சாமுவேல் பாக்கியநாதனின் அர்ப்பணிப்பு
1903ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய மிஷனெரிச் சங்கம், இந்த கேள்விகளை மக்கள் முன் வைத்தது. குடும்ப சூழ்நிலைகள் காரணமாகப் பலர் முன்வரத் தயங்கிய நிலையில், மருதகுளம் பாக்கியநாதன் தன்னை மிஷனெரியாக அர்ப்பணித்துக் கொண்டார். இந்திய மிஷனெரிச் சங்கத்தின் முதல் மிஷனெரி இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
தோர்ணக்கல் கிராமத்தின் சூழல்
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள தோர்ணக்கல் என்ற பகுதி, சரியான பாதைகள் இல்லாத நிலப்பரப்பாக இருந்தது. அப்பகுதி சிறுத்தையும் புலியும் நடமாடிய அடர்ந்த காட்டுப் பகுதியாகக் காணப்பட்டது. கோடைக் காலங்களில் வெப்பம் மிக அதிகமாக இருந்ததால் பகலில் பயணம் செய்வது கடினமாக இருந்தது. அதேவேளையில் இரவில் பயணம் செய்தால் திருடர்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் அப்பகுதியில் சுவிசேஷம் அறிவிப்பதற்கு யார் முன்வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது. அங்கு சென்றது சாமுவேல் பாக்கியநாதன் அவர்கள் தான்.
நற்செய்திப் பணியும் ஞானஸ்நானமும்
தோர்ணக்கல்லுக்குச் சென்று பணியாற்றிய சாமுவேல் பாக்கியநாதனின் மூன்று ஆண்டு கால ஆட்சூழலில் 23 பெரியவர்களும் 33 குழந்தைகளும் ஞானஸ்நானம் பெற்றனர். உவைட்ஹெட் பேராயர் அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்கி வைத்தார். மேலும் 300க்கும் அதிகமானவர்கள் ஞானஸ்நானம் பெற ஆயத்த நிலையில் இருந்தனர்.
திருச்சபையின் விசுவாச அடித்தளம்
சாமுவேல் பாக்கியநாதன் திருச்சபையை உண்மையிலும் உத்தமத்திலும் வழிநடத்தினார். தமது திருச்சபையைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, "இது பலமான திருச்சபை. ஏனென்றால் கிறிஸ்தவர்களாக மாறுகிறவர்களுக்கு உலகப் பிரகாரமான நன்மை வழங்கும் சக்தி எங்களுக்கு இல்லை. கடனாகக் கொடுக்கும் வசதியும் இல்லை, மேல்நாட்டு மிஷனெரிகளைப் போன்று நாங்கள் உதவி செய்ய முடியாது. நாங்கள் செய்யக் கூடியது ஜெபம்தான். கிறிஸ்துவையே நம்பி வாழ அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம்" என்று கூறினார்.
தோர்ணக்கல்லின் வளர்ச்சி
சாமுவேல் பாக்கியநாதனின் வார்த்தைகளுக்கு ஏற்ப, மக்கள் விசுவாசத்தில் பெலப்பட்டுத் தங்கள் ஏற்றத்தாழ்வுகளை மறந்து கிறிஸ்துவில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். பிற்காலத்தில் பேராயர் V. S. அசரியாவால் தோர்ணக்கல் திருமண்டலம் மிகவும் சிறப்புப் பெற்றது. ஆனால், அந்த மகத்தான பணிக்கு முதன்முதலில் உறுதியான அடித்தளமிட்டவர் சாமுவேல் பாக்கியநாதனே ஆவார்.

0 Comments