Ad Code

குழந்தை ஞானஸ்நான ஆராதனை • Holy Baptism Worship Order • திருமுழுக்கு வழிபாடு CSI

குழந்தைகள் திருமுழுக்கு வழிபாட்டு முறைமை 

        I. ஆயத்தம் & திருவசனப் போதனை 

1. முகவுரை வசனம்

2. ஆரம்ப பாடல் 

(நின்ற வண்ணமாக கடவுளை நோக்கிப் பார்ப்போமாக)

3. ஒப்புதல் கேள்வி
ஆ.ந: இவர்கள் (இவன் / இவள்) இதற்கு முன் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்களா? இல்லையா?

சபை: இல்லை.

4. அழைப்புரை
பிரியமானவர்களே, எல்லா மனிதரும் பாவத்தில் உற்பவித்துப் பிறந்திருக்கிறதினாலும்; ஒருவன் ஜலத்தினாலும், பரிசுத்த ஆவியினாலும் மறுபடியும் பிறவாவிட்டால், கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கக்கூடாது என்று நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து சொல்லியிருக்கிறதினாலும்; சுபாவமாய் இந்தப் பிள்ளையினிடத்தில் (பிள்ளைகளிடத்தில்) இராத நன்மை இவனுக்கு / இவளுக்கு (இவர்களுக்கு) கிடைக்கும்படி, நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தந்தையாம் கடவுளை நோக்கி, இந்தப் பிள்ளை (பிள்ளைகள்) ஜலத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்துவின் பரிசுத்த சபையில் சேர்ந்து, அதில் ஜீவனுள்ள அவயவமாகும்படி. அவர் தமது மிகுந்த காருணியத்தினால் அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று விண்ணப்பம்பண்ண உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

(முழங்காலில்)
4. ஆயத்த ஜெபம்
சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, நீர் கட்டளையிட்ட திருமுழுக்கைப் பெற வந்திருக்கிற இந்தக் குழந்தை (குழந்தைகளை) ஆவிக்குரிய மறுபிறப்பால் பாவமன்னிப்படையும்படி, உம்மை நோக்கி வேண்டிக் கொள்ளுகிறோம். நோவாவும் அவருடைய குடும்பமும் ஜலத்தினால் அழியாதபடிக்குப் பேழையில் தற்காத்து இரட்சித்து, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரரைச் சிவந்த சமுத்திரத்தின் நடுவாகச் சேதமின்றி நடத்தி, அதனால் திருமுழுக்கை அடையாளமாகக் காட்டி, உம்முடைய பிரிய குமாரனாகிய இயேசு கிறிஸ்து யோர்தான் நதியிலே பெற்ற ஞானஸ்நானத்தில் ஞானப் பிரகாரமாய்ப் பாவத்தைப் போக்கும் ஸ்நானமாக ஜலத்தைப் பிரதிஷ்டை செய்தீரே.  

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப் படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் என்று உம்முடைய பிரியமான குமாரனைக்கொண்டு அருளின திருவாக்கின்படியே, இந்தக் குழந்தையை (குழந்தைகளை) ஏற்றுக்கொண்டு; கிறிஸ்துவின் சபையாகிய பேழையில் சேர்க்கப்படவும், விசுவாசத்தில் உறுதியாகி, நன்னம்பிக்கையில் மகிழ்ந்து, அன்பில் வேரூன்றி, சஞ்சலம் நிறைந்த இவ்வுலகமாகிய சமுத்திரத்தைக் கடந்து நித்திய ஜீவகரையைச் சேர்ந்து சதாகாலமும் உம்மோடே வாழ்ந்திட, உம்முடைய திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் வாயிலாக, கேட்கிற எங்களுக்குக் கொடுத்து, தேடுகிற நாங்கள் கண்டடையச்செய்து, தட்டுகிற எங்களுக்கு வாசலைத் திறந்தருளும். ஆமென்.

(சபையார் உட்காரவும்)

5. வேதபாடம்: மாற்கு 10:13-16
நமது ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேளுங்கள். 

சிறு பிள்ளைகளை அவர் தொடும்படி அவரிடம் கொண்டு வந்தார்கள்; கொண்டு வந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். இயேசுவோ அதைக்கண்டு விசனப்பட்டு; சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். கடவுளுடைய இராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. கடவுளுடைய ராஜ்யத்தைச் சிறுபிள்ளையைப் போல் ஏற்றுக் கொள்ளாதவன் எவனும் அதில் பிரவேசிப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை அணைத்துக் கொண்டு, அவர்கள் மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். 

7. பிரசங்கம்

(அல்லது கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கலாம்).
பிரியமானவர்களே, இப்பொழுது வாசிக்கக் கேட்ட இந்த நற்செய்தி வாக்கியத்தில் சொல்லியிருக்கிறபடி, நம்முடைய இரட்சகராகிய சிறிஸ்து சிறுபிள்ளைகளைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டார், அவர்களைத் தம்மிடத்தில் வரவிடாதவர்களைக் கடிந்துகொண்டார்; அவர் அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து ஆசீர்வதித்த வெளியரங்கமான செய்கையினாலே, தாம் அவர்களுக்குத் தயவுள்ளவரென்றும் காண்பித்தார். அப்படியே அவர் இந்தக் குழந்தையையும் தயவாய் ஏற்றுக்கொண்டு, தமது கிருபையாகிய கரத்தினால் இவர்களையும் (இவனையும் / இவளையும்) அணைத்து, நித்தியஜீவனாகிய ஆசீர்வாதத்தை இவனுக்கு / இவளுக்கு (இவர்களுக்கு) தந்தருளி, என்றுமுள்ள தமது ராஜ்யத்தில் இவனை / இவளை (இவர்களை) சேர்த்துக் கொள்வாரென்று, சந்தேகமின்றி உறுதியாய் விசுவாசிப்போம். 

தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து அறிவித்தபடி, நம்முடைய பரமபிதா இந்தக் குழந்தையின் (குழந்தைகளின்) மேல் தயவாயிருக்கிறாரென்று நாம் நிச்சயங்கொண்டிருக்கிறோம். பரிசுத்த ஞானஸ்நானத்தைப் பெறும்படி நாம் இந்தக் குழந்தையைக் (குழந்தைகளை) கொண்டுவந்த அன்பான செய்கையை அவர் தயவாய் ஒப்புக்கொள்ளுகிறாரென்றும் நம்பியுமிருக்கிறோம். ஆகையால் நாம் விசுவாசத்தோடும் வணக்கத்தோடும் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தக்கடவோம்.

8. பிரசங்கத்திற்குப் பின்னான ஜெபம்
சர்வவல்லமையுள்ள நித்திய தேவனே, பரம பிதாவே, உமது கிருபையை அறியவும், உம்மை விசுவாசிக்கவும், எங்களை அழைத்தருளினதற்காக உம்மைத் தாழ்மையாய் ஸ்தோத்திரிக்கிறோம். என்றைக்கும் எங்களில் இந்த அறிவைப் பெருகச்செய்து, இந்த விசுவாசத்தைப் பலப்படுத்தியருளும். இந்தக் குழந்தை (குழந்தைகள்) மறுபடியும் பிறந்து, நித்திய ரட்சிப்புக்குச் சுதந்தரவாளி யாகும்படி, இவனுக்கு / இவளுக்கு (இவர்களுக்கு) உமது பரிசுத்த ஆவியைக் கொடுத்தருள வேண்டுமென்று, இப்பொழுதும் எப்பொழுதும் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

                    II வாக்குறுதி & அறிக்கை 

(திருமுழுக்கு பெறுவோரின் பெற்றோர், ஞானப் பெற்றோர் திருமுழுக்குத் தொட்டிக்கு அருகில் வந்து நிற்க வேண்டும்; அப்பொழுது குருவானார் பெற்றோர் மற்றும் ஞானப் பெற்றோரை நோக்கிச் சொல்லுவதாவது:)

9. பிரியமானவர்களே, ஞானஸ்நானம் பெறுவதற்கு இந்தப் பிள்ளையைக் (பிள்ளைகளைக்) கொண்டுவந்தீர்களே; நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவனை / இவளை (இவர்களை) ஏற்றுக்கொண்டு, இவனை / இவளை (இவர்களை) பாவங்களிலிருந்து விடுதலையாக்கி பரிசுத்த ஆவியினாலே சுத்திகரித்து, இவனுக்குப் / இவளுக்கு (இவர்களுக்கு) பரலோக ராஜ்யத்தையும், நித்திய ஜீவனையும் கொடுத்தருள வேண்டுமென்று வேண்டிக் கொண்டீர்கள். நீங்கள் வேண்டிக்கொண்ட இவைகள் எல்லாவற்றையும் அருளிச்செய்வோம் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது சுவிசேஷத்தில் வாக்குத்தத்தம் செய்திருக்கிறதையும் கேட்டிருக்கிறீர்கள். அவர் தாம் ஒப்புக்கெண்டபடி அந்த வாக்குத்தத்தை நிச்சயமாகவே நிறைவேற்றுவார்.

இப்பொழுது இங்கு இருக்கும் பிள்ளை (பிள்ளைகள்) தாமே ஒப்புக்கொள்ளத்தக்க பிணையாளிகளாயிருக்கிற வயதாகுமட்டும், அவர்களை வழிநடத்தும் நீங்கள், உங்களைக் கொண்டு, இப்பொழுது நீங்கள் செய்யும் உடன்படிக்கையில் உண்மையாய் வாக்குத்தத்தம் செய்ய வேண்டும். ஆகையால் நான் கேட்கிறதாவது:

Q1. தந்தை, மகன், தூய ஆவியானவராகிய சர்வ வல்லமையுள்ள ஒரே திரித்துவ கடவுளை விசுவாசிக்கிறீர்களா? 

மறுமொழி: ஆம், ஒரே கடவுளை விசுவாசிக்கிறோம்.

Q2. நீங்கள் இந்தப் பிள்ளையின் பெயராலே, பிசாசையும் அதின் கிரியைகள் எல்லாவற்றையும், இவ்வுலகத்தின் வீண் ஆடம்பரங்களையும் மகிமையையும், அதைப் பற்றிய பொருளாசைகளையும், எல்லா இச்சைகளையும் பின்பற்றாதப்படிக்கும், அவைகளால் நடத்தப்படாதபடிக்கும் அவைகளை வெறுத்துவிடுகிறீர்களா?

மறுமொழி: அவைகள் எல்லாவற்றையும் வெறுத்த விடுகிறோம்.

Q3. இந்தக் குழந்தைக்கு (குழந்தைகளுக்கு) இடறல் உண்டாக்காதபடி, நீங்கள் முன்மாதிரியாக கடவுளுடைய பரிசுத்த விருப்பத்தையும், கற்பனைகளையும் பணிவாய்க் கைக்கொண்டு, உங்கள் வாழ்நாளெல்லாம் அவைகளின்படியே நடந்துகொள்வீர்களா?

மறுமொழி: அப்படியே கைக்கொண்டு நடந்து கொள்வோம்.

Q4. இந்தக் குழந்தை கிறிஸ்தவக் குடும்பத்தில் வளரவும், இவன் / இவள் (இவர்கள்) கிறிஸ்துவைத் தன் (தங்கள்) மீட்பராக அறிந்து கொள்ளத்தக்கதாகத் திருச்சபையின் போதனையிலும், வழிபாட்டிலும் வளர்க்கப்படவும் முயற்சி செய்வீர்களா?

மறுமொழி : கடவுளுடைய ஒத்தாசையினால் வழிநடத்துவோம்.

Q5. இவன் / இவள் (இவர்கள்) பரிசுத்த ஆவியினால் விசுவாசத்தில் வேரூன்றி, கர்த்தரின் பந்தியில் பங்கு பெறவும் திருச்சபையின் அந்நியோந்நியத்தில் உண்மையாய்ச் சேவிக்க உலகத்தில் செல்லவும் உதவியாய் இருக்கும்படி இவன் / இவள் (இவர்கள்) பிற்காலத்தில் திருச்சபையின் முழு உறுப்பினர்களாக திடப்படுத்தல் பெற நீங்கள் இவனை / இவளை (இவர்களை) உற்சாகப்படுத்துவீர்களா?

மறுமொழி : கடவுளுடைய ஒத்தாசையினால் அப்படியே செய்வோம்.

10. சபையாரை நோக்கிக் குரு சொல்வது:

பிரியமானவர்களே, இவர்களும் உங்கள் மத்தியிலுள்ள ஏனைய பிள்ளைகளும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும் அன்பிலும் வளருவதற்கு ஏதுகரமாயிருக்க நீங்கள் கிறிஸ்துவின் திருச்சபையின் உறுப்பினராக அழைப்புக்கு உண்மையுள்ளவராயிருப்பீர்களா? 

சபையார் மறுமொழி: ஆம். கடவுள் ஒத்தாசையுடன் அப்படியே நடப்போம். எங்கள் ஐக்கியத்தில் இப்பிள்ளைகளையும் ஏற்றுக் கொள்ளுகிறோம்.

(இந்த வாக்குறுதிகளைக் கொடுத்த நாம் யாவரும் இணைந்து, நமது விசுவாசத்தை அறிக்கை செய்வோமாக.)

11. விசுவாச அறிக்கை

வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்.

அவருடைய ஒரே குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன், அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார். மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்; பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்தி லிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.

பரிசுத்தாவியை விசுவாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்; பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும் பாவமன்னிப்பும்; சரீர உயிர்த்தெழுதலும்; நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

12. அர்ப்பணிப்பு ஜெபம் 
இரக்கமுள்ள இறைவா, இந்தப் பிள்ளையிலுள்ள (பிள்ளைகளிலுள்ள) பழைய ஆதாம் அடக்கம்பண்ணப்பட்டு, புதிய மனுஷன் இவனில் / இவளில் (இவர்களில்) உயிர்த்தெழக் கிருபை செய்தருளும். இவர்களிலுள்ள மாம்ச இச்சை யாவும் அழிந்து, ஆவிக்குரிய நற்பண்புகள் மேலோங்கி வளர அருள்வீராக. பிசாசையும், உலகத்தையும், மாம்சத்தையும் ஜெயித்து வெற்றி சிறக்கும்படிக்கும், இவனுக்கு / இவளுக்கு (இவர்களுக்கு) வல்லமையையும், பலனையும் அனுக்கிரக்கித்தருளும்.
எங்கள் உத்தியோகத்திலும் ஊழியத்திலும் உமக்கு ஒப்புக்கொடுக்கப்படும் யாவரும் பரிசுத்த குணங்களால் அலங்கரிக்கப்பட்டு, நித்திய பலனைப் பெற்றுக்கொள்ள உமது கிருபையைத் தந்தருளும். ஆமென்.

13. ஜலப்பிரதிஷ்டை ஜெபம்
குரு : நித்திய ஜீவியாகிய சர்வ வல்லமையுள்ள கடவுளே, எங்களுக்குப் பாவமன்னிப்புண்டாகும்படி. உம்முடைய பிரிய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, தமது அருமையான விலாவிலிருந்து ஜலத்தையும், இரத்தத்தையும் சிந்தி தம்முடைய சீஷர்களைப் பார்த்து; நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கட்டளையிட்டருளினாரே, தேவரீர் உமது சபையின் விண்ணப்பங்களைத் திருவுளத்தில் கொண்டருளி, ஞானப்பிரகாரமாய்ப் பாவம் போக்கும் ஸ்நானமாக இந்த தண்ணீரைப் பிரதிஷ்டைப்பண்ணி, இதிலே இப்பொழுது ஞானஸ்நானம் பெறுகிற இந்தப் பிள்ளை (பிள்ளைகள்) உம்முடைய கிருபையை நிறைவாய்ப் பெற்று தெரிந்து கொள்ளப்பட்ட உம்முடைய விசுவாசமுள்ள பிள்ளைகளாகிய சபையில் சேர்ந்தவனாய் / சேர்ந்தவளாய் (சேர்ந்தவர்களாய்) என்றைக்கும் நிலைத்திருக்கும்படி, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அனுக்கிரகித்தருளும். ஆமென்.

14. திருமுழுக்கு
(இப்பொழுது குருவானவர் பிள்ளையைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டு, "இந்தப்பிள்ளைக்குப் பேரிடுங்கள்" என்று கேட்க, அவர்கள் இடுகிற பேரை அவர் சொல்லி, பிள்ளையின்மேல் ஜலத்தை வார்க்கிறபோது சொல்ல வேண்டியது:)

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே உனக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். ஆமென்.

수 இந்தப்பிள்ளையைக் கிறிஸ்துவின் மந்தையாகிய திருச்சபையில் சேர்த்துக்கொண்டு, இவன் / இவள் சிலுவை அடையாளத்தை வரைகிறோம். சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தை இவன்/ இவள் இதுமுதல் அறிக்கையிட வெட்கப்படாமல் அவர் கொடியின் கீழ் பாவத்துக்கும் உலகத்துக்கும் பிசாசுக்கும் விரோதமாய் தைரியமாய்ப் போர்செய்து, ஜீவகாலபரியந்தம் கிறிஸ்துவின் உண்மையுள்ள சேவகனும் / சேவகியும் ஊழியக்காரனுமாய் / ஊழியக்காரியுமாய் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்குக் குறிப்பாக இப்படிச் சிலுவை அடையாளத்தை வரைந்தோம். ஆமென்.

15. சபை கவி:
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே,

உந்தம் ஞானஸ்நானத்தால் 
உமக்குப் பிள்ளையாய் வந்த - இந்தக்

16. திருமுழுக்கு கொடுத்தப் பின்பு, ஆயர் சொல்ல வேண்டியது:

பிரியமானவர்களே, இந்தப் பிள்ளை (கள்) மறுபடியும் பிறப்பிக்கப்பட்டு கிறிஸ்துவின் திருச்சபையின் உடலில் இணைந்திருக்கிறார்கள் என்று பிதா, குமாரன், தூயாவியாரின் திருப்பெயரால் அறிவிக்கிறோம். மேலும், இந்தப் பிள்ளை (பிள்ளைகள்) தகுந்த வயதில், திடப்படுத்தல் பெறும்படிக்கு பேராயர் அவர்களிடம் கொண்டுவரப்படும்படி, கருத்துள்ளவர்களாயிருக்க ஆண்டவர் அருள்புரிவாராக. வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான கடவுளுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென் 

(ஜெபம் பண்ணக்கடவோம்)
17. கர்த்தருடைய ஜெபம்:
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவது போல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும், எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.

18. நன்றி ஜெபம்:
மிகுந்த இரக்கமுள்ள பிதாவே, உமது அடியார்களாகிய இந்தக் குழந்தையை (குழந்தைகளைப்) புத்திரசுவிகாரத்தினால் உமது சொந்தப் பிள்ளையாக (பிள்ளைகளாக) ஏற்றுக்கொண்டு உமது பரிசுத்த சபையில் ஒன்றுபடுத்தினதற்காக இருதயத்தோடே உமக்குத் தோத்திரம் செலுத்துகிறோம். இந்தக் குழந்தை (குழந்தைகள்) உமது கிருபையால் இப்போது உம்முடைய முழுபிள்ளைகளாய் (முழு பிள்ளைகளாய்) இருப்பதைத் தங்கள் வாழ்க்கையில் மென்மேலும் காட்ட அருள் புரியும், இந்தக் குழந்தை (குழந்தைகள்) உம்முடைய திருமைந்தனின் மரணத்திற்குப் பங்குள்ளவர்களாய் இருக்கிறது போல அவர் உயிர்த்தெழுதலுக்கும் பங்குள்ளவர்களாய் இருக்கவும், கடைசியிலே உம்முடைய பரிசுத்த சபையார்களோடுகூட உமது நித்திய ராஜ்யத்திற்குச் சுதந்திரவாளிகளாகவும், தேவரீர் கிருபை செய்ய வேண்டுமென்று. எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முன்னிட்டுத் தாழ்மையாய் வேண்டுகிறோம் பிதாவே, ஆமென்.

19. காணிக்கைப் பாடல்

(திருமுழுக்கு பெற்றவர்களின் பெற்றோர் & ஞானப் பெற்றோர் நன்றிக் காணிக்கைப் படைக்கலாம்)

(காணிக்கை படைக்கும் போது, பெற்றோரின் கையில் திருமுழுக்கு சான்றிதழ் வழங்கலாம்)

20. நிறைவு ஜெபம்

21. ஆசீர்வாதம்
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதித்துக் காக்கக்கடவர்: கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணி, உங்கள் மேல் கிருபையாய் இருக்கக்கடவர்; கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள் மேல் பிரசன்ன மாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர். ஆமென். 

22. நிறைவு பாடல்

23. வழியனுப்புரை 

Acknowledgement 
The Book of Common Prayer 

குழந்தை ஞானஸ்நான ஆராதனை • Holy Baptism Worship Order • திருமுழுக்கு வழிபாடு CSI

Post a Comment

0 Comments