முக்கியமானவன் என்று கற்பித்தார். பரிசேயர்கள் அமைதியாக இருந்தார்கள். அவர்களுடைய இதயம் மரத்துப்போயிருந்தது. பின்பு, இயேசு, சூம்பிய கையுடையவனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” சொல்ல அவனும் கையை நீட்ட சுகம் பெற்றான்.

5. கருத்துரை
இயேசு கிறிஸ்து (மாற்கு 2:28) "ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்று சொல்லி ஓய்வு நாளின் மீதுள்ள தன் அதிகாரத்தை வெளிப்படுத்துகின்றார். ஓய்வு நாள் பற்றிய இயேசுவின் புரிதல் பரிசேயர்களின் புரிதலிலிருந்து மாறுபட்டிருந்தது. அவர் ஓய்வுநாளை விடுதலையின் நாளாகப் புரிந்து கொண்டு செயல்பட்டார். மேலும் ‘‘ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை’’ என்ற புரட்சிகரமானப் புரிதலைக் கொண்டிருந்தார். ஆம், இயேசு கிறிஸ்து தன் மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றார். குறிப்பாக நோயுற்றோரை ஓய்வுநாளில் குணமாக்கியதின் மூலம் ஓய்வுநாள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார். நம் கொள்கைகள் மனிதநேயத்தை தொலைத்து விட்டதாக இருக்கக் கூடாது. இறையன்பு நம் செயலில் வெளிப்பட ஆண்டவர் அருள் புரிவாராக.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)



Post a Comment

0 Comments