கடாட்சபுரம் திருச்சபை மற்றும் ஆலய வரலாறு
1. ஆலயக் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம்
ஆரம்ப காலத்தில் சிறிய தொழுநோயாளிகள் கூடம் போலிருந்த வழிபாட்டு இடம், தேவ ஜனங்களின் பக்தியினாலும் தியாகத்தினாலும் படிப்படியாகப் பிரம்மாண்டமான ஆலயப் பேரமைப்பாக உருவெடுத்தது:
1832: சபை மக்கள் வழிபாட்டிற்காகச் சிறிய கோவிலை இடித்துச் சற்று பெரிய தேவாலயம் கட்டப்பட்டது.
1840-1841: ப்ளாக்மன் ஐயரால் அஸ்திவாரம் போடப்பட்டு, 1841 ஜூன் மாதத்தில் தேவசகாயம் ஐயரால் 81 அடி நீளமும் 36 அடி அகலமும் கொண்ட ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது 800 பேர் அமரக்கூடிய சுண்ணாம்பு மற்றும் கற்களால் ஆன அழகிய கட்டடமாகத் திகழ்ந்தது.
1851: சபை பெருக்கத்திற்கு ஏற்ப, ஆலயம் 1000 பேர் அமரும் வகையில் 90' 9" நீளத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
2. வானளாவிய கோபுரக் கட்டுமானம் (1995)
கனம் யோவான் ஐயரின் காலத்திலேயே ஆலயத்திற்குப் பிரம்மாண்ட கோபுரம் கட்டத் தீர்மானிக்கப்பட்டாலும், பல வரலாற்றுச் சூழல்களால் அது தள்ளிப்போனது. இருப்பினும், சபை மக்களின் அயர்வில்லாத முயற்சியால் கோபுரப் பணி மீண்டும் தொடங்கியது:
1987: அருட்திரு ராஜபாண்டியன் ஐயரின் முயற்சியால், நெல்லைப் பேராயர் அருட்பெருந்திரு ஜேசன் சி. தர்மராஜ் அவர்களால் ஆலயக் கோபுரத்திற்கு அஸ்திவாரம் இடப்பட்டது.
கட்டடப் பணியின் போது, ஆலயத்தின் ஆண்கள், பெண்கள், வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் இரவு நேரங்களில் வரிசையாக நின்று செங்கற்களைக் கடத்தியும் மணல் இழுத்தும் பணியாற்றினர். இக்கடமையுணர்வால் சுமார் ₹5,000,000 கூலிச் செலவு மிச்சப்படுத்தப்பட்டது.
1995 (பிரதிஷ்டை): அருட்திரு வேதநாயகம் ஐயர் மற்றும் சபை மூப்பர்களின் உழைப்பால் 17-05-1995 அன்று இக்கோபுரம் அர்ப்பணிக்கப்பட்டது.
கோபுரத்தின் சிறப்பம்சங்கள்:
மொத்த உயரம்: 199 அடி (7 தட்டுகள்).
அஸ்திவாரம்: 23 அடி நீளம், 23 அடி அகலம், 23 அடி ஆழம் கொண்ட உறுதியான கான்கிரீட் மற்றும் ஆற்று மணல் கட்டமைப்பு.
மகுடக்கல்லும் சிலுவையும்: கோபுர உச்சியில் 6 அடி உயரமும் 560 கிலோ எடையும் கொண்ட கல் மகுடம் நிறுவப்பட்டுள்ளது.
பாதுகாப்பு: இடியைத் தாங்கக்கூடிய 277 அடி நீளமுள்ள செம்புப் பட்டையும் பொருத்தப்பட்டுள்ளது.
3. தற்கால நவீனமயமாக்கல்
2002: ஆல்டரின் (பலிபீடம்) ஜன்னல்கள் பெரிதாக்கப்பட்டு வண்ணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டன; ஆல்டர் தரை பளிங்குக் கற்களால் (Marbles) அழகுபடுத்தப்பட்டது.
2006: சபை மக்களின் தாராள நன்கொடையினாலும் முயற்சியினாலும் ஆலயம் முழுவதுமே பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டு, தற்காலத்தில் தேவ மகிமை விளங்கும் சிறப்பான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது.
4. கல்வி மற்றும் சமூகப் பணிகள்
கடாட்சபுரம் திருச்சபை ஆன்மீக வளர்ச்சியோடு மட்டுமல்லாமல், பெண்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திலும் முன்னோடியாகத் திகழ்ந்தது:
பெண்கள் கல்வி:
1837-ல் ப்ளாக்மன் அம்மையாரால் சாராள் டக்கர் அம்மையாரின் பொருளுதவியோடு முதல் பெண்கள் பள்ளி திறக்கப்பட்டது.
ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி: கடாட்சபுரத்தின் இயற்கைப் எழிலால் கவரப்பட்ட மிஸ் கிபர்ண் அம்மையார், 1843-ல் முதல் பெண்கள் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளியை இங்கு தொடங்கினார் (இது பின்னரே பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டு தற்போதைய சாராள் டக்கர் கல்லூரியாக உருவெடுத்தது).
5. வரலாற்று சிறப்பு
முதல் தென்னிந்திய குரு:
ஆங்கிலேயத் திருச்சபையில் குருப்பட்டம் பெற்ற முதல் தென்னிந்தியரும் இரண்டாவது இந்தியருமான கனம் யோவான் தேவசகாயம் ஐயரவர்கள் நம்முடைய சபையிலே பணியாற்றியது நமக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.
"சுவிசேஷத்தைப் பிரசங்கியாதிருப்பவனுக்கு ஐயோ" என்று பரிசுத்த பவுல் கூறியுள்ளதைத் தன் வாழ்க்கைப் பிரமாணமாகக் கொண்டிருந்த தேவசகாயம் ஐயரவர்களின் ஊழியத்தினால் நம் சபையானது வளர்ந்து அநேகர் இரட்சகராம் கிறிஸ்துவைக் கண்டு கொள்ள ஏதுவாக இருந்தது.
தாய்மார் கூட்டம் & அரிசிக் காணிக்கை:
இந்தியத் திருச்சபைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த முதல் பெண்கள் ஐக்கிய சங்கம் (தாய்மார் கூட்டம்) 1850-ல் கடாட்சபுரத்தில்தான் உருவானது. அருளூர் உபதேசியாரின் மனைவி அரிசிக் காணிக்கை வழக்கத்திற்குத் தாயாக விளங்கியது போல, யோவான் தேவசகாயம் ஐயரின் மனைவி முத்தம்மாள் தாய்மார் கூட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
6. நற்சாட்சிகள்
இத்தகைய சிறப்பான கிறிஸ்தவ நன்னடத்தையும் ஆன்மீக முதிர்ச்சியும் கொண்ட இச்சபையை, மிஷனரி ரேனியஸ் ஐயர் "பிலிப்பி" என்றும், ஷாப்டர் ஐயர் "மிகுந்த மகிழ்ச்சியளித்த சபை" என்றும், டக்கர் ஐயர் "முதிர்ந்து முன்னேறிய சபை" என்றும் வர்ணித்துப் போற்றியுள்ளனர்.
நிறைவாக....
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்ற பொன்மொழிக்கு ஏற்ப, முன்னோடிகளின் ஆன்மீக அஸ்திவாரத்திலும், சபை மக்களின் உழைப்பிலும் கூடி எழுப்பப்பட்ட கடாட்சபுரம் தேவாலயம், இறைவனின் அளப்பரிய கிருபையையும், விசுவாசிகளின் ஐக்கியத்தையும் பறைசாற்றும் வரலாற்றுச் சான்றாக இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.

0 Comments