இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, பல கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது மீன்வளத்துறை ஆகும். நாட்டின் உணவுத் தேவை, ஊட்டச்சத்து மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மீன் வளர்ப்பவர்கள் (Fish Farmers) பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்களின் உழைப்பைப் போற்றும் வகையிலும், மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
1957 ஜூலை 10 அன்று, டாக்டர் ஹிராலால் சௌத்ரி மற்றும் டாக்டர் கே. எச். அலிகுன்ஹி ஆகிய இந்திய விஞ்ஞானிகள், ஒடிசாவில் உள்ள அங்குல் (Angul) என்ற இடத்தில் ஒரு புதிய சாதனையைச் செய்தனர். அவர்கள் "தூண்டப்பட்ட இனப்பெருக்க முறையை" (Induced Breeding Technology) மீன்களில் வெற்றிகரமாகச் செய்து காட்டினர்.
இந்த தொழில்நுட்பம் மூலம் மீன்களின் முட்ட உற்பத்தியை செயற்கையாக அதிகரிக்க முடிந்தது. இது இந்தியாவில் நவீன மீன் வளர்ப்புத் துறை (Aquaculture) உருவாக மிக முக்கியக் காரணமாக அமைந்தது. இந்த வரலாற்றுச் சாதனையை நினைவுகூரவே, இந்திய அரசு 2001-ஆம் ஆண்டு முதல் இந்த நாளை தேசிய மீன் வளர்ப்போர் தினமாக அறிவித்தது.
தற்போது உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நீலப் புரட்சியை (Blue Revolution) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு "பிரதான் மந்திரி மத்சய சம்பதா யோஜனா" (PMMSY) போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மீன் விவசாயிகளுக்கு நிதியுதவி மற்றும் காப்பீடுகளை வழங்கி வருகிறது.

0 Comments