தென்னிந்தியத் திருச்சபை (CSI) ஈரோடு-சேலம் பேராயத்தின் இரண்டாவது பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அருள்திரு முனைவர் ஜே. விக்டர் ராஜ்.
அருள்திரு முனைவர் ஜே. விக்டர் ராஜ் அவர்கள் 1968 ஜூன் 1 அன்று பிறந்தார். இவர் ஈரோடு மாவட்டம் புரோக் நகரைச் சேர்ந்த, பெரியவேளாமலை அரசு தொடக்கப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான மறைந்த திரு. ஜேக்கப் மற்றும் ஈரோடு மாவட்டம் எல்லீஸ்பேட்டையைச் சேர்ந்த, நசியனூர் CSI தொடக்கப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையான மறைந்த திருமதி. புஷ்பா காந்தி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை போதகரகத்திற்கு உட்பட்ட நசியனூர் CSI திருச்சபையைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் 1992-இல் ஈரோடு CNC கல்லூரியில் தாவரவியலில் இளங்கலை அறிவியல் (B.Sc.) பட்டமும், 1997-இல் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் ஈரோடு பகுதியில் தலித் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்த ஆராய்ச்சியோடு இறையியல் இளங்கலை (B.D.) பட்டமும் பெற்றார். பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் சமயவியலில் முதுகலை (M.A.) பட்டமும், 2007-இல் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஈ.வெ.ரா பெரியாரின் கடவுள் கோட்பாடுகள் குறித்த ஆய்வேட்டுடன் வரலாற்றுத்துறையில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டமும் பெற்றார். 2022-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ அறநெறிகள் குறித்த ஆராய்ச்சிக்காக தத்துவவியலில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.
இவர் 1997 ஜூலை 24 அன்று கோயம்புத்தூர் பேராயத்தில் இணைந்து, 1997 முதல் 1998 வரை கோயம்புத்தூர் V.H. சாலையில் உள்ள CSI சிறுவர் விடுதியின் உதவி காப்பாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து 1998 முதல் 2000 வரை தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, ஏ. மல்லாபுரம் மிஷன் தளத்தில் DBM சுவிசேஷகராகப் பணியாற்றினார். நீலகிரி கொளகம்பை CSI வெஸ்லி திருச்சபையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது (2000-2005), 2001 ஜூன் 24 அன்று உதவி போதகராகவும் (Deacon), 2002 டிசம்பர் 18 அன்று குருவானவராகவும் (Presbyter) கோயம்புத்தூர் CSI இம்மானுவேல் திருச்சபையில் பேராயர் மாணிக்கம் துரை அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்.
அதன்பின்னர், தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி போதகரகத்தின் CSI சீயோன் திருச்சபை (2005-2008); சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை CSI ஆண்டர்சன் நினைவு திருச்சபை (2008-2010); சேலம் மாவட்டம் மேட்டூர் டேம் CSI நல்ல மேய்ப்பன் திருச்சபை (2010-2015); சேலம் கோட்டை CSI லெக்லர் நினைவு திருச்சபை (2015-2019); சேலம் அஸ்தம்பட்டி CSI இம்மானுவேல் திருச்சபை (2019-2021); மற்றும் சேலம் ஆத்தூர் CSI சீயோன் திருச்சபை (2021-2022) ஆகிய ஆலயங்களில் போதகராகப் பணியாற்றினார். 2022-ஆம் ஆண்டு முதல் ஈரோடு மாவட்டம் பவானி CSI கிறிஸ்து திருச்சபையில் பணியாற்றி வருகிறார்.
பணிப் பொறுப்புகளுடன் இணைந்து, கோயம்புத்தூர் பேராயத்தின் சேலம் மண்டல சமூகநலக் குழு உறுப்பினராகவும் (2007-2009), கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய நான்கு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தின் மாவட்டத் தலைவராகவும் (2013-2020) பணியாற்றியுள்ளார். மேலும், சேலம் CSI ஹோபார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தாளாளராகவும், சேலம் மாவட்டம் உடையார்பாளையம், ஆத்தூர் மற்றும் ஆத்தூர் டவுன் ஆகிய இடங்களில் உள்ள CSI தொடக்கப்பள்ளிகளின் தாளாளராகவும் (2021-2023) பணியாற்றியுள்ளார்.
இவருக்கு ஒரு நற்குடும்பம் அமைந்துள்ளது. இவரது மனைவி திருமதி. எஸ். லாரா விக்டர்ராஜ் MCA, B.Ed., M.Phil. பட்டங்களைப் பெற்றவர்; இவரது மகள் செல்வி V. கிறிஸ் ஹாசினி தற்போது B.Tech முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

0 Comments